விடுதலை பாகம்-1 விமர்சனம்

வெற்றிமாறன் இயக்கத்தில் கதைநாயகனாக சூரி, வாத்தியாராக விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை பாகம்-1’. இப்படி படம் குறித்த அறிவிப்பிலேயே அவ்வளவு தெளிவுடன் ஆரம்பித்து எடுக்கப்பட்ட படம். பவானிஸ்ரீ, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், இளவரசு, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் இப்படத்தின் கதை ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். படத்திற்கு இசை இளையராஜா.

’துணைவன்’ கதையின் மையக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு தனது கற்பனையையும் புகுத்தி கனிமவள அரசியலையும், அதில் பறிபோகும் உயிர்களையும் மிக அற்புதமாக காட்சிப் படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன். உலகமயமாக்கலில் பெரும்பாலும் நகரத்து வாழ்வில் ஊறிப்போன மக்களுக்கு சற்றும் புலப்படாத, அறியப்படாத வாழ்வியல் போராட்டத்தை இவ்வளவு ஆழமாக பதிய வைக்க வெற்றிமாறனுக்கு நிகர் வெற்றிமாறனே. இன்று நீ நிற்கும் கட்டிடத்திலும், ஓட்டும் காரிலும் கூட ஏதோ ஒரு மலைவாழ் கிராமத்தின் , அல்லது அடித்தட்டு அப்பாவி கிராமத்து மக்கள் கூட்டத்தின் இரத்தமும், சதையும் கலந்திருக்கிறது என ஆணித்தனமாக அடித்துச் சொல்லியிருக்கிறார்.

புதிதாக போலீஸ் கான்ஸ்டெபிள் வேலைக்கு வரும் குமரேசன்(சூரி).முதல் நாள் வேலையிலேயே பல கிலோமீட்டர்களுக்கு மலைப்பாதையில் காய்கறி மூட்டை சகிதமாக ஏத்தி இறக்கப்படுகிறார். அரசும் தனியார் கனிமவள மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து அருமபுரி மாவட்டத்தைச் சுற்றிய மலைகளில் உள்ள கனிமங்களை சுரண்ட திட்டமிடுகிறார்கள் அதனை எதிர்த்து பெருமாள் ‘வாத்தியார்’ மற்றும் அவரின் குழுவான மக்கள் படை போராடுகிறார்கள்.

கிட்டத்தட்ட தீவிரவாதிகளாகவே சித்தரிக்கப்பட்டு தேடப்பட்டும் வாத்தியார் குழுவுக்கும், அவர்களைப் பிடிக்கப் போராடும் ’ஆபரேஷன் கோஸ்ட்’ காவல் துறை படைக்குமான போராகவே செல்லும் கதையில் குமரேசன் ஏதும் விளங்காதவராய் முதல் நாள் முதல் அதிகார துஷ்பிரயோகம், ஆர்டரை மதிக்கவில்லை, எதிர்த்து பேசுதல் உள்ளிட்டக் காரணங்களுக்காக தண்டனை அனுபவித்துக் கொண்டேயிருக்கிறார். இன்னொரு பக்கம் அப்பாவி மக்கள் விசாரணை என்னும் பெயரில் ஒவ்வொரு நாளும் மரண வாசலுக்கே சென்று வருகிறார்கள், அல்லது வராமலேயே போகிறார்கள்.

கனிமச் சுரண்டல் என்பது வெறும் கனிமம் அல்ல ஒரு நாட்டு வளத்தின் மீதான திருடல், அங்கே இருக்கும் மக்கள், முதல் சின்னச் சின்ன உயிர்களின் வாழ்வாதாரம். இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பணத்தை வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு வேலை செய்யும் அரசு அதிகாரிகள் காவல் அதிகாரிகளைப் பகடைக் காய்களாக மாற்றி நடக்கும் மனித வேட்டையை அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறார் வெற்றிமாறன். ஒவ்வொரு நாடும் தனது வளர்ச்சியை இப்படியான அப்பாவி மக்களின் மரண ஓலத்தில்தான் நிகழ்த்துகின்றன என்பது கதைநாயகனான சூரிக்கு மட்டுமல்ல நகரத்து வாசத்தில் மினுமினுக்கும் அலங்கார வெளிச்சத்துக்கு இடையே வாழும் நமக்கும் கூட விளங்குகிறது.

எடுத்துக்கொண்ட பாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் கலைஞர்களில் விஜய் சேதுபதி முக்கியஸ்தர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். காவல் துறை என்றாலே பயம் உண்டாகும் ஆனாலும் அவர்களில் எல்லோருமே கெட்டவர்கள் இல்லை அவர்களின் மேல் திணிக்கப்படும் அதிகாரமும், அழுத்தமும் அவர்களை என்னவாக மாற்றுகிறது என்பதையும் அவர்களுக்கும் உயிர்சேதங்களை உண்டாக்கி கோபத்தை உண்டாக்கும் வேலையை மிகச்சில அதிகாரிகளே செய்கிறார்கள் என்பதையும் விளக்கும் விதம் அருமை.

 

‘நான் மன்னிப்பு கேட்டா, என் வேலை தப்பிக்கும்.. ஆனா என் மனசாட்டி உறுத்தும்மா’…என படம் துவங்கி மிகச் சிலநிமிடங்களில் கைதட்டல் பெரும் சூரி 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கைதட்டல் பெருகிறார். பிரம்மாண்ட காட்சிகளே இல்லாமல், பந்தா ஏதும் செய்யாமல், பன்ச் வசனம் பேசாமல், அதிரடி தீம் இல்லாமல் ஒரு நடிகனை மாஸ் கதாநாயகான மாறச் செய்யும் மேஜிக் வெற்றிமாறனுக்குக் கை வந்த கலை.

’கோவம் வருதா? ‘ஆமா சார்’… ’

அடிப்பியா? அடிப்பேன் சார்’…

’உனக்குத் தெரிஞ்ச பொண்ணு யாரும் இருக்காங்களாடா?’

‘சார், எல்லாரையும் ஒரே மாதிரிதான் சார் கொடுமைப் படுத்துறாங்க’.  

இப்படி பல இடங்களில் சூரி தன் பாத்திரத்தில் பளிச்சிடுகிறார். முதல் பாதியில் மன்னிப்புக் கேட்க யோசிக்கும் சூரி, அடுத்தப் பாதியில் கொடுமைப்படுத்தப்படும் உயிர்களுக்காக ’சார்…சார்…மன்னிச்சிடுங்க சார்’ என யோசிக்காமல் கேட்கும் இடம் நம் மனதையும் சேர்த்து ‘ப்ளீஸ் மன்னிச்சிடுங்க சார்’ எனக் கெஞ்ச வைத்திவிடும்.   

காடும், மலையும், பறவைகளின் ஒலியும், அரிக்கன் விளக்கும், குளிரும் பனியும், குட்டிக் குட்டி ஓடைகளும், மலைமேலே நிற்கும் சிறிய ஓட்டு வீடுகளும், குடிசைகளும், காட்டு மல்லிப் பூக்களும், செக் போஸ்ட் அதிகாரிகளும், அந்த அழகுக்கு இடையிலே கேட்கும் மரண ஓலங்களும், அதிகாரங்களும் என நம்மை நீண்ட அமைதியாக்கி, அதே அமைதியை மிக அற்புதமாக குலைக்கவும் செய்திருக்கிறது வேல்ராஜின் ஒளிப்பதிவு. இளையராஜாவின் பின்னணி இசையை இனி நாம் பாராட்ட என்ன இருக்கிறது. அதைவிட சில இடங்களில் அவர் விட்டு வைக்கும் மௌனம் இன்னும் அலாதியானது. ’வழிநெடுக காட்டுமல்லி…’ என இளையராஜா பாடத் துவங்கும் போதே நாமும் அவர் கையப் பிடித்துக்கொண்டு மலைப் பாதைகளில் பயணிக்கத் துவங்குகிறோம். ‘ஒன்னோட நடந்தா…’ என குமரேசனாக வரும் சூரியும், தமிழ்செல்வியாக வரும் பவானிஸ்ரீயும் நடக்கும் போதே நாமும் நடக்கத் துவங்கிவிடுவோம்.

முதல் பாகம் முடிந்து புரமோஷன் பாணியில் காட்சிகளுடன் கடக்கும் ‘அடுத்தது’… அரசு அதிகாரியாக கௌதம் மேனன் கேட்கும் கேள்விகளும், அதற்கு வாத்தியாராக கால் மேல் கால் போட்டுக்கொண்டு பேசும் விஜய் சேதுபதியும் அரசியல் நையாண்டிகளாக ‘அடுத்த பாகம்’ எப்போது எனக் கேட்க வைக்கிறது.

பணம் கொடுத்து படம் பார்க்கும் அளவிற்கு நம் வாழ்க்கை எல்லாம் மேம்பட்டுக் கிடக்க இன்னும் மஞ்சள் நிற பல்ப் வெளிச்சம் கூட செல்லாத ஏதோ ஒரு மலையில், எங்கேயோ ஒரு அடித்தட்டுக் கிராமத்தில் இப்படியான மனிதச் சுரண்டலும், இரத்தப் போராட்டமும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது என காண்பித்து மனதை கனக்க வைத்திருக்கும் ‘விடுதலை பாகம் -1’ நிச்சயம் அடுத்து வரும் வருடத்தில் பல விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெறும் என்பதில் ஐயமில்லை.

Related Stories: