ஜோதிடமும் உங்கள் பெயரும்...

ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்

பகவத் கீதையில் அர்ச்சுனன் கிருஷ்ண பரமாத்மாவிடம், ‘‘வாழ்க்கை என்றால் என்ன?’’ என கேள்வி எழுப்புகிறார். அதற்கு கிருஷ்ண பரமாத்மா, ‘‘மனிதன் பிறக்கும்போது, பெயரில்லாமல் மூச்சுக்காற்றுடன் பிறக்கிறான். இறக்கும்போது மூச்சுக்காற்றில்லாமல் பெயருடன் இறக்கிறான். மூச்சுக்காற்றுக்கும் பெயருக்கும் இடைப்பட்ட காலமே வாழ்க்கை’’ என உபதேசம் செய்கிறார். எவ்வளவு அழுத்தமான தத்துவார்த்தமான உண்மை. இவ்வுலகில் உள்ள அனைத்து உயர்திணை மற்றும் அஃறிணைகள் யாவும் கிரகங்களின் கட்டுப்பாட்டிற்குள்தான் இருக்கின்றன.

அந்த கிரகங்களின் அடிப்படையில்தான் பெயர்களும் அமையும். அந்த கிரகங்கள்தான் அந்த பெயர்களை சூட்டுவதற்கு காரணமாகவும் காரியமாகவும் இருக்கிறது. கிரகங்களை கடந்து நாம் எதையும் செய்ய இயலாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. அந்த நாளின் பெயரை அந்த கிரகங்கள்தான் தங்களின் ஆதிக்கத்தில் வைத்திருக்கின்றன என்பது முற்றிலும் உண்மை. இது மிகையல்ல. எந்தக் கிழமை வருகின்றதோ, அன்றைய நாளில் அந்த கிரகத்தின் கதிர்வீச்சுகள் இந்த பூமியில் அதிகம் என்பதே விஞ்ஞானமாகும். ஏன் ஜோதிடத்தை பெயர்களோடு தொடர்புபடுத்தி அறிந்து கொள்ள வேண்டும்? ஜோதிடத்தில் பல வழிமுறைகள் உண்டு. எல்லா வழிமுறைகளிலும் ஓர் உண்மை உண்டு.

இதையும் கிரகங்கள்தான் செய்கின்றன. எப்படி? ஓரிடத்திற்கு செல்வதற்கு பல வழிகள் உண்டோ அது போல ஜோதிடத்திலும் பல வழிகள் உண்டு. கே.பி முறை, நாடி ஜோதிட முறை, பாரம்பரிய ஜோதிட முறை போல NKV முறையும் உண்டு. இந்த NKV முறையை முறையாக அனுபவத்தோடு கொடுத்தவர் குருநாதர் திரு. நெல்லை வசந்தன்.

இவர் மட்டுமே இந்த முறையை ஏன் கொண்டு வந்தேன்? என்பதை தெளிவாக விளக்கி உள்ளார். அதன்படி, பஞ்சாங்கங்களில், வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கணிதப் பஞ்சாங்கம் என இன்னும் நிறைய உண்டு. இவைகளில் கணித்து பலன் கூறும் போது, சில வித்தியாசங்கள் ஏற்படுவதுண்டு. அதனை சரி செய்யவும், ஒருவரின் சரியான லக்னத்தை தேர்வு செய்யவும், பெயர்களை கொண்டு சரி செய்யும் முறையை உருவாக்கினார். அதற்கு ஜீவலக்னம் எனப் பெயரிட்டு அதனைக் கணித்து, துல்லியமான பலன்களை வெளிப்படுத்தி நிரூபித்துள்ளார். ஜீவலக்னத்தை அறிந்து கொள்வதற்கு பெயர்கள் எளிமையாக நமக்கு வழிகாட்டும்.

பெயர்களுக்கும் கிரகங்களுக்கும் தொடர்புண்டா?

நம் முன்னோர்கள் தங்கள் சந்ததிகளுக்கு கடவுளின் நாமத்ைதயே சூட்டினர். அப்படி அவர்கள் கடவுளின் நாமத்தை சூட்டுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அப்படியாவது, பெயரை வைத்து அழைக்கும்போது, கடவுளின் நாமத்தை உச்சரிப்பதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அவ்வாறு செய்தனர். ஆனால், இந்த கடவுள்கள்தான் கிரகங்களை கட்டுப்படுத்தும் அதிதேவதைகளாக இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, ராஜா என்ற பெயர் சூரியனை மையப்படுத்தியும், ராணி என்ற பெயர் சந்திரனை மையப்படுத்தியும் இருக்கும். இப்படி பெயர்களுக்குள்ளும் கிரகங்கள் தொடர்பு கொள்கின்றன. ஆதலால், இப்படித்தான் பெயர்களுக்குள்ளும் கிரகங்கள் வியாபித்துவிடுகின்றன.

பெயர்களை மாற்றினால் வாழ்வில் முன்னேற்றத்தை அடைய முடியுமா?

இன்று சினிமாத்துறையில் உச்சபட்ச முன்னேற்றத்தை அடைந்தவர் நடிகர் ரஜினிகாந்த். அவரின் உண்மையான பெயர் வேறு. அவர் சினிமாத் துறைக்கு வந்தபோது பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த பெயர் மாற்றம் அவரின் முன்னேற்றத்திற்கு இயற்கையாகவே வழியாக இருந்தது. அந்த பெயரே இன்றளவும் அவருக்கு முன்னேற்றம் தந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இதைவிட என்ன உதாரணம் உங்களுக்கு சொல்லிவிட முடியும். இன்றளவும் பெயர்களை மாற்றிக் கொண்டு வெற்றியாளராக உள்ளவர்கள் ஏராளம்.

வெற்றியை நோக்கி பயணிப்பவர்களுக்கு இயற்கையாக பெயர்களும் மாற்றம் பெறலாம் அல்லது மாற்றம் பெறும். காலம் அந்த பணியை தவறாது செய்யும். சிலருக்கு உண்மையான பெயர்களைவிட பட்டப் பெயர்களோ புனைப் பெயர்களோ சொன்னால்தான் அறிந்து கொள்ள முடியும். அந்தளவிற்கு அவர்களை பெயர்கள் இறுகப் பிடித்துக்கொள்கிறது.

குழந்தைகளுக்கு  எப்படி பெயர் சூட்டலாம்?

குழந்தை பிறந்த நேரத்தில் லக்னத்தின் அடிப்படையில் 5-ஆம் அதிபதி மற்றும் 9-ஆம் அதிபதியின் பெயர்களையோ அல்லது வலிமையான சுபத்தன்மையுடைய கிரகத்தின் பெயர்களை சூட்டும் பொழுது அவர்களின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். அவர்களின் குணங்களும் அந்த கிரகத்தின் தன்மைகளாகவே இருக்கும் என்பது ஜோதிடத்தின் விதி. சில நேரங்களில் இயற்கையாகவே அப்படித்தான் பெயர்களும் அமையும். அந்தப் பெயர்களை நாம் சூட்டுவதல்ல, இயற்கைதான் நமக்கு விதிக்கிறது.

பெயர்களை மாற்றும் தன்மை கிரகங்களுக்கு உண்டா?

சிலருக்கு இரண்டு மூன்று பெயர்கள் உண்டு. குழந்தைக்கு தாத்தாவின் பெயரை வைத்திருப்பர். அந்தப் பெயரை சென்ற தலைமுறை பாட்டிகள் அழைப்பதற்கு இணங்கமாட்டார்கள். அது கணவனை அவமானப்படுத்துவதாக நினைத்து தாங்கள் ஒரு பெயரை வைத்து பேரனை அழைப்பர். அப்படியும் காலங்கள் கடந்து ஆவணங்களில் ஒரு பெயர் வந்து அமர்ந்து கொள்ளும். பின்பு வேறு வழியில்லாமல் அந்தப் பெயரையே எடுத்துக்கொள்வர். இவர்கள் பிறந்த ஜாதகத்தில் சந்திரனின் நட்சத்திரத்திலோ அல்லது செவ்வாயின் நட்சத்திரத்திலோ பிறந்திருப்பர். அச்சமயம் ராகு திசை ஆரம்பமாகும் சமயத்தில் இவர்கள் பதின்பருவத்தை அடைந்திருப்பர். இவர்களின் பெயர் ஆவணங்களில் தானாக மாறும். அவ்வாறு மாறியதை அவரவரின் அனுபவத்தில் உணரலாம். பெயர்களை மாற்றும் தன்மை ராகுவிற்கும் உண்டு கேதுவிற்கும் உண்டு.

வீட்டில் உள்ள வளர்ப்புப் பிராணிகளுக்கு என்ன பெயர் சூட்டலாம்?

குடும்பத்தில் வளர்ப்புப் பிராணிகளுக்கு வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் நான்காம் வீட்டு அதிபதியின் பெயர்களை இணைத்து பெயர் வைக்கலாம். அப்படி சூட்டப்பட்ட பெயர்கள் அவர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் அல்லது வீட்டிற்கு அந்த வளர்ப்புப் பிராணி பாதுகாப்பாக இருக்கும். சிலர் முரண்பாடான பெயர்களை வைத்து அந்த பிராணிகள் அவர்களை ஒரு வழி செய்து விடுகிறது. ஏனெனில், அவரின் நான்காம் இடத்து கிரகங்கள் மிகவும் அசுபமாக இருக்கும் பட்சத்தில் அந்தப் பெயர்கள் கொண்ட பிராணிகள் மிகவும் சுட்டித்தனமாக குறும்புகள் செய்து வீட்டில் இருப்பவர்களை ஒரு வழி செய்துவிடும்.

வணிகத்தில் பெயர்கள்

வணிகத்தில் பிராண்ட் எனச் சொல்லக்கூடிய ஒரு பொருளின் தரம் மற்றும் வியாபாரத்தில் பெயர்களே முக்கியத்துவம் பெறுகின்றன. எந்தப் பெயர்களை வைத்தால் வியாபாரம் வளர்ச்சி பெறும் போன்றவை முக்கியத்துவம் பெறுகின்றன. நிறுவனங்களின் பெயர்கள் நிறுவனருக்கு லாபதியாகவோ பாக்யாதிபதியாகவோ இருப்பின் வளர்ச்சியை நோக்கி பயணிக்கின்றனர்.

* அம்பாசிடர் என்ற கார் நிறுவனம் தன் சேவையை தொடரவில்லை. ஆனால், இன்று அந்த காரினை உபயோகப்படுத்துபவர்கள் ஏராளம். இந்த நிறுவனம் கார் சேவையை எப்பொழுது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகம். அதற்கு அந்த காரின் பிராண்ட் பெயரும் முக்கியத்துவம் பெறுகிறது.

* இந்தியாவின் புகழ் பெற்ற நிறுவனம் ஒன்று எல்லாத் தொழில் துறைகளிலும் புகழ் பெற்று விளங்குகிறது. உற்பத்தி மற்றும் விற்பனையில் இந்த நிறுவனம் கால் பதிக்காத துறையே இல்லை. அப்படி வளர்ச்சி அடைவதற்கு தொழிலுக்கு அதிபதியான சனி கிரகத்தின் ஆற்றலே அந்த நிறுவனத்தின் பெயராக இருக்கிறது. சனிதான் ஒருவருக்கான தொழிலை வளப்படுத்துவார், தருவார்.

* அதிசயம் என்ற நதி பெயரைக் கொண்ட நிறுவனம்தான் இன்று பொருட்களை வாங்கி விற்கும் ஆன்லைன் வர்த்தகத்தில் உலகளவில் கொடிகட்டிப் பறக்கிறது. அந்தப் பெயருக்கு பெரிய மார்க்கெட் ஏற்படுத்தி மக்களுக்கே ஆச்சர்யத்தை தருகிறது. இப்படி ஏராளமாக சொல்லிக்கொண்டே போகலாம்...  

ஜோதிடத்தில் பெயர்களை வைத்து என்ன அறிந்து கொள்ளலாம்

* நீங்கள் வெற்றியாளராக இருப்பதற்கு, எந்த பெயருடைய நபர் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்.

* உங்கள் பெயரால் நீங்கள் பெற்ற நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? ஆம், சிலருக்கு எப்பொழுது சில உடல் உபாதைகள் இருக்கும். அதை அறிந்து கொள்ளலாம். சிலருக்கு முயற்சிகள் இல்லாமலே சில காரியங்கள் நடந்தேறும். அதற்கான காரியத்தையும் அறிந்து கொள்ளலாம்.

* எந்த தொழிலை நீங்கள் தொடர்பு கொண்டு இருக்கிறீர்களோ அந்த வணிகத்திற்கு என்ன பெயர் சூட்டலாம் என்பதை அறியலாம்.

* சில பெயர்கள் குடும்பத்தில் உள்ள மற்ற பெயர்களை கொண்டு வரும். அந்த பெயருள்ள நபர்கள் எப்பொழுதும் அவர்களுடன் தொடர்பில் இருப்பர்.

* உங்களின் பெயர்களோடு நீங்கள் வழிபடும் அதிதேவதையோடு அடிக்கடி தொடர்பில் இருப்பீர்கள் என்பதை அறியாமல் தொடர்பில் இருப்பீர்கள் என்பதே இயற்கை. அந்த தேவதைகளை வழிபட்டால் உங்களுக்கு வழி இருக்கும்.

* திருமணம் தொடர்பான கேள்விகளுக்கு இந்த வரனுக்கு எந்தப் பெயருடைய வரன் அமையலாம் என அறிந்து கொள்ளலாம். இவ்வளவு வாசித்த பின்பும் ஜாதகக் கட்டத்தில் உங்கள் பெயரை தேடுகிறீர்களா? உங்கள் பெயர் எங்குள்ளதோ, அதாவது, எந்த பாவத்தில் உள்ளதோ அங்குதான் உங்கள் கர்மா உங்களை வழிநடத்துகிறது என்பதை உணரும் தருணம் உண்மை புரியும்.

Related Stories: