அரசு வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு

சென்னை: அரசு வேலை வாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.  விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அரசின் வேலைவாய்ப்பில் 2 சதவீதம் வரை உள் ஒதுக்கீடு அறிவித்ததையொட்டி, முதல்வருக்கு விளையாட்டு சங்கங்களின் சார்பில் பாராட்டு விழா மற்றும் தேசிய பள்ளிக்குழும விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு காசோலை வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நேற்று நடைபெற்றது.  விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இளைஞர்களுக்கு படிப்பும், விளையாட்டும் இரண்டு கண்களாகும். இதன் மூலம் அறிவுசார்ந்த,  ஆரோக்கியமான இளைய சமுதாயம் உருவாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த  இளைஞர்கள், தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டியிடும் வகையில் தங்கள் திறமைகளை உயர்த்திக் கொள்ள ஏதுவாக  தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொடுத்து வருகிறது.  

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியிடங்கள் நிரப்புவதில்   விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற குறைபாடு நிலவுகிறது. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட பதவிகளில் தகுதியின் அடிப்படையில் 2 சதவீதம் வரை உள் ஒதுக்கீடாக விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு  வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று எனது சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தேன். இங்கே பேசியவர்கள் பல கோரிக்கைகளை வைத்தார்கள். அதை பரிசீலித்து, 2 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு பதிலாக 3 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை இந்த தருணத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: