பாலே டான்ஸ் கற்பதற்கு ரிக்‌ஷாக்காரரின் மகனை லண்டனுக்கு அனுப்பும் ஹிரித்திக்

டெல்லியில் விகாஸ்புரி என்ற பகுதியை சேர்ந்தவர் கமல்சிங். 20 வயதான இவருக்கு பாலே டான்ஸ் என்றால் அதிக விருப்பம். இவரது அப்பா ரிக்‌ஷா ஓட்டுநர். கமல்சிங், படிப்பை முடித்துவிட்டு பாலே டான்ஸ் கற்று வந்தார். இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற லண்டனில் உள்ள ஆங்கில தேசிய பாலே நடனப் பள்ளியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது இவரது கனவு. இதற்காக இவர் விண்ணப்பமும் அனுப்பி இருந்தார். இந்நிலையில் அவருக்கு லண்டன் பாலே பள்ளியிலிருந்து அழைப்பு வந்தது. இந்தியாவிலிருந்து அப்பள்ளியில் நடனம் கற்க தேர்வான ஒரே நபர் கமல்சிங்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனுக்கு சென்று படிக்க ரூ.3 லட்சம் செலவாகும் என தெரிந்தது. இதை அறிந்து கமல்சிங்கின் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். குடும்ப வறுமை காரணமாக, அவர் லண்டன் செல்வது தடைபட்டது. இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானது. இது குறித்து அறிந்த ஹிரித்திக் ரோஷன், உடனே தனது மேனேஜர் மூலம் கமல்சிங்கை தொடர்புகொண்டார். அவரை லண்டனுக்கு அனுப்பி வைப்பதாகவும் உறுதி அளித்தார். இதை கேள்விப்பட்டு கமல்சிங் நெகிழ்ச்சி அடைந்தார். டெல்லியில் உள்ள கமல்சிங்கின் பாலே டான்ஸ் மாஸ்டர், ஹிரித்திக் ரோஷனுக்கு இன்ஸ்டாகிராமில் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: