அடுத்தடுத்து 2 ரயில்கள் மோதி 60 பேர் பலி: பஞ்சாப் தசரா விழாவில் பட்டாசு வெடிப்பதை பார்த்தபோது விபரீதம்

* இரு தண்டவாளங்களில் சிதறி ஓடிய பொதுமக்களை சிதைத்த ெகாடூரம்

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தசரா விழாவில், வாண வேடிக்கையை தண்டவாளம் அருகே நின்று  பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது,  அடுத்தடுத்த தண்டவாளங்களில் பாய்ந்து வந்த இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதியது; இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 60க்கும்  மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100 பேர் காயமடைந்தனர். வடமாநிலங்களில் தசரா பண்டிகை நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.  தசரா பண்டிகையின் போது ராவணன் உருவ பொம்மையை எரிப்பது முக்கிய நிகழ்வாகும். இதையடுத்து, பஞ்சாபிலும் ராவணன் பொம்மையை எரிக்கும் நிகழ்ச்சிக்கு பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ஜோதா பதக் என்கிற இடத்தில் வானுயரம் நிறுத்தி வைக்கப்பட்ட ராவணன் உருவ பொம்மையை நேற்று மாலை எரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மாலை சுமார் 7 மணியளவில் உருவபொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்தசமயத்தில் ராவணன் பொம்மையின் மீது  சுற்றப்பட்ட பட்டாசுகள் படபடவென வெடித்து சிதறி பொம்மை கொழுந்துவிட்டு எரிய  தொடங்கியது. பட்டாசு வெடிக்கும் சத்தம் விண்ணை பிளக்கும் அளவுக்கு  கேட்டது. இதனை தண்டவாளங்களிலும், அதன் அருகேயும் நின்று  வாண வேடிக்கையை சுமார் 700க்கும் மேற்பட்டவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.  திடீரென தீயில் எரிந்து கொண்டிருந்த  ராவணன் உருவ மொம்மை சாய்ந்தது. இதனால் வேடிக்கை பார்த்த மக்கள் பீதியில்  தண்டவாளங்ககளில் சிதறி ஓடினர்.

அப்போது அந்த வழியே அமிர்தசரசிலிருந்து ஜலந்தர் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. எதிர் திசையில் இன்னொரு தண்டவாளத்தில், மற்றொரு ரயிலும் வந்து கொண்டிருந்தது.  பட்டாசு சத்தத்தில் ரயில் வரும் சத்தமும் மக்களுக்கு கேட்கவில்லை. அதிவேகமாக வந்த இரு ரயில்களும் தண்டவாளத்தின் குறுக்கே ஓடியவர்களை கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி வீசியது. இந்த விபத்தில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 60 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர்  படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இரவு நேரம் என்பதால் உடல்களை தேடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பலரது உடல்கள் ரயிலின் கீழ் பகுதியில் சிக்கியுள்ளது. அவற்றை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

5 லட்சம் நிவாரணம்: விபத்து பற்றி அறிந்த பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் தனது அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், `அமிர்தசரசில் நிகழ்ந்த விபத்து மிகுந்த வேதனையளிக்கிறது. இந்த நேரத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் காயம் அடைந்தவர்களை அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹5 லட்சம் அரசு நிவாரணமாக வழங்குகிறது. மேலும் காயம் அடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து மீட்பு பணியில் ஈடுபட வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

மோடி உருக்கம்: ரயில் மோதி பலியான சம்பவத்தில், இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலும், வேதனையும் தெரிவித்து உள்ளார். “படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் நலமடைய பிரார்த்திக்கிறேன்.  இந்த சம்பவம் என் நெஞ்சை அதிர வைத்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தேவைப்படும் உதவிகளை அதிகாரிகள் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத், இந்த ரயில் விபத்து பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: ரயில் விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியான சம்பவத்தின் வலியை வார்த்தைகளால் வார்த்தைகளால் சொல்ல முடியாது. இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தோரின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரஙகலை தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசு பஞ்சாப்புக்கு இந்த நேரத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்  காந்தி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,  “பஞ்சாப் மாநில அரசு மற்றும் கட்சித் தொண்டர்கள் உடனடியாக சம்பவ  இடத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். காங்கிரஸ் ஏற்பாடு செய்த விழா: ரயில்  விபத்துக்கு காரணமான இந்த விழாவை காங்கிரஸ் கட்சி சார்பில்  நடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், பஞ்சாப் மாநில அமைச்சரும்,  முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி இந்த விழாவில்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள், ரயில்கள் மெதுவாக வருவதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை என நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: