விவசாயிகள் தொடர்பாக டிவிட்டர் பதிவு: நடிகை கங்கனா மீது அவமதிப்பு புகார்

விவசாயிகளை அவமதிக்கும் வகையில் டிவிட்டர் பதிவு வெளியிட்ட பாலிவுட் நடிகை கங்கனா ரனவத் மீது கர்நாடகா நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம் தொடர்பான வழக்கில், பாலிவுட் நட்சத்திரங்களை கங்கனா வெளிப்படையாக விமர்சித்து வருகிறார். இதனால் ஆளும் சிவசேனா தலைமையிலான அரசுக்கும், கங்கனாவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மும்பை பாந்த்ரா பாலி ஹில் பகுதியிலுள்ள கங்கனாவின் பங்களா, சட்டவிதிகளை மீறி கட்டப்பட்டது என்று கூறி, அதன் ஒரு பகுதியை 2 வாரங்களுக்கு முன் மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர். இதை எதிர்த்த கங்கனா, 2 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விவசாயிகளை அவமதித்ததாக கங்கனா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடும் விவசாயிகளை கங்கனா தனது டிவிட்டர் பதிவில் அவமதித்ததாக கூறப்படுகிறது. அதில், ‘உண்மையில் தூங்கினால் விழித்துக்கொள்ளலாம். ஆனால், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. வேளாண் மசோதா குறித்து அறியாதவர்கள் பாசாங்கு செய்கின்றனர்’ என்று, விவசாயிகளை அவமதித்து கடந்த 21ம் தேதி சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகாவை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் நாயக் என்பவர், கங்கனா மீது நடவடிக்கை எடுக்க கோரி, கர்நாடகா மாநிலம் தும்கூரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ‘வேண்டுமென்றே கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், ஆத்திரமூட்டும் பதிவுகளை கங்கனா ரனவத் வெளியிட்டுள்ளார். எனவே, அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக கர்நாடகா போலீஸ் டைரக்டர் (டிஜிபி) மற்றும் மற்றொரு மூத்த அதிகாரிக்கு கடந்த 22ம் தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அனுப்பியுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் கங்கனாவுக்கு எதிராக ெதாடரப்பட்ட புகார் மனுவை நீதிமன்றம் ஏற்றுள்ளதால், அந்த மனு மீதான விசாரணை விரைவில் தொடங்கும் என்று தெரிகிறது.

Related Stories: