அனந்த பத்மநாப விரதத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

திருமலை : அனந்த பத்மநாப விரதத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது. சுக்லபட்ச சதுர்தசியில் நிகழும் விரதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுவது அனந்த பத்மநாப சதுர்தசி விரதம். பாத்ரபத புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்தசி திதியில் வரும் இதை அனந்த பத்மநாப சுவாமி விரதம் என அழைக்கின்றனர். அளவிட முடியாத செல்வ செழிப்புக்களை அளிக்கக் கூடியது இந்த விரதம்.

மேலும், ஸ்ரீமந் நாராயணன் ஆதிசேஷன் மீது, அனந்த பத்மநாபனாக சயனித்தவாறு இந்நாளில் தோன்றியதாக ஐதீகம். அனைத்து உயிரினங்களின் மீதும் அளவிலாக் கருணையுடனும், அவற்றின் வளமான வாழ்வில் பற்று கொண்டவராகவும், கூப்பிட்ட குரலுக்கு அந்த நொடியிலேயே காத்தருள ஓடி வருபவராகத் துயிலுற்ற நிலையிலும், விழிப்புற்றவராகச் சயனித்திருக்கிறார் மகா விஷ்ணு.  மகா விஷ்ணு அவதாரமாக கலியுகத்தில் சீனிவாச பெருமாள் பக்தர்கள் கேட்கும் கோரிக்கைகளை நிறைவேற்றும் தெய்வமாக விளங்கி வருகிறார் ஏழுமலையான் கோயிலில் உள்ள சீனிவாச பெருமாள். இந்த நிலையில் திருமலையில் அனந்த பத்மநாப சுவாமி விரதத்தையொட்டி நேற்று சக்கரத்தாழ்வாருக்கு  தீர்த்தவாரி நடைபெற்றது. ஏழுமலையான் கோயிலில் இருந்து சக்கரத்தாழ்வார் ஊர்வலமாக நான்கு மாட வீதியில் வலம் வந்தார். பின்னர்  தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி  நடைபெற்றது.

தரிசனத்துக்கு 24 மணி நேரம் காத்திருப்பு

புரட்டாசி மாதம் வெங்கடேச பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் இம்மாதம் முழுவதும் பக்தர்கள் கோயிலுக்கு அதிகளவில் வருவார்கள். இதற்கிடையில் பிரமோற்சவம் முடிந்தது முதல் வெள்ளிக்கிழமை முகரம் பண்டிகை, மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து அரசு விடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை மிகவும் அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று காலையும் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகளவில் இருந்தது. இதனால் அறைகள் கிடைக்காமல் ஏராளமான பக்தர்கள் சாலையில் கொட்டும் பனியில் காத்திருந்தனர். பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய 24 மணி நேரம் ஆகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: