ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல் ஆதிக்கத்தை தொடர இந்தியா உற்சாகம்

துபாய்: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் சூப்பர் 4 சுற்று லீக் ஆட்டத்தில், இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த 15ம் தேதி தொடங்கிய இந்த தொடரில்  மொத்தம் 6 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. இந்த சுற்றின் முடிவில் இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் சூப்பர் 4  சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்த 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை ரவுண்ட் ராபின் லீக் ஆட்டத்தில் மோதி வருகின்றன. இதில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, அடுத்து  பாகிஸ்தானுக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது. 238 ரன் இலக்கை துரத்திய இந்தியா, தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் ஷர்மா - ஷிகர் தவான் ஜோடியின் அபார  ஆட்டத்தால் 39.3 ஓவரிலேயே பாகிஸ்தானை மிக எளிதாக வீழ்த்தியது.

தவான் 114 ரன் (100 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். ரோகித் 111 ரன் (119 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), ராயுடு 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரோகித் ஒருநாள் போட்டிகளில் 7000 ரன்  மைல்கல்லை கடந்து அசத்தினார்.  சூப்பர் 4 சுற்றில் தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்த இந்தியா பைனலுக்கு முன்னேறுவதை உறுதி செய்தது. மற்றொரு போட்டியில் வங்கதேசத்துடன் மோதிய ஆப்கானிஸ்தான்  அணி 259 ரன் என்ற கடினமான இலக்கை துரத்தியது. கடைசி பந்து வரை விறுவிறுப்பாக அமைந்த இந்த போட்டியில், ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன் எடுத்து 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத்  தழுவியது. ஏற்கனவே பாகிஸ்தான் அணியிடம் தோற்றிருந்ததால், இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை அந்த அணி பறிகொடுத்தது.

இந்த நிலையில், இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்திய அணிக்கு இது பயிற்சி ஆட்டமாக அமைந்துள்ளதால் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இந்திய அணி ஆதிக்கத்தை தொடர உற்சாகமாகக் களமிறங்கும் நிலையில், ஆப்கானிஸ்தான் அணி ஆறுதல் வெற்றிக்காக கடுமையாகப் போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: