பொதிகைக்கு பெருமை சேர்த்த ஆதீனம்

திருவாவடுதுறை ஆதினத்தின் 23-வது பட்டமாக பதவியேற்றவர் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சரிய சுவாமிகள். இவர் 1983 முதல் திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானமாக அருளாட்சி நடத்தி வருகிறார். தாமிரபரணியில் பொதிகை மலை சாரலில் விக்கிரமசிங்க புரத்தில் பிறந்தவர். எளிய குடும்பத்தில் விரோதி ஆண்டு ஐப்பசி மாதம் 29வது நாள் பூர்ண நட்சத்திரத்தில் 15.11.1949ல் பிறந்தவர். இவர் இயற்பெயர் சிவசுப்பிரமணியன். சிறுவயதிலேயே ஆன்மீக வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார். அறநெறி சைவ நெறி சிறிதும் தவறாமல் மக்களுக்கு தொண்டாற்றி வந்தார். இவரது பெற்றோர் கோமதிநாய கபிள்ளை - கோமதி அம்மாள் ஆவார்கள். இவர்களுக்கு இரண்டாவது மகனாக சிவசுப்பிரமணியன் பிறந்தார்.

விக்கிரமசிங்கபுரத்தில் பிறந்த முக்காளிங்கர் என்ற சிவஞான சுவாமிகள் திருவாவடுதுறை ஆதீனத்தில் சேர்ந்து சைவத்தையும், தமிழையும் வளர்த்ததுடன் இறுதிவரை துறவியாக வாழ்ந்தார். இவரை முன்மாதிரியாக கொண்டு சிறுவனான சிவசுப்பிரமணியன் திருவாவடுதுறை ஆதீனத்தில் சேர்ந்தார். ஆனாலும் பள்ளி இறுதி கல்வி வரை பயின்று கூட்டுறவு துறை ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற்று மதுரை கோட்ஸ் ஹார்வி மில் கூட்டுறவு பண்டக சாலையில் சிறிது காலம் பணியாற்றினார். அப்போதும் கூட துறவி ஆசை அவரை பின் தொடர்ந்தது. கணபதி மந்திரம் என்ற வேலாயுத சுவாமி மடத்தில் கணபதி மூல மந்திர உபதேசியராக இருந்து கணபதி பூஜையை நடத்தினார்.

பின்பு மாசி மாதம் சிவராத்திரி சமயத்தில் ரிஷிகேத்திரத்தில் இருந்த துறவி ஒருவரிடம் கணபதி, காயத்திரி மந்திரத்தை உபதேசமாகப் பெற்று ஜெபித்து வந்தார். நெல்லையைச் சேர்ந்த குருக்கள் ஒருவரிடம் பஞ்சாட்சர உபதேசமும் பெற்றார். வித்தியானந்த சுவாமிகள் சொரூபானந்த சுவாமிகள் ஆகியோரிடம் துறவின் பால் தமக்கு இருந்த ஈடுபாட்டைச் சிவசுப்பிரமணியன் குறிப்பிட்டார். திருவாவடுதுறை ஆதீனத்தின் அடியவர்களில் ஒருவராக இருக்க விரும்பி சிவசுப்பிரமணியன் திருவாவடுதுறை ஆதீனத்திற்குப் புறப்பட்டார். முதலில் சிதம்பரம் வந்து நடராசரை வழிபட்டு விட்டு, திருவாவடுதுறை ஆதீனத்தை அடைந்தார்.

குருவருளும் திருவருளும் வாய்க்கவே அப்போது குரு பீடத்தில் இருந்த 22வது குருமகான் அம்பலவாண தேசிகரின் அருட்கண் நோக்கத்தில் 21.02.1980ல் மந்திர காஷாயமும், 17.05.1980ல் நிர்வாண தீட்சையும் பெற்று சிவசுப்பிரமணியன் சுப்பிரமணியத் தம்பிரானாக மாறினார். பிறகு பெரியபூசை சுப்பிரமணிய தம்பிரானாக மாறினார். இவருடைய அதிபக்குவ நிலையை உணர்ந்த அம்பலவாண தேசிகர் 06.08.1980ல் ஆதீன இளவரசு பட்டத்தில் சுவாமிகளை நியமித்து ஆதீன நிர்வாகம் மற்றும் பூஜை முதலிய பொறுப்பை கொடுத்தார்கள். அதனை அவர் திறம்பெறச் செய்தார். இளவரசர் ஆனபின் இவருடைய திருநாமம் சிவப்பிரகாச தேசிகர் என்று அழைக்கப்பட்டது.

குருமகான் கருத்தறிந்து இவர் மடத்தின் நிர்வாகத்தை நடத்தி வந்த போது 07.04.1983இல் அம்பலவாண தேசிகர் சுவாமிகள் சிவபரிபூரணம் ஆனார்கள். ஆகவே சிவப்பிரகாச தேசிகர் ஆதீனகர்த்தாவானார். அம்பலவாண தேசிகரின் குரு பூசையைப் பத்து நாள்கள் சிறப்பாக செய்த சிவப்பிரகாச தேசிகர் 07.04.1983 முதல் குருமகா சன்னிதானமாக ஞானபீடத்தில் எழுந்தருளினார். சிவப்பிரகாச தேசிகர் கடுஞ்சொல் அற்றவராகவும், கல்விமான்களைப் போற்றுபவராகவும், எல்லாவற்றிற்கும் மேலாக மனித நேயம் மிக்கவராகவும் விளங்கினார். வசதி மிக்கவர் வரும் போது எப்படி இன்முகத்துடன் வரவேற்று ஆசி வழங்குவாரோ அதே போல் தான் ஏழைகள் வரும்போதும் வரவேற்று ஆசி வழங்குவதுடன் சிறு சிறு நூல்களையோ, அல்லது கனிகளையோ கொடுத்து அனுப்பிவைக்கும் பழக்கத்தை சுவாமிகள் பின்பற்றி வந்தார்.

திருவாவடுதுறை ஆதீனத்தில் முன்பெல்லாம் பல்லாக்கு தூக்கும் பழக்கம் இருந்தது. 23-வது குருமகா சன்னிதானமான சிவபிரகாச சுவாமிகள் காலத்தில் தான் பல்லக்கிற்கு பதிலாக  கார் மூலம் செல்லும் வழக்கம் தொடங்கியது. ஸ்ரீல ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் திருவாவாடுதுறை மடத்தினை போலவே, ஏனைய மடங்களின் குருமகான்களைப் பெரிதும் மதிப்பார். காஞ்சி முனிவர் என அழைக்கப்பட்ட மகாபெரியவர் என்ற சங்கராச்சாரியார் குறித்துச் சுவாமிகள் மிகவும் பெருமைபடுவார்கள். ஒரு சமயம் காஞ்சி முனிவர் மௌன விரதம் இருந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு இக்கட்டான சம்பவம் நடந்தது. அதில் காஞ்சி முனிவரின் மௌன விரதம் கலைந்தது. அது என்ன சம்பவம்?

(நதி வற்றாமல் ஓடும்)

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: