சென்னையில் வரும் 24-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு குழுவின் முதல் கூட்டம்: நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் நடக்கிறது

சென்னை: சென்னையில் வரும் 24-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு குழுவின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு மூடி சீல் வைத்துள்ளது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் டெல்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.

இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது. இந்நிலையில் தருண் அகர்வால் தலைமையிலான குழு செப்டம்பர் 22 முதல் 3 நாட்களுக்கு  ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்யும் என்று தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தலைவர் ஏ.கே.கோயல் கூறினார். இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு திட்டத்தை ரத்துசெய்யுமாறு, தமிழக அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் தற்போது விசாரணையில் உள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால் ஸ்டெர்லைட் ஆய்வு  திட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்துக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று கடிதம் எழுதியது.

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் சென்னையில் வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: