அதிமுக அமைச்சர்களின் ஊழலை கண்டுகொள்ளவில்லை மத்திய அரசுக்கு பங்கு போகிறது

* சேலம் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

* தமிழக அரசை நீக்க மாநிலம் முழுவதும் போராட்டம்

சேலம்: ‘தமிழக அமைச்சர்கள் அடிக்கும் கொள்ளையில் ஒரு சதவீதம் டெல்லிக்கு கப்பம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான், மோடி வாய் திறக்காமல் உள்ளார். இதை நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்’ என்று சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.அதிமுக ஆட்சியில் அரசு பணிகளுக்காக விடப்படும் டெண்டரில் முறைகேடு, விதிமுறைகளை மீறி அமைச்சரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஒப்பந்தங்கள், எந்த துறையை எடுத்தாலும் ஊழல் என எதிர்க்கட்சிகள் ஆதாரத்துடன் குற்றம்சாட்டி வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல, வருமான வரி சோதனை, சிபிஐ சோதனை நடைபெற்றது. அதிமுக ஆட்சியில் ஊழல் மற்றும் முறைகேடுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் 18ம் தேதி மாவட்ட தலைநகர்களில் திமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அறிவித்தபடி, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலத்தில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்றார்.

 அவரது தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா, பனைமரத்துபட்டி ராஜேந்திரன், சிவலிங்கம், ஜெகத்ரட்சன், பார்த்திபன் மற்றும் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு சேகர்பாபு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் தயாநிதி மாறன் உரையாற்றினார். சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்றது. சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமையில் கந்தன்சாவடி பகுதியில் நடைபெற்றது. பொருளாளர் துரைமுருகன் கலந்து கொண்டார். சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சுதர்சனம் தலைமையில் ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள வைத்தியநாதன் மேம்பாலம் அருகே நடைபெற்றது. அதில் உதயநிதி கலந்து கொண்டார்.  

 திருவள்ளுர் வடக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, திருச்சி சிவா எம்பி தலைமையிலும், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி நாகர் தலைமையிலும், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சுந்தர் தலைமையில் காஞ்சிபுரம் காவலான்கேட்டிலும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் சார்பில் தாம்பரம் சண்முகம் சாலையில் தா.மோ.அன்பரசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டிவனத்தில் கனிமொழி, திருச்சியில் கே.என்.நேரு, வேலூரில் காந்தி, நெல்லையில் ஆவுடையப்பன், கன்னியாகுமரியில் சுரேஷ்ராஜன், விருதுநகரில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு ஆகியோர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.  அதேபோல மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுபேசியதாவது: சென்னையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, மாநிலம் முழுவதும் ஊழல் அதிமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மத்தியில் மோடி ஆட்சி ஒழியவேண்டும். தமிழகத்தில் இந்த பேடி ஆட்சி அழிக்கப்பட வேண்டும். பேடி என்றால் எதற்கும் லாயக்கற்ற நிலை என்பதை குறிக்கும். ஏதோ தேர்தல் வந்த பிறகு தான், ஆட்சி மாற்றம் இருக்கும் என கருத வேண்டாம். அதற்கு முன்பாகவே இந்த ஆட்சி அகற்றப்பட்டு விடும்.

 மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இந்த ஊரில், மாம்பழத்தில் வண்டு துளைத்து விட்டால், அதை தூக்கி எறிந்து விடுவார்கள். அதேபோல இந்த ஆட்சியில், எடப்பாடி பழனிசாமி என்னும் வண்டு துளைத்திருக்கிறது. அதிமுக அமைச்சரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சேர்த்து 33 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அகில இந்திய அளவில் ஊழல் கறை படிந்திருக்கக்கூடிய ஒரு அமைச்சரவை இருக்கிறது என்றால், தமிழ்நாட்டில் தான். தமிழகத்தையே குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  ஊழலை விசாரியுங்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் கொடுத்தோம். அந்த துறையின் அதிகாரி, பாலியல் குற்றவாளி பட்டியலில் இடம் பெற்றுள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி மீதான புகாரை விசாரியுங்கள் என்று டிஜிபி ராஜேந்திரனை பார்க்க போனால், அவர் குட்கா ஊழலில் சிக்கி கொண்டிருக்கிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுகுறித்து, விசாரியுங்கள் என்று முதல்வரிடம் மனு கொடுக்கப்போனால், அவர், காண்ட்ராக்ட் ஊழலில் சிக்கி நீதிமன்றத்தின் விசாரணைக்கு நிற்க வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு வந்திருக்கிறார்.

ஊழலில் முதலிடம் யாருக்கு என்பதில், முதல்வர், அமைச்சர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இபிஎஸ், ஓபிஎஸ் சேர்ந்து மாநில கஜானாவையே கொள்ளையடிக்கிறார்கள். அமைச்சர்களின் ஊழலில் முதலிடத்தில் இருப்பவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி. அவர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல கோடி கொள்ளையடித்து இருக்கிறார். அவரது தம்பி மற்றும் சார்ந்தோரின் நிறுவனங்களின் சொத்து மதிப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அதற்கான ஆதாரங்கள் அனைத்தும் என் கையில் இருக்கிறது. வேலுமணிக்கு அடுத்த இடத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி இருக்கிறார். மின் கொள்முதலில் ஒரு லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளது. இவர்களெல்லாம் நீதிமன்றத்தில் நிற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.  அடுத்து ₹400 கோடி பருப்பு ஊழலில் அமைச்சர் காமராஜூம், ₹200 கோடி அண்ணா பல்கலைக்கழக முறைகேட்டு ஊழலில் அமைச்சர் கே.பி.அன்பழகனும், ₹300 கோடி ஆம்னி பஸ் ஊழலில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் சிக்கியுள்ளனர். இதுபோக ₹1000 கோடி முட்டை டெண்டர் ஊழல், ₹84 கோடி வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல் என 33 அமைச்சர்கள் மீதும் ஊழல் பட்டியல் இருக்கிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்துள்ள ஊழலை அவரது தந்தையே வருமான வரித்துறையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் கையில் இருக்கக்கூடிய நெடுஞ்சாலைத்துறையில் போடப்படுகிற டெண்டர்கள் அத்தனையும் அவரது சம்பந்தி சுப்ரமணியத்திற்கு போகிறது. செய்யாதுரை, நாகராஜன், சுப்பிரமணியனும் பார்ட்னராக இருக்கக்கூடிய 3 நிறுவனங்களுக்கும் ₹3,120 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்களை எடப்பாடி பழனிசாமி கொடுத்திருக்கிறார். இதே சேலம் மாவட்டத்திலும், சென்னையிலும் ₹310 கோடிக்கு உலக வங்கி டெண்டர்களை கொடுத்திருக்கிறார் எடப்பாடி. இந்த முறைகேட்டால் இனி எந்த காலத்திலும் உலக வங்கி தமிழ்நாட்டிற்கு கடனை, நிதியை தருவதற்கு அவர்கள் தடைபோட்டு விடுவார்கள். தேர்தலில் நிற்கும் போது ஓபிஎஸ், தனக்கு ₹5 லட்சம் தான் வருமானம் என கூறியுள்ளார். ஆனால் அவர், அமெரிக்கா, இந்தோனேசியா, துருக்கி, மலேசியா போன்ற நாடுகளில் முதலீடு செய்திருக்கிறார். ஸ்ரீவில்லிபுத்தூரில் 150 ஏக்கர் பரப்பில் மாந்தோப்பு வாங்கியிருக்கிறார். சேகர்ரெட்டியுடன் சேர்ந்து மணல் கொள்ளை அடித்துள்ளார். எடப்பாடி, ஓபிஎஸ்., மற்றும் அமைச்சர்கள் அடித்துக்கொண்டிருக்கும் கொள்ளையை பிரதமர் மோடி தட்டி கேட்கவேண்டும். தட்டிக் கேட்கிறாரா? என்றால் இல்லை. ஏனென்றால், இவர்கள் அடிக்கிற கொள்ளையில் 1 சதவீதம் டெல்லிக்கு கப்பம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான், மோடி வாய் திறக்காமல் உள்ளார். இதை நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

இந்த ஊழலை தடுக்கவேண்டும் என்பதற்காக லோக் ஆயுக்தா என்ற அமைப்பை ஏற்படுத்த சட்டமன்றத்தில் திமுக சார்பில் குரல் கொடுத்தோம். அந்த சட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், அந்த அமைப்பு இன்னும் அமைக்கப்படவில்லை. அப்படி அமைக்கப்பட்டு விசாரணை நடத்தினால், முதலில் சிறைக்கு போவது இபிஎஸ்,ஓபிஎஸ் தான். அதனால் தான், அவர்கள் நியமிக்காமல் இருக்கிறார்கள்.ஆட்சியில் இருக்கக்கூடிய அமைச்சர்கள், வீடு புகுந்து திருடவில்லையே தவிர,மற்ற எல்லா தவறுகளையும் இதுவரையில் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.முதல்வர், அமைச்சர்கள், அவர்களது வாரிசுகள், உறவினர்கள், பினாமிகள், இதற்கு துணை போய் கொண்டிருக்கக்கூடிய சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லாம் யார்,யார் என்பதை நாங்கள் பட்டியல் எடுத்து வைத்துள்ளோம். எந்தெந்த ஐபிஎஸ் அதிகாரிகள் துணை போகிறார்கள் என்ற விவரத்தை தயாரித்து விட்டோம். விரைவில் ஆட்சிக்கு வந்தவுடன், முதல் வேலையாக கரன்சியை எண்ணியவர்களை எல்லாம், கம்பி எண்ணக்கூடிய சூழலை ஏற்படுத்தப்போகிறோம். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஊழல் பட்டியல்

சேலத்தில் நேற்று நடந்த திமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசும்போது அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட்டார். அவர் கூறியதாவது,

*  முதல்வர் எடப்பாடி பழனிசாமி - நெடுஞ்சாலைத்துறையின் ₹3,120 கோடி டெண்டரை சம்பந்தி சுப்பிரமணியன், காண்டிராக்டர்கள் செய்யாதுரை, நாகராஜனுக்கு கொடுத்ததில் முறைகேடு.

*  செய்யாதுரை, நாகராஜன் வீட்டில் ₹180 கோடி, 100 கிலோ தங்கத்தை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது.

*  துணை முதல்வர் ஓபிஎஸ் - அமெரிக்கா, இந்தோனேசியா, துருக்கி, மலேசியா போன்ற நாடுகளில் முதலீடு.

*  அமைச்சர் காமராஜ் - பருப்பு கொள்முதலில் ₹400 கோடி ஊழல்

*  அமைச்சர் கே.பி.அன்பழகன்- அண்ணா பல்கலைக்கழக மதிப்பெண் ஊழல் ₹200 கோடி.

*  அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்- 2000 ஆம்னி பஸ் வாங்கியதில் ₹300 கோடி ஊழல்.

*  முட்டை டெண்டரில் ₹1000 கோடி ஊழல்.

*  காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ₹84 கோடி ஊழல்.

*  மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல்.

*  அமைச்சர் எஸ்.பி.வேலுமணி- இதுவரை 8 பினாமி கம்பெனிகள் தொடர்பான தகவல்கள் ஆதாரத்தோடு கிடைத்துள்ளது.

*  17 லட்சம் வர்த்தகம் செய்து கொண்டிருந்த கே.சி.பி. இஞ்சினியர்ஸ் என்ற கம்பெனியின் தற்போதைய பிசினஸ் ₹498 கோடி.

*  86 லட்சம் வர்த்தகம் செய்து கொண்டிருந்த கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியன் கம்பெனி. இப்போது ₹28 கோடி பிஸினஸ் செய்து கொண்டிருக்கிறது.

*  3 கோடி வர்த்தகம் செய்து கொண்டிருந்த வரதன் உட்கட்டமைப்பு கம்பெனி, இப்போது ₹147 கோடி மதிப்புள்ள கம்பெனியாக வளர்ந்து விட்டது.

*  அமைச்சர் வேலுமணி பினாமிகளுக்காக சென்னை மாநகராட்சியில் “மல்டி லெவல் பார்க்கிங்” கான்டிராக்ட், எல்.இ.டி. கான்டிராக்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

*  பி.செந்தில் அன்ட் கோ என்ற கம்பெனியில் அமைச்சர் வேலுமணியின் தம்பி பி.அன்பரசன் நிர்வாக இயக்குநர். அந்த கம்பெனிக்கு கோவை மாநகராட்சியில் இருந்து ₹15 கோடிக்கு கான்டிராக்ட் கொடுத்திருக்கிறார் அமைச்சர் வேலுமணி.

*  கோவை மாநகராட்சியில் ₹38 கோடி மதிப்புள்ள பூங்கோரை கான்டிராக்ட் வேலுமணியினுடைய பினாமி கம்பெனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

*  149 கோடி ஸ்மார்ட் சிட்டி கான்ட்ராக்ட் வேலுமணி பினாமி கம்பெனிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

*  1000 கோடி மதிப்புள்ள மின்னணு நிர்வாகம் தொடர்புடைய ஸ்மார்ட் சிட்டி கான்டிராக்ட், 10 மாநகராட்சிகளிலும் வேலுமணியின் பினாமிக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

*  அமைச்சர் தங்கமணி- மின் கொள்முதல் செய்ததில் ₹1 லட்சம் கோடி ஊழல்.

*  தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்ததில், ₹12,250 கோடி ஊழல்.

*  அதானி சூரிய ஒளி மின்சாரத்திற்கு அதிக விலை நிர்ணயம் செய்து, ஊழல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

*  மின் மீட்டர் வாங்குவதில் மெகா ஊழலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

*  அமைச்சர் விஜயபாஸ்கர்- குட்காவை விற்று மத்திய அரசிற்கு ஏற்பட்டிருக்கூடிய நஷ்டம் ₹250 கோடி.

*  குவாரி கம்பெனிகளை வைத்துக்கொண்டு, அனுமதித்ததை விட கியூபிக் மீட்டருக்கு அதிகமாக கற்களை வெட்டி ₹350 கோடி கொள்ளையடித்திருக்கிறார்.

*  அமைச்சர் பதவியை பயன்படுத்தி புதிய பணியிடம், டிரான்ஸ்பர் செய்வதில் ₹20 கோடி ஊழல்.

*  குட்கா ஊழல் ₹40 கோடி.

*  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது, வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு செய்து அவரது வீட்டில் ₹89 கோடிக்கான ஆதாராத்தை கையில் எடுத்தார்கள்.மேற்கண்டவாறு பட்டியலை வாசித்தார்.

˜ ஊழலை தடுக்கவேண்டும் என்பதற்காக லோக்  ஆயுக்தா என்ற அமைப்பை ஏற்படுத்த சட்டமன்றத்தில் குரல்  கொடுத்தோம்.

˜ அந்த சட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், அந்த  அமைப்பு இன்னும் அமைக்கப்படவில்லை.

˜ துணை போய் கொண்டிருக்கக்கூடிய சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் எல்லாம் யார்,யார் என்பதை நாங்கள் பட்டியல் எடுத்து வைத்துள்ளோம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: