பிரதமர் அபே திட்டம் ஜப்பான் அரசியல் சட்டத்தில் மாற்றம்: 3வது முறையாக தேர்தலில் போட்டி

டோக்கியோ: ஜப்பானில் பிரதமர் ஷின்சே அபே, மூன்றாவது முறையாக பிரதமர் தேர்தலில் போட்டியிட உள்ளார். கடந்த 2012 முதல் ஜப்பான் பிரதமராக 63 வயது ஷின்சே அபே உள்ளார். வரும் 20ம் தேதி அந்நாட்டில் நடைபெறவுள்ள பிரதமர் தேர்தலில் மூன்றாவது முறையாக அவர் போட்டியிட உள்ளார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்பட்சத்தில், ஜப்பான் வரலாற்றில் அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் என்ற பெருமை இவரை சேரும். அபே மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ள போதிலும், மக்களிடையே இவருக்கான செல்வாக்கு அதிகமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இதனால், தேர்தலில் இவரே வெற்றி பெறுவார் என கருதப்படுகிறது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டால், மேலும் 3 ஆண்டுகள் இவர் பிரதமராக பதவியில் நீடிப்பார்.

ஜப்பானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர், ஷிகரு இஷிபா மட்டுமே அபேவை எதிர்த்து போட்டியிடுகிறார். அபே அளித்த பேட்டியில், “நான் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியை எடுக்க விரும்புகிறேன். இதன்மூலம் புதிய வரலாற்றை படைக்க விரும்புகிறேன்.  இதற்கான வரைவு சட்டத்தை இந்த ஆண்டின் இறுதியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய கட்சி முடிவு செய்துள்ளது” என்றார். ஜப்பானில் 2வது உலகப் போருக்கு பிறகு, அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற அபேவின் தாத்தாவும், முன்னாள் பிரதமருமான நோபுசுகே கிஷி உள்ளிட்ட பல தலைவர்கள் கூறிவரும் நிலையில், அபே இதை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த திருத்தத்தின் மூலம், தனது நட்பு நாடுகளின் மீது மற்ற நாடுகள் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், நட்பு நாடுகளுக்கு ஆதரவாக ஜப்பான் ராணுவத்தை பயன்படுத்த முடியும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: