புழல் மத்திய சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார் எம்.எல்.ஏ. கருணாஸ்

சென்னை: புழல் மத்திய சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு நடிகரும் திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் மாற்றப்பட்டுள்ளார். கடந்த வாரம் 16-ம் தேதி வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்ற  பொது கூட்டம் ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தமிழக காவல்துறையை எம்.எல்.ஏ. கருணாஸ் அவதூறாக பேசியிருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோக்கள் யூடியூப் மற்றும் பிற பிரபல  சமூக வலைதளங்களில் பரவின.

முதல்வர் பழனிசாமி, தன்னை பார்த்து பயப்படுவதாகவும் இந்த அரசு அமைய தான் முக்கிய பங்கு வகித்ததாக கருணாஸ் கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாது காவல்துறை அதிகாரியிடமும் யூனிபார்மை கழற்றிவிட்டு வந்து  மோத தயாரா என்று சவாலும் விடுத்திருந்தார். இதனையடுத்து கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார், கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவரை கைது செய்ய 3  தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை சாலிக்கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை கருணாஸ் கைது செய்யப்பட்டார்.

கைதான எம்.எல்.ஏ.கருணாஸை அக்.5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். கருணாஸ் உடன் கைது செய்யப்பட்ட நெடுமாறன், கார்த்திக், செல்வநாயம் ஆகியோரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.  எம்.எல்.ஏ.கருணாஸ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு நீதிபதி ஆட்சேபனை தெரிவித்தார். நீதிபதி ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து கருணாஸ் மீதான கொலை முயற்சி வழக்கை ரத்து செய்ய போலீஸ்  முடிவு செய்துள்ளது. சென்னை எழும்பூர் 13-வது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் இந்த உத்தரவை பிறப்பித்தார். இதனையடுத்து அவர்கள் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், கருணாஸ் வேலூர் மத்திய சிறைக்கு, செல்வ நாயகம் கடலூர் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாற்றப்பட்டனர்.

கருணாஸ் வழக்கறிஞர் பேட்டி:

எம்எல்ஏ கருணாஸ் தரப்பில் நாளை காலை 10 மணிக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர் ராஜா தெரிவித்தார். மேலும் கருணாஸ் கைது குறித்து சபாநாயகரிடம் தெரிவித்தததாக நீதிபதியிடம்  காவல்துறையினர் கூறியதாக அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: