தமிழகத்தில் 15,000 குழந்தை தொழிலாளர்கள்: ஓராண்டில் மீட்டது 59 பேர் மட்டுமே

கோவை: தமிழகத்தில், குழந்தை தொழிலாளர்கள் 15 ஆயிரம் பேர் உள்ளனர். ஆனால், ஓராண்டில் மீட்டது வெறும் 59 பேர் மட்டுமே. இதுபற்றி ‘பென்சில்’ வெப்சைட்டில் புகார் குவிகிறது. தமிழகத்தில் கடந்த 1995ம் ஆண்டில் குழந்தை தொழிலாளர் மீட்பு திட்டம் துவங்கியது. முதல் ஆண்டில் 2,113 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். ஆண்டுதோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர் மீட்கப்பட்டு வந்தனர். திட்டம் துவங்கியது முதல் இதுவரை மாநில அளவில் 7,040 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் தமிழகம் முழுவதும் 2,19,732 தொழில் நிறுவனங்களில் நடந்த ஆய்வில் 59 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இதில் 5 நிறுவனங்கள் மீது மட்டுமே வழக்கு பதிவுசெய்யப்பட்டு, மொத்தமாக 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டில் 43 குழந்தை தொழிலாளர்களும், கடந்த 2016ம் ஆண்டில் 47 குழந்தை தொழிலாளர்களும், கடந்த 2015ம் ஆண்டில் 61 குழந்தை தொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர். முன்பு ஆயிரக்கணக்கில் மீட்கப்பட்டு வந்த குழந்தை தொழிலாளர்கள் தற்போது 100க்கும் குறைவாகவே மீட்கப்படுகின்றனர். தொழிலாளர் நலத்துறை, குழந்தை ெதாழில் ஒழிப்பு சங்கம், சைல்டு லைன், மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்படாமல் அலட்சியம் காட்டுவதே இதற்கு காரணம். இந்த அலட்சியம் காரணமாக, மாநில அளவில் குழந்தை தொழிலாளர் மீட்பு திட்டம் முடங்கி விட்டது.

குழந்தை தொழிலாளர் தொடர்பாக தகவல் தெரிவிக்க, மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி ‘பென்சில்’ என்ற வெப்சைட் உருவாக்கியது. குழந்தை ெதாழிலாளர்களை மீட்டு, குறிப்பாக 14 வயது வரையுள்ள சிறார்களை மீட்டு பள்ளியில் சேர்க்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதில், தேசிய அளவில் நடப்பாண்டில் இதுவரை 47,093 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த குழந்தைகள் பிச்சை எடுக்க, தொழில் நிறுவனங்களில் பணியாற்ற தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு வருவதாக ‘பென்சில்’ வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், ஓட்டல், பஞ்சாலை, தேயிலை தோட்டம், பட்டாசு நிறுவனம், செங்கல் சூளை, பனியன் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, திருப்பூர், சிவகாசி, விருதுநகர் பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக பணியாற்றுகின்றனர். ஆனால், நடப்பாண்டில் 59 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். குழந்தை தொழிலாளர் மீட்பில் காட்டும் அலட்சியம் தொடர்பாக ‘பென்சில்’ வெப்சைட்டில் புகார் குவிகிறது.

இதுபற்றி தமிழக குழந்தை தொழிலாளர் மீட்பு சங்கத்தினர் கூறியதாவது: பெற்றவர்களே, குறிப்பிட்ட தொகைக்கு குழந்தைகளை தொழில் நிறுவனங்களுக்கு ஆண்டு சம்பளத்திற்கு பேசி வேலைக்கு அனுப்புவது நடக்கிறது. பேக்கரி பொருள் தயாரிப்பு, ஒர்க்‌ஷாப், ஜவுளி நிறுவனங்கள், தங்க நகை பட்டறைகள் உள்பட பல்வேறு தொழில்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை தொழிலாளர்களை மீட்டு சிறப்பு பள்ளியில் சேர்த்தாலும், பெற்றோர் அலட்சியமாக இருப்பதால் குழந்தைகள் படிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்படுகிறது. மீட்கப்படும் 50 முதல் 60 சதவீத குழந்தை தொழிலாளர் மீண்டும் தொழிலுக்கு திரும்பும் நிலையிருக்கிறது. குடும்பத்தின் வறுமையை போக்கும் திட்டம் இருந்தால் மட்டுமே குழந்தைகளை கூலி வேலைக்கு செல்லாமல் தடுக்க முடியும். அத்துடன், பெற்றோர்களிடம் மனமாற்றம் ஏற்படவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வீட்டு வேலைகளில் சிறுமிகள்

தமிழகத்தில் பரவலாக, பங்களா வீடுகளில் பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க, குழந்தைகளை கவனிக்க, பெண் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்துகின்றனர். மூன்று வேளை உணவு, ஆண்டிற்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பேசி, புரோக்கர்கள் சிலர், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்துகின்றனர்.

குவியும் வடமாநில குழந்தைகள்

பீகார், ஒடிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஆந்திரா போன்ற மாநிலங்களை சேர்ந்த குழந்தை தொழிலாளர்கள் தமிழகத்தில் குவிந்துள்ளனர். இவர்களில் சிலர், ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட், பொதுஇடங்களில் பாட்டு பாடியும், சாட்டையால் அடித்துக்கொண்டும் பிச்சை எடுக்கின்றனர். குழந்தைகளை பிச்ைச எடுக்க பயன்படுத்தும் பெற்றோர், வாடகை பெற்றோர் மீது பெயரளவிற்கு மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: