விற்பனையை அதிகரிக்க சலுகைகளை அள்ளித்தரும் கார் நிறுவனங்கள்: ரூ50,000 முதல் ரூ14 லட்சம் வரை தள்ளுபடி

புதுடெல்லி: விற்பனையை உயர்த்தும் வகையில் கார் நிறுவனங்கள் அதிரடி தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளன. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கார் விற்பனை சரிவடைந்து வருகிறது. கடந்த மாதம் பயணிகள் கார் விற்பனை 5.57 சதவீதம் சரிவடைந்தது. இதனால் வாகன நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை அள்ளித்தந்துள்ளன. மாருதி சுசூகி, ஹூண்டாய், மகிந்திரா, போர்ட், டாடா மோட்டார்ஸ் மட்டுமின்றி பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் கார் நிறுவனங்களும் தள்ளுபடிகளை வழங்க தொடங்கியுள்ளன. குறைந்த பட்சம் ரூ50,000 முதல் ரூ14 லட்சம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஆட்டோமொபைல் துறை 7 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்தது. இருப்பினும், பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு வாகன விற்பனையில் குறிப்பிடத்தக்க பின்னடைவை ஏற்படுத்தி விட்டன என ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 கார் நிறுவனங்களின் மாருதி பலேனோ ரூ25,000, டொயோட்டா யாரிஸ், ஹூண்டாய் எலைட் ஐ20, மாருதி ஆல்டோ கே10 ஆகியவை தலா ரூ50,000, டாடா நெக்சான் ரூ57,000, ஹோண்டா சிட்டி ரூ62,000, மகிந்திரா ஸ்கார்பியோ ரூ70,000, ஹூண்டாய் கிராண்ட் ஐ10, மாருதி வேகன் ஆர் தலா ரூ75,000, ரெடால்ட் டஸ்டர் ரூ1 லட்சம், மெர்சிடிஸ் சிஎல்ஏ ரூ5.5 லட்சம், மெர்சிடிஸ் ஜிஎல்சி பெட்ரோல் ரூ6 லட்சம், ஆடி ஏ6 ரூ12.5 லட்சம், பிஎம்டபிள்யூ 7சீரிஸ் ரூ14 லட்சம் என தள்ளுபடிகளை வாரி வழங்கியுள்ளன.

இவற்றில் ரொக்க தள்ளுபடி மட்டுமின்றி, காப்பீடு தொகை ஏற்பு, நீட்டிக்கப்பட்ட வாரண்டி, குறைந்த வட்டியில் கடன், கார்பொரேட் தள்ளுபடிகள் ஆகியவையும் அடங்கும். ஆட்டோமொபைல் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த ஆண்டு முடிய இன்னும் 2 மாதம்தான் இருக்கிறது. அதற்குள் கார்களை விற்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்துக்கு அடுத்த பிரச்னை இது. 2018ம் ஆண்டில் தயாரித்த வாகனத்தை 2019 புத்தாண்டுக்கு பிறகு யாரும் வாங்க விரும்புவில்லை. எனவே இந்த சவாலையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றார்.

* பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தால் வாகன விற்பனை குறைந்துள்ளது.

* பண்டிகை சீசன் வந்தும் மந்த

நிலை நீடிப்பதால் கார் உற்பத்தியாளர்கள் தள்ளுபடிகளை வாரி அளித்துள்ளனர்.

* குறைந்த பட்சம் ரூ50,000

முதல் ரூ14 லட்சம் வரை

தள்ளுபடி உண்டு.

* தள்ளுபடி சலுகையில் காப்பீடு செலவுகள் ஏற்பு, நீட்டிக்கப்பட்ட வாரண்டி, குறைந்த வட்டியில் கடன் ஆகியவையும் அடங்கும்.

* 2018ம் ஆண்டு முடிய 2 மாதங்களே உள்ளதால் வாகனங்களை விரைவாக விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: