மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை விவகாரம்: ஊழல் செய்து பணம் சேர்க்க துணை வேந்தர் துடிப்பு: ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை: ‘ஊழல் செய்து பணம் சேர்க்க, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை துணை வேந்தர் துடிக்கிறார்’ என, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் 42 பேர் கடந்த 2008ம் ஆண்டு முறையான தேர்வுகளின் மூலம் நியமிக்கப்பட்டனர். 10 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வந்தனர். அவர்கள்  பணிநிலைப்புச் செய்ய வேண் டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், அவர்கள் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக பல்கலைக் கழக நிர்வாகம் கூறியுள்ள காரணம் அபத்தமானது மட்டுமின்றி, ஏற்க முடியாதது. முறையாக நேர்காணல் நடத்தப்பட்டு, கல்வித் தகுதி சரிபார்க்கப்பட்ட பிறகுதான் அனைவரும் பணியமர்த்தப்பட்டனர்.

அதுமட்டுமின்றி, கடந்த 10 ஆண்டுகளாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை எந்த குறையும் இல்லாமல் செய்து வந்துள்ளனர். அவ்வாறு இருக்கும் போது, திடீரென அவர்களுக்கு தகுதி இல்லை என்று கூறி பணிநீக்கம் செய்வது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். இதுகுறித்து நிர்வாகம் கூறியுள்ள காரணங்கள் எதுவும் உண்மையல்ல. மாறாக அவர்களுக்கு பதில் புதிய பணியாளர்களை நியமித்தால் ஊழல் செய்து பணம் சேர்க்கலாம் என்ற துணைவேந்தரின் துடிப்பு தான் காரணம் என்று கூறப்படுகிறது. துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சில மாதங்களிலேயே, ஆசிரியர்கள் நியமனத்தை தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி, 2016 நவம்பரில் 8 பேராசிரியர்கள், 17 இணைப் பேராசிரியர்கள், 29 உதவிப் பேராசிரியர்கள் என 54 பணியிடங்கள் நிரப்பப்பட்டன.

இதற்காக மட்டும் 22 கோடி கையூட்டு வசூலிக்கப்பட்டதாகவும், இப்போதும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் பெருமளவில் ஊழல் செய்ய பேரம் பேசப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஊழல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பல்கலைக்கழகங்களில் ஊழலை ஒழிப்பது தான் தமது நோக்கம் என்று கூறி வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இந்த விஷயத்தில் தலையிட்டு, தற்காலிக பணியாளர்கள் பணிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். அவர்களை பணி நிலைப்பு செய்து, அதன்பின் மீதமுள்ள இடங்களை மட்டும் நேர்மையான முறையில் நிரப்ப ஆளுனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: