அரிசி, கோதுமை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதிக மானியம் கொடுத்து உலக வர்த்தகத்தை சீர்குலைக்கிறது இந்தியா

வாஷிங்டன்: அரிசி, கோதுமை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதிக மானியம் கொடுத்து உலக வர்த்தகத்தை இந்தியா சீர்குலைக்கிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. உலக வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. இதில் அமெரிக்க வர்த்தக சபையின் தலைமை விவசாய பொருட்கள் கொள்முதல் அதிகாரி கிரகோரி டவுட் பங்கேற்று எம்பிக்கள் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் இந்தியாவில் விவசாயிகளுக்கு  அதிக அளவு மானியம் வழங்குவதால் ஏற்படும் வர்த்தக சீர்குலைவு குறித்து பேசினார். அவர் பேசியதாவது: உலகம் முழுவதும் அரிசி மற்றும் கோதுமை உற்பத்தி செய்யும் நாடுகள் இந்தியாவை கவனிக்க வேண்டும். அவர்கள் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு, விவசாயிகளுக்கு அதிக அளவு மானியம் கொடுத்த இந்த வர்த்தகத்தை சீர்குலைக்கிறார்கள்.

அரிசி மற்றும் கோதுமை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இந்தியா மிகப்பெரிய அளவு மானியம் வழங்குகிறது. இதை மற்ற நாடுகள் கவனிக்க வேண்டும். அமெரிக்காவின் கணிப்புப்படி அரிசி உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு இந்தியா 74 சதவீதம் முதல் 84.2 சதவீதம் வரை ஆதரவு விலை வழங்குகிறது. அதே போல் கோதுமை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 60.1 சதவீதம் முதல் 68.5 சதவீதம் வரை ஆதரவு விலை வழங்குகிறது. ஆனால், இந்தியாவுக்கு உலக வர்த்தக ஒப்பந்தத்தின்படி ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு அதிகபட்சமாக 10 சதவீதம் வரைதான் ஆதரவு விலை வழங்க அனுமதி உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக இந்தியா ரூ.38 ஆயிரம் கோடியில் இருந்து ரூ. 57 ஆயிரம் கோடி மதிப்பிலான அரிசியை ஏற்றுமதி செய்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள அத்தனை நாடுகளைவிட அதிகம். அதேபோல், ரூ.500 கோடி முதல் ரூ.13 ஆயிரம் கோடி வரை கோதுமையை ஏற்றுமதி செய்கிறது. வர்த்தக ஒப்பந்தத்தை மீறி இந்தியா ரூ.10 லட்சம் கோடி வரை விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது. அமெரிக்காவின் வர்த்தக நட்பு நாடான இந்தியா மீது தேசிய பாதுகாப்பு தொடர்பாக அல்லது முறையற்ற வர்த்தகம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது அவசியம்.

ஏனெனில், நான் பதவியேற்ற 6 மாத காலத்தில் தொடர்ச்சியாக 150 கூட்டங்களை நடத்தி அமெரிக்காவில் உள்ள அனைத்து வர்த்தக தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர்கள் அனைவரும் இந்த முறையற்ற வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க உற்பத்தியாளர்களை காப்பாற்ற முறையற்ற வர்த்தகத்தை மேற்கொண்ட இந்தியா மீது உலக வர்த்தக மையம் மூலமும் நடவடிக்கை எடுக்க டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை மேற்ொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க விவசாயிகளுக்கு  86 ஆயிரம் கோடி நிவாரணம்

அமெரிக்க வர்த்தகம் மற்றும் விவசாய விவகாரங்களுக்கான இணை அமைச்சர் மெக்கன்சியும் நாடாளுமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: சமீபத்தில் நான் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது மூத்த அதிகாரிகளை சந்தித்து அறிவியல் அடிப்படையில் உணவு பாதுகாப்பு முக்கியம் குறித்து விவாதித்தேன். மேலும், அமெரிக்க ஏற்றுமதி குறித்தும் பேசினேன். அதேபோல் அமெரிக்காவில் கடினமாக உழைத்து விவசாய பொருட்களை தயார் செய்யும்போது இந்த வர்த்தகத்தை சீனாவும் முறையற்ற வர்த்தகத்தால் சீர்குலைத்து விடுகிறது.

சீனா மற்றும் மற்ற நாடுகள் அமெரிக்க விவசாய வர்த்தகத்தை சீர்குலைத்ததால் விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மூன்று திட்டங்கள் மூலம் ரூ.86 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். மேலும், நியாயமான, நேர்மையான முறையில் வர்த்தகம் நடப்பதற்கு அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: