டெங்கு, சிக்குன்குனியா பாதிப்பு டெல்லியில் குறைவு : உச்ச நீதிமன்றத்தில் அரசு தகவல்

புதுடெல்லி: கடந்த ஆண்டைவிட சிக்குன்குனியா மற்றும் டெங்கு பாதிப்பு இந்த ஆண்டில் சற்று குறைவாகவே உள்ளது என டெல்லி அரசு, உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. திறந்தவெளியில் தேங்கும் நீரில் ஏடியஸ் மற்றும் பெண் கொசுக்கள் தங்கள் இனப்பெருக்கத்தை பெருக்கி கொண்டு, பொதுமக்களுக்கு டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டாலும், சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க நேரிடுகிறது.

கடந்த 2015ம் ஆண்டு டெல்லியை சேர்ந்த 7 வயது சிறுவன் டெங்குவால் பாதிக்கப்பட்டபோது, அவனுக்கு 5 தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்தன. இதில் சிறுவன் உயிரிழக்கவே, பெற்றோரும் வேதனை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டனர். இந்த வழக்கை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. இதன் ஒரு பகுதியாக நேற்று நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அமர்வு முன் விசாரணை நடந்தது. அப்போது டெல்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘டெல்லியில் கடந்த ஆண்டு டெங்கு மற்றும் சிக்குனியாவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

மாநகராட்சிகள் வெளியிட்ட நிலவரப்படி கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி வரை ஓர் உயிரிழப்பு உட்பட டெங்குவால் 9,633 பேரும், சிக்குனியாவால் 4,305 பேரும் பாதிக்கப்பட்டிருந்தனர்.  ஆனால் இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை குறைந்துள்ளது. தலைநகரில் மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் அக்டோபர் 7ம் தேதி நிலவரப்படி 2,152 பேர் டெங்குவாலும் 368 பேர் சிக்குன்குனியாவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா அளவில் டெங்குவின் பாதிப்பு 8,726 பேர் என இருந்த போதிலும், இந்த மாதம் மட்டும் டெல்லியில் டெங்கு பாதிப்பு 345 பேர் மட்டுமே. இதனால் கொசுக்களால் இந்த ஆண்டு மிகப்பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை’ என்று ெதரிவித்தார்.

* டெல்லியில் ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலத்தில் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் கொசுக்களால் பரவுகின்றன.

* இந்த நோய்களை கட்டுப்படுத்த மாநில அரசும் , மாநகராட்சிகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

* இது தவிர, காற்று மாசு, ஒலி மாசு போன்ற பிரச்னைகளும் டெல்லியை திணறடித்து வருகின்றன.

Related Stories: