மஞ்சள் ஒரே மாதத்தில் 1,400 வரை வீழ்ச்சி

ஈரோடு: கடந்த ஒரே மாதத்தில் ஒரு குவின்டால் மஞ்சள் 1400 வரை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கடந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில் ஒரு குவின்டால் விரலி மஞ்சள் அதிகபட்சமாக 8,699க்கும், கிழங்கு 7,089க்கும் விற்றது. இதன்தொடர்ச்சியாக மஞ்சள் விலை படிப்படியாக வீழ்ச்சியடைய துவங்கி இந்த மாத துவக்கத்தில் பெருந்துறை, ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி அதிகட்சமாக 8,222க்கும், கிழங்கு மஞ்சள் 7,929க்கும் ஏலம் போனது.  இந்நிலையில் நேற்று பெருந்துறை அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த மஞ்சள் ஏலத்தில் ஒரு குவின்டால் விரலி அதிகபட்சமாக 6,959க்கும், குறைந்தபட்சமாக 5,834க்கும், கிழங்கு மஞ்சள் அதிகபட்சமாக 5,699க்கும், குறைந்தபட்சம் 4,289க்கும் விலை போனது.

செம்மாம்பாளையத்தில் இயங்கி வரும் ஈரோடு அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விரலி அதிகபட்சமாக 7,903 முதல் குறைந்தபட்சமாக 5,588 வரைக்கும், கிழங்கு மஞ்சள் அதிகபட்சமாக 7,122 முதல் குறைந்தபட்சமாக 5,089க்கும் ஏலம் போனது.   இதுகுறித்து ஈரோடு மஞ்சள் கிடங்கு உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: இந்த ஆண்டு தமிழகம் உட்பட தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் மஞ்சள் சாகுபடி அதிகளவில் உள்ளது. கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் பரவலாக மழை பெய்தது. இதனால் மஞ்சள் சாகுபடி பரப்பளவும் கொஞ்சம் அதிகரித்துள்ளது. அதேசமயம் மஞ்சள் தேவை கடந்த மாதத்தை காட்டிலும் தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது. தற்போது ஆந்திர அரசிடம் அதிகளவில் மஞ்சள் இருப்பு உள்ளது. இதனால் ஆந்திரா வியாபாரிகள் வரத்து குறைந்தது.

 கடந்த மாதம் கேரளா, கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பினால், ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுகளில் ஓரளவுக்கு மஞ்சள் விலைபோனது. ஆனால் கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் இந்த மாதம் கடுமையான விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் விவசாயிகள் இருப்பு வைத்துள்ள பழைய மஞ்சள்களை அதாவது ‘கர்குமின்’ திடம் குறைவாக இருக்கும் மஞ்சள்ளை மார்க்கெட்டிற்கு கொண்டு வருவதால் குறைந்த விலைக்கு ஏலம் நடக்கிறது. இதனால் ஒரே மாதத்தில் ஒரு குவின்டால் மஞ்சள் 1400 வரை விலை வீழ்ச்சியடைந்துள்ளது. நல்ல நிலைமையில் உள்ள மஞ்சள் வரத்தானால் பழையபடி மீண்டும் மஞ்சள் மார்க்கெட் சூடுபிடிக்கும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: