நடிகை கங்கனா வீட்டை இடித்தது சட்ட விரோதம்: மும்பை ஐகோர்ட் தீர்ப்பு

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா மும்பை போலீசை கடுமையாக விமர்சித்தார். மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசினார். இதையடுத்து மும்பை பாலி ஹில் பகுதியில் உள்ள கங்கனாவின் வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறி மும்பை மாநகராட்சி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து அவர் நீதிமன்றத்த்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு வரும் முன்பு, அந்த வீட்டை பாதியளவுக்கு மும்பை மாநகராட்சி ஊழியர்கள் இடித்தனர்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 9ம் தேதி மும்பை மாநகராட்சி தனது வீட்டை இடித்ததை சட்டவிரோதம் என அறிவிக்க கோரியும் கட்டிடத்தை இடித்ததற்காக ₹2 கோடி இழப்பீடு வழங்கக்கோரி நடிகை கங்கனா மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் நீதிபதிகள் கத்தவாலா மற்றும் சகலா ஆகியோர் அடங்கி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

பாலி ஹில்லில் உள்ள நடிகை கங்கனாவின் பங்களாவை மும்பை மாநகராட்சி இடித்தது சட்டவிரோதமானது. இது தீங்கு செய்யும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை. கட்டிடத்தை இடித்ததற்காக நடிகை கங்கனாவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதே நேரத்தில் கங்கனா போன்ற பிரபலமானவர்கள் அரசுக்கு எதிராக டிவிட் செய்யும்போது சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது அவசியம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: