பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு வங்கிகளில் டெபாசிட் செய்த 10,000 பேருக்கு நோட்டீஸ்: பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை

புதுடெல்லி: பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு வங்கிகளில் பணம் டெபாசிட் செய்த 10,000 பேருக்கு வருவாய்த்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பினாமி பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருப்பு பணத்ைத மீட்கவும் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்கவும் பழைய ரூ500,  ரூ1,000 நோட்டு செல்லாது என கடந்த 2016 நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதன்பிறகு அளிக்கப்பட்ட 50 நாள் அவகாசத்தில் பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்குகளில் மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட பணத்தை டெபாசிட் செய்தனர். சந்தேகத்திற்கிடமாக டெபாசிட் செய்தவர்களிடம் விளக்கம் கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதுபோல், வருவாய்த்துறையும் 10,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு செல்லாத நோட்டு டெபாசிட் செய்தவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிய தகவல்கள், பிற துறைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் அந்தந்த துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கின்றன. இந்த வகையில் வருவாய் துறையும் தனது அதிரடியை துவக்கியுள்ளது. வங்கிகளில் பணம் டெபாசிட் மீது பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தரவுகளை ஆய்வு செய்த பிறகு முதல் கட்டமாக 10,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதுபோல் மேலும் சிலருக்கும் நோட்டீஸ்கள் அனுப்பப்படும். வரி ஏய்ப்பு செய்து தப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். வங்கிக்கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர், அவரது கணக்கில் டெபாசிட் செய்தவர் இருவருமே தண்டனைக்கு உரியவர்கள் என்றார்.

* பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு வங்கிகளில் டெபாசிட் செய்தவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

* வருமான வரியை தொடர்ந்து வருவாய்த்துறையும் தற்போது விசாரணையில் இறங்கியுள்ளது.

* முதல் கட்டமாக 10,000 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

* பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: