பைனலில் மும்பை

பெங்களூரு: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் முதல் அரை இறுதியில், 60 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்திய மும்பை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஐதராபாத் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன் குவித்தது. அபாரமாக விளையாடிய ரோகித் ராயுடு ஆட்டமிழக்காமல் 121 ரன் (132 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசிமார். சந்தீப் 29, மெகதி ஹாசன் 23, பண்டாரி 19 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். மும்பை பந்துவீச்சில் தேஷ்பாண்டே 3, டயஸ் 2, குல்கர்னி, துபே, முலானி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய மும்பை அணி 25 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.

தொடக்க வீரர்கள் ரோகித் ஷர்மா 17, பிரித்வி ஷா 61 ரன் (44 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 55 ரன் (53 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), அஹிங்க்யா ரகானே 17 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேற்கொண்டு ஆட்டம் தொடர முடியாத நிலையில், மும்பை அணி 60 ரன் வித்தியாசத்தில் (விஜேடி முறை) வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதே மைதானத்தில் இன்று காலை 9.00 மணிக்கு தொடங்கும் 2வது அரை இறுதியில் டெல்லி - ஜார்க்கண்ட் அணிகள் மோதுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: