தன்னை பற்றி செய்தி வெளியிட தடை கேட்டு நடிகை ரகுல் பிரீத் சிங் டெல்லி ஐகோர்ட்டில் மனு

போதை பொருள் வழக்கில் தன்னை பற்றிய செய்திகள் வெளியிட இடைக்கால தடை கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் மனு தாக்கல் செய்துள்ளார். பாலிவுட்டில் போதை பொருள் விவகாரம் சம்பந்தமான விசாரணை விஸ்வரூபம் எடுத்துள்ளது. நடிகைகள் தீபிகா படுகோன், ரகுல் பிரீத் சிங், ஸ்ரத்தா கபூர், சாரா அலிகான் உள்பட பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து ரகுல் பிரீத் சிங் தேசிய போதை மருந்து தடுப்பு துறை நடத்திய விசாரணையில் ஆஜரானார். இந்நிலையில், தனது புகழை கெடுக்கும் வகையில் செய்திகள் வெளியிடுவதாக ஊடகங்கள் மீது புகார் கூறிய அவர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘’கடந்த 24ம் தேதி எனக்கு வாட்ஸ்அப் மூலம் சம்மன் கிடைத்தது. அடுத்த நாள் என்சிபி முன் ஆஜராகி, எழுத்து மூலம் விளக்கம் அளித்தேன். ஆனால், என்னை பற்றி தவறான பல செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன. ஏற்கனவே என்சிபிக்கு நான் அளித்த வாக்குமூலம் நீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. அது வெளிவராத நிலையில், என் புகழை கெடுப்பது போல் ஊடகங்கள் தவறான செய்திகள் வெளியிட்டு வருகிறது. எனவே, இந்த வாக்குமூலம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் வரை, இந்த வழக்கில் என்னை பற்றிய எந்த செய்தியையும் ஊடகங்கள் வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: