ரிசர்வ் வங்கி, சிபிஐயிடம் 100 வங்கி மோசடி பற்றிய ஆய்வறிக்கை ஒப்படைப்பு

புதுடெல்லி: டாப் 100 வங்கி மோசடி குறித்து மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் நடத்திய ஆய்வறிக்கை ரிசர்வ் வங்கி, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. கிங்பிஷர் அதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து ரூ9,000 கோடிக்கு மேல் நிலுவையில் உள்ளது. இவர் இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். இதுபோல் வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து விட்டு தப்பிச் சென்று வி்டடார்.  வங்கி மோசடிகளால் வங்கிகளின் நிதி நிலை மோசமாகி வருகிறது. வங்கிகளில் கடன் பெறும் தொழிலதிபர்கள் நாட்டை விட்டு தப்பிச்சென்று விடுவதால் கடனை வங்கிகளால் வசூலிக்க முடியவில்லை. இதுபோன்று பல தொழிலதிபர்கள், நிறுவனங்கள் ஏமாற்றியுள்ளன.  இவ்வாறு நடைபெற்ற டாப் 100 வங்கி மோசடி குறித்து மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் ஆய்வு செய்தது. நவரத்தினம், நகைகள், உற்பத்தி மற்றும் தொழிற்சாலை,

வேளாண்மை, விமானப்போக்குவரத்து, சேவை மற்றும் திட்டம், காசோலை தள்ளுபடி, வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம், ஏற்றுமதி வணிகம் உள்ளிட்ட 13 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவரும், விஜிலென்ஸ் ஆணையாளருமான டி.எம்.பாஷின் கூறியதாவது: 100 வங்கி மோசடி குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்ட விவரங்கள் நிதித்துறை, ரிசர்வ் வங்கி, அமலாக்க இயக்ககம், மற்றும் சிபிஐ ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்று வங்கிகளில் பண மோசடிகள் நடப்பதை தடுக்கும் விதமாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஊழல் தடுப்பு ஆணையம் கொடுத்துள்ள இந்த ஆய்வறிக்கை தங்களுக்கு மிக உதவியாக இருக்கும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மோசடி நடைபெறாமல் தப்பிக்கும் வழி குறித்தும் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: