செல்போன் திருடியதாக ஏற்பட்ட சந்தேகத்தால் சிறுவனை கொன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: செல்போன் திருடியதாக ஏற்பட்ட சந்தேக அடிப்படையில் கரூரில் சிறுவனை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.இதுகுறித்து திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கரூர் மாவட்டம் உப்பிடமங்களத்தை அடுத்த அல்லாலிகவுண்டனூரைச் சேர்ந்த 15 வயது சிறுவனை, ஒரு கிராமமே சேர்ந்து அடித்துக் கொன்றிருப்பது  பேரதிர்ச்சியளிக்கிறது. செல்போன் திருடியதாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் கும்பலாக ஒன்று திரண்டு அந்தச் சிறுவனின் வீடு தேடிச் சென்று  கட்டி வைத்து அடித்து உதைத்ததில், அந்த இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தான் என்ற செய்தி நெஞ்சத்தை மேலும் பதற வைக்கிறது.வருங்காலத் தலைமுறையின் மிக முக்கியமான அங்கமாக விளங்கும் சிறுவர்கள், எங்காவது ஒரு சில இடங்களில் ஏதாவதொரு சூழ்நிலையில் குற்றச்  செயல்களில் ஈடுபடும்போது, அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களை சீர்திருத்தப் பள்ளிகளில் தங்க வைத்து, திருத்துவதற்கு உரிய  வழிமுறைகளைச் சட்டம் அனுமதிக்கிறதே தவிர, இதுபோன்று அடித்துக் கொல்லும் கொடூரமான வன்முறைக்கு எந்த சட்டமும் அனுமதி கொடுக்கவில்லை.  விபத்தாகவோ, வறுமையின் கோரப்பிடியில் சிக்கியதாலோ ஒரு சிறுவன் வழி தவறிச் சென்று விட்டால், கிராமமே சேர்ந்து அந்தச் சிறுவனை அடித்துக் கொன்று  விடலாம் என்ற கொலை மனப்பான்மை ஏற்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது.

இதுபோன்ற மனிதநேயம் சிறிதும் இல்லாத, கோரமான மன நிலையை சமுதாயத்தில் நிச்சயம் எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது மட்டுமின்றி,  இதுபோன்று, சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு நேரடியாக நடவடிக்கைகளில் அவசரம் அவசரமாகக் கொலை வெறியோடு குதிப்பதை  எக்காரணம் கொண்டும் நாகரிக சமுதாயத்தில் இருக்கும் யாரும் அனுமதிக்கவே கூடாது.அந்தச் சிறுவன் 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு, அதற்குமேல் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் ஒரு ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவன் என்பதும், கூலி  வேலைக்குச் சென்று வந்துள்ளான் என்பதும் அந்த குடும்பத்தில் தாண்டவமாடும் வறுமையின் கொடுமையை வெளிப்படுத்துகிறது. கூலி வேலைக்குச் சென்று குடும்பத்திற்கு உதவி வந்த அந்த சிறுவனும் இப்போது கொல்லப்பட்டுள்ள நிலையில், இனி அந்த குடும்பம் மிக மோசமான அளவுக்குப்  பெரும் பாதிப்பிற்குள்ளாகும் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. ஆகவே, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது, காவல்நிலையத்தில் புகார் அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமே தவிர, ஒரு  செல்போனுக்காக ஒரு உயிரை எடுப்பது என்பது முற்றிலும் தடுக்கப்பட்டாக வேண்டும். இந்த கும்பல் கொலையில் தொடர்புடையவர்கள் அனைவரையும் ஈவு  இரக்கமின்றி சட்டத்தின் முன்பு நிறுத்தி, உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: