அவதூறாக பேசிய எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: நீதிமன்றத்தை அவதூறாக பேசிய எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டதில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான ஊர்வலம் ‘கிறிஸ்தவ தேவாலயம் உள்ள பகுதி வழியாக விநாயகர் சிலையை எடுத்து செல்லாமல், நாங்கள் சொல்லும் வழியில் கொண்டு செல்லுங்கள்’ என்று போலீசார் கூறினர். இதற்கு விநாயகர் சிலை அமைப்பினர் மறுத்து விட்டனர்.

இந்நிலையில் தேசிய செயலாளர் எச்.ராஜா சம்பவ இடத்துக்கு வந்து ஊர்வலத்துக்கு தடை போட்ட பொன்னமராவதி டிஎஸ்பி தமிழ்மாறன், திருமயம் இன்ஸ்பெக்டர் மனோகரனிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது, போலீசாரை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். மேலும் உயர் நீதிமன்றம் குறித்தும் சர்ச்சை கருத்தை தெரிவித்தார். இதையடுத்து எச்.ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதித்துறையை அவமதிப்பு செய்துள்ள எச்.ராஜா மீது நீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் எச்.ராஜா அக்டோபர் 22ம் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். எச்.ராஜா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்ற பதிவாளர் நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இந்நிலையில் திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் எச்.ராஜா பங்கேற்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்து முன்னணி மாவட்ட அமைப்பாளர் வினோத் என்பவர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை முடிந்தால் கைதுசெய்யுமாறு போலீசாருக்கு சவால் விடுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எச்.ராஜா இங்கு தான் இருக்கிறார் என்றும் தங்களை தாண்டி தான் அவரை கைது செய்ய முடியும் என்றும் அவர் பேசியுள்ளார்.

இந்நிலையில் நீதிமன்றத்தை அவதூறாக பேசிய எச்.ராஜாவை கைது செய்ய உத்தரவிட ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் எச்.ராஜா மீதான புகாரை காவல்துறை விசாரித்தால் முறையாக இருக்காது என வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது என கூறியுள்ளது. மேலும், அவர் மீது வேறு ஏதேனும் புகார்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்பட்ட காவல்நிலையத்தை அணுகுமாறும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகுமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: