இந்தியா-வங்கதேசம் இடையே டீசல் பைப்லைன் திட்டம்: பிரதமர் மோடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்

டெல்லி: இந்தியா-வங்கதேசம் இடையே டீசல் பைப்லைன் திட்டத்தை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவும் தொடங்கி வைத்தனர். மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் இருந்து  வங்காளதேசத்தின் தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பர்பத்திப்பூர் பகுதி வரையில் 131 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் குழாய் அமைக்கப்படுகிறது. இந்தக் குழாய் வழியாக டீசல் கொண்டு செல்லப்படும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கு வங்காளத்தின் தாத்தபுலிய பகுதியில் இருந்து, வங்காளதேசத்தின் குல்னா பகுதி வரை இரண்டாவது குழாய் அமைக்கப்படுகிறது. இந்தக் குழாய் மூலம் இயற்கை எரிவாயு கொண்டு  செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வங்கதேசத்தில் திரவ வடிவ இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் ஒன்றை அமைக்கவும் இந்தியா தீர்மானித்துள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு இந்தியா வந்தபோது வங்கதேசத்துக்கு அடுத்த 15  ஆண்டுகள் டீசல் வழங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. இதன்படி, முதலில் ரயில்கள் மூலம் டீசல் வங்கதேசத்திற்கு கொண்டு செல்லப்படும். அதன்பின்னர், குழாய்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் வழியாக டீசல்  அனுப்பப்படும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், பர்பத்திப்பூர் வரையில் 131 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதல் குழாய் அமைக்கும் ஆரம்பகட்ட பணிகளை பிரதமர் மோடியும் ஷேக் ஹசினாவும் காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தனர். மேலும், வங்காளதேச  தலைநகர் டாக்காவில் இருந்து டோங்கி வரையிலும், டோங்கியில் இருந்து ஜாய்தேவ்பூர் வரையிலுமான இரட்டை வழித்தட ரயில் பாதகளை அமைக்கும் பணிகளையும் அவர்கள் தொடங்கி வைத்தனர்.

டெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் இந்த தொடக்க நிகழ்ச்சியில் காணொலி மூலம் கலந்து  கொண்டனர். டாக்காவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷேக் ஹசீனா, நேற்று பிறந்தநாள் கொண்டாடிய மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்த மோடி, வரும் 28-ம் தேதி  பிறந்தநாள் காணும் ஷேக் ஹசீனாவுக்கு வங்காள மொழியில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: