சிவசைலம் சிவகைலாசநாதர் கோயிலில் உயிர் பெற்றெழுந்த நந்திகேசுவரர்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் ஆழ்வார்குறிச்சியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிவகைலாசநாதர் கோயில் பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டது. மேற்கு நோக்கிய இந்த சிவாலயத்தில் கங்கை நதியே கடனையாறாக உற்பத்தியாகி பாய்ந்து செல்வதாக நம்பப்படுகிறது. ஜடாமுடியுடன் நான்கு புறமிருந்தும் தரிசிக்கும்படி சுயம்புலிங்கம் அமைந்துள்ளது. பலவகை சிறப்புகளை கொண்ட இத்திருத்தலம் பற்றி பாடப்பட்ட இலக்கியங்களில் நெற்குன்றை மாநகர் நிரப்ப முதலியாரால் பாடப்பெற்ற சிவசைல தலப்புராணம் மிகவும் சிறப்பானதாகும். இக்கோயிலின் தொன்மை சிறப்புகளை கோயில் வடபுறச்சுவர்களிலும் கோபுரவாசல் வடபுறத்திலும் உள்ள கல்வெட்டுகள் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது.

ஆழ்வார்குறிச்சியில் உள்ள ஆவுடையம்மான் கோயில், வன்னியப்பர் கோயிலில்களில் உள்ள கல்வெட்டுகளிலும் இந்த கோயில் குறித்த தொன்மை சிறப்புகள் இடம்பெற்றுள்ளன.இக்கோயிலில் அன்னை பரமகல்யாணி நான்கு கரங்களுடன் சுயம்புவாக தோன்றி காட்சி அருள்கிறார். சிற்ப கலையின் தலைவன் மயனால் உருவாக்கப்பட்டதாக கருதி நந்திகேஸ்வரர் வழிபடபடுகிறார்.தாமிபரணி நதிக்கரையில் உள்ள பஞ் குரோசத் தலங்களான பாபநாசம், ஆர்வார்குறிச்சி, கடையம், திருப்புடைமருதூரை போன்று சிவலைமும் ஒன்றாகும். இக்கோயிலில் அமைந்துள்ள நந்திகேசுவரர் தனி பெருமை மிக்கதாகும்.

தேவலோக தலைவன் இந்திரனுக்கு ஒரு முறை சிவ சாபம் ஏற்பட்டது. சாப விமோசனம் அடைய என்ன வழி என்று இறைவனை கேட்க, சுயம்புவாக யாம் மேற்கு நோக்கி இருக்கும் ஆலயத்தில் எக்காலமும் ருக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை முழங்க ஒரு நந்திகேசுவரரை ஏற்படுத்து என கட்டளையிடுகிறார். அதன்படி தேவேந்திரன் நந்திகேசுவரரை அமைக்கும் பணியை நிறைவேற்றினார்.பிரம்மதேவனின் குமாரனும் சிற்ப கலையின் தலைவனுமான மயன் சிவசைலத்திற்கு வந்து சிற்ப சாஸ்திரங்கள் முழுமையும் பெற்ற ஒரு நந்திகேசுவரரை நிர்மாணித்தார். சாஸ்திரப்படி முழுமையும் பெற்றதால் கல் நந்தி உயிர்பெற்று எழுந்து விடுகிறார். அப்போது மயன் தன் தலைவன் இந்திரனை நினைத்து உளியால் நந்திகேசுவரின் முதுகில் அழுத்தி அவரை அப்படியே இருக்கும்படி செய்துவிட்டார். இக்கோயிலில் இன்றும் நந்திகேசுவரர் எழுந்திருக்கும் தோற்றத்திலேயே காணப்படுகிறார். மயன் உளியால் அழுத்திய தழும்பையும் இன்னும் நம்மால் காணமுடிகிறது.தினமும் 6 கால பூஜைகள் நடக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கடைசியில் தொடங்கி சித்திரை விசுவுடன் முடியும் வகையில் 12 நாட்கள் உற்சவமும் தேர்திருவிழாவும் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சியில் நடைபெறுகிறது.

இயற்கை எழில்சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு செல்வோர் தங்குவதற்கு அம்பாசமுத்திரம், தென்காசி, கல்லிடைக்குறிச்சி ஆகிய ஊர்களில் தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: