ஆண்டுக்கு எவ்வளவு வருவாய் ஈட்டுகின்றனர்? 8வது வரை படித்த எம்எல்ஏக்கள் முதலிடம்: தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தகவல்

புதுடெல்லி: நாட்டில் உள்ள எம்எல்ஏக்களின் வருவாய் மற்றும் கல்வித்தகுதி குறித்த ஆய்வில், எட்டாம் வகுப்பு வரை படித்த எம்எல்ஏக்கள் ஆண்டுக்கு ரூ.89,88 லட்சம் வருவாய் ஈட்டி, முதலிடம் பெற்றுள்ளனர். டாக்டர் பட்டம்  பெற்ற எம்எல்ஏக்கள் ரூ.12.43 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவதாக தெரியவந்துள்ளது. ‘தேசிய தேர்தல் கண்காணிப்பு மற்றும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம்’ ஆகியவை இணைந்து, நாட்டில் தற்போது பதவியில் உள்ள எம்எல்ஏக்களின் ஆண்டு வருவாய், கல்வி குறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த  ஆய்வு, எம்எல்ஏக்கள் வழங்கிய பிரமாண பத்திரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. மொத்தமுள்ள, 4,086 எம்எல்ஏக்களில் 3,145 பேர் மட்டுமே பிரமாண பத்திரங்களை வழங்கி உள்ளனர்.

அதன்படி, எம்எல்ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.24.59 லட்சமாகவும், அதிகபட்சமாக தென்மாநிலத்தைச் சேர்ந்த 711 எம்எல்ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.51.99 லட்சமாகவும், குறைந்தபட்சமாக கிழக்கு  மாநிலத்தை சேர்ந்த 614 எம்எல்ஏக்களின் ஆண்டு வருமானம் ரூ.8.53 லட்சமாகவும் உள்ளது. மாநிலங்களை பொறுத்தவரை அதிகபட்சமாக கர்நாடகாவின் 203 எம்எல்ஏக்கள் சராசரியாக ஆண்டுக்கு ரூ.1.11 கோடி சம்பாதிக்கின்றனர்.  குறைந்தபட்சமாக சத்தீஷ்காரின் 63 எம்எல்ஏக்கள் ஆண்டுக்கு ரூ.5.4 லட்சமாக உள்ளது. மேற்கண்ட எம்எல்ஏக்களின் கல்வித்தகுதியை பொறுத்தவரை, 1,052 பேர் (33 சதவீதம்) 5 வகுப்பு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை படித்துள்ளனர்.  இவர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.31.03 லட்சமாக உள்ளது. பட்டதாரி மற்றும் கூடுதல் கல்வித் தகுதியை பெற்றிருக்கும் 1,997 எம்எல்ஏக்கள் (63 சதவீதம்), ஆண்டுக்கு ரூ.20.87 லட்சம் பெறுகின்றனர்.

வெறும் 8ம் வகுப்பு மட்டும் கல்வித்தகுதி பெற்றுள்ள 139 எம்எல்ஏக்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூ.89.88 லட்சம் வரை வருவாய் ஈட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒட்டுமொத்த எம்எல்ஏக்கள் பட்டியலில், முதலிடம்  பெற்றுள்ளனர். அதேநேரத்தில், டாக்டர் பட்டம் பெற்ற உயர்க்கல்வி எம்எல்ஏக்களில் சராசரியாக, ரூ.12.43 லட்சம் வரை வருவாய் ஈட்டுகின்றனர். இந்த ஆய்வின்படி பார்த்தால், குறைந்த கல்வித்தகுதி கொண்ட எம்எல்ஏக்கள் அதிக  வருவாயும், அதிக கல்வித்தகுதி கொண்ட எம்எல்ஏக்கள் குறைந்த வருவாயும் ஈட்டுகின்றனர். அதிக வருவாய் ஈட்டும் எம்எல்ஏக்களில், கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஊரக பகுதி எம்எல்ஏ என்.நாகராஜூ, ஆண்டுக்கு ரூ.157.04  கோடி ஈட்டுவதாக தெரிவித்துள்ளார். குறைந்தபட்ச வருவாயாக, ஆந்திரபிரதேச மாநில எம்எல்ஏ பி.யாமினி பாலா, ரூ. 1,301 என்று கணக்கு காட்டியுள்ளார். பெண் எம்எல்ஏக்களில் (8 சதவீதம் பேர்) ஆண்டு வருமானம் ரூ. 10.53  லட்சமாகவும், ஆண் எம்எல்ஏக்கள் ஆண்டு வருமானம், ரூ. 25.85 லட்சமாக தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: