கிராமப்புற இளைஞர்களுக்காக அறிவிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட தாலுகா விளையாட்டு மைதானங்கள்: விளையாட்டு வீரர்கள் அதிருப்தி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் திட்டமிடப்பட்ட தாலுகா அளவிலான விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படுவது கிடப்பில் போடப்பட்டுள்ளது விளையாட்டு வீரர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் விளையாட்டில் சாதிப்பவர்கள் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களது பிள்ளைகளே அதிகம் உள்ளனர். நடுத்தர மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த இளைஞர்கள் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அது கனவாகவே உள்ளது.கிராமப்புற மாணவ, மாணவிகள் விளையாட்டுகளில் பங்கேற்பது வெகுவாக குறைந்து வருகிறது. இதனை அதிகரிக்கவும், பல்வேறு விளையாட்டுக்களில் அவர்களின் திறன்களை மேம்படுத்தவும் தமிழகத்தில் ராஜிவ்காந்தி  விளையாட்டு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தாலுகாவுக்கு ஒரு விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மத்திய அரசு 75 சதவீதம் நிதியும், மாநில அரசு 25 சதவீதம் நிதியும் இந்த திட்டத்திற்கு ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சென்னை, சேலம், காஞ்சிபுரம், வேலுார் மாவட்டங்களில் தாலுகா விளையாட்டு மைதானங்கள் தொடங்கப்படுவதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக கடந்த ஆண்டே தாலுகா வாரியாக 5 ஏக்கரில் இடம் தேர்வு செய்து வழங்க தாசில்தார்களுக்கு மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டிருந்தனர்.

ஆனால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே இடம் தேர்வு செய்யும் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுவும் பெயரளவிலேயே நடந்து வருகிறது. தமிழகத்தில் முடங்கிப்போன இந்த தாலுகா வாரியான விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் திட்டத்தினால் கிராமப்புற இளைஞர்கள், விளையாட்டில் சாதிக்கும் கனவு கனவாகவே போய்கொண்டிருக்கிறது என்கின்றனர் விளையாட்டில் சாதனை படைத்தவர்கள். தமிழக அரசு தாலுகா வாரியான விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் திட்டத்தினை விரைவாக செயல்படுத்தி கிராமப்புற இளைஞர்களின் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கின்றனர். இதுகுறித்து விளையாட்டுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தாலுகா வாரியாக விளையாட்டு மைதானங்கள் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்து விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பி வைத்துள்ளோம். இடம் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் நிதி ஒதுக்கீடு செய்தால் அதற்கான பணிகள் தொடங்கும்’ என்கின்றனர்.

அரசு பணிகளில் விளையாட்டு வீரர்கள்

தமிழகத்தில் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்து பல்வேறு அரசு பதவிகளில் உள்ளனர். சிலர் உயர் பதவியிலும் உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 270 பேர் வரை விளையாட்டில் சாதித்து அரசு பணிகளில் உள்ளனர். இப்படி இளைஞர்களுக்கு அரசு பணிகள் கிடைக்கும் வாய்பையும், உடல்வலிமையும் வழங்குவதில் முக்கிய ஒன்றான விளையாட்டை வளர்ப்பதற்கு தாலுகா வாரியாக விளையாட்டு மைதானங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: