அமிர்தசரஸ் ரயில் விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி அறிவிப்பு

அமிர்தசரஸ்; பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே திருவிழாவிற்காக கூடியிருந்த மக்கள் மீது ரயில் மோதிய விபத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கான அனைத்து செலவுகளையும் மாநில அரசே ஏற்று கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த விபத்திற்கு பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து மிகவும் கவலையளிப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைந்து தேவையான நடவடிக்கைகளை செய்து தர வேண்டும் என பஞ்சாப் அரசுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

ஜோடா பாதாக் என்ற இடத்தில் தசரா திருவிழா நடந்து வந்த இடத்திற்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த சிலர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தசரா விழாவை காண வந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி தண்டவாளத்தின் அருகே நின்றுள்ளனர். ராமலீலா விழாவின் போது பட்டாசு அதிகளவில் வெடித்துள்ளன. அப்போது எரிந்து கொண்டிருந்த ராவணன் உருவபொம்மை முன்பக்கம் சாய்ந்தது. உருவபொம்மை முன்பக்கமாக சாய்ந்ததால் அலறிய பொதுமக்கள் நகர்ந்து பின்னால் இருந்த தண்டவாளத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் ரயில் வந்துள்ளத. பட்டாசுகள் வெடித்தபடி இருந்ததால் ரயில் வரும் சத்தம் கூட்டத்தினருக்கு கேட்கவில்லை.   கண்ணிமைக்கும் நேரத்தில் கூட்டத்தினரின் மீது ரயில் பயங்கரமாக மோதியது. இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: