நாகையில் பரபரப்பு போர்வெல் குழாயில் விழுந்த குழந்தை 2 மணி நேரத்தில் உயிருடன் மீட்பு: தீயணைப்பு வீரர்கள் சாதனை

நாகை: நாகையில் போர்வெல் குழாயில் விழுந்த 2 வயது பெண் குழந்தை 2 மணி நேரத்தில் உயிருடன் மீட்கப்பட்டாள். வேளாங்கண்ணி மற்றும் தலைஞாயிறு தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்டனர்.நாகை புதுப்பள்ளி பிடாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் வீட்டு அருகே சாலை ஓரத்தில்  ஊராட்சி சார்பில் குடிநீருக்காக போர்வெல் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 18 அடி ஆழம் தோண்டப்பட்ட  நிலையில் 6 அங்குலம் விட்டம் கொண்ட போர்வெல் குழாயை தொழிலாளர்கள் தற்காலிகமாக சாக்கு போட்டு மூடி வைத்து விட்டு சென்று விட்டனர். நேற்று மதியம் தெருவில் கார்த்திகேயன் மகள்  திவ்யதர்ஷினி (2)  விளையாடி கொண்டிருந்தாள். அப்போது கார்த்திகேயன் தனது குழந்தையை வீட்டுக்கு கூப்பிட்டார். தந்தை கூப்பிட்டவுடன் வீட்டுக்கு ஓடி சென்ற திவ்யதர்ஷினி, தடுமாறி போர்வெல் குழாய் உள்ளே விழுந்தாள். இதைக்கண்டு பெற்றோர் கதறி அழுதனர்.  அருகில் இருந்தவர்கள் உடனே வேளாங்கண்ணி மற்றும் தலைஞாயிறு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் சத்தியகீர்த்தி தலைமையில் வேளாங்கண்ணி, தலைஞாயிறு  தீயணைப்பு நிலைய வீரர்கள் 12 பேர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர். செல்லும் வழியிலேயே தீயணைப்பு படை வீரர்கள், பொக்லைன் இயந்திரம், 108 ஆம்புலன்ஸ்  வாகனம் ஆகியவற்றுக்கு தகவல் அளித்து சம்பவ இடத்திற்கு உடனே வர ஏற்பாடு செய்தனர்.

போர்வெல் குழாயை ஆய்வு செய்த போது சுமார் 12 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளது தெரியவந்தது. 108 ஆம்புலன்ஸ்சில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து டியூப் வழியாக சிறுமி சுவாசிக்க ஆக்சிஜன் வழங்கப்பட்டது.  பின்னர், போர்வெல் குழாய் அருகே இரண்டு அடிக்கு அப்பால் பொக்லைன் இயந்திரம் கொண்டு சுமார் 12 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது. 12 அடி ஆழ பள்ளத்தில் இருந்து போர்வெல் குழாய்க்கு சுரங்கம் போல்  தோண்டப்பட்டது. பின்னர் போர்வெல் பிளாஸ்டிக் குழாயை உடைத்து குழந்தையை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரத்தில் உயிருடன் மீட்டனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சகை–்காக நாகை அரசு மருத்தவமனைக்கு  108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டாள். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மீட்பு பணியின்போது கீழ்வேளூர் தாசில்தார் தையல்நாயகி, வேதாரண்யம் டி.எஸ்.பி. சச்சிதானந்தம் உடன் இருந்தனர்.  போர்வெல் குழாயில் விழுந்த 2 மணி நேரத்தில் குழந்தையை உயிருடன் மீட்ட தீயணைப்பு படை வீரர்களை பொதுமக்கள் பாராட்டினா்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: