ராமனின் வருத்தம் தீர்த்த கிருஷ்ணன்

கோகுலம் கோலாகலம் பூண்டது. ஆமாம், இந்திர விழாவிற்கான எல்லா ஏற்பாடுகளும் அனைவரது உற்சாக பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன. ஆயர்பாடியின் ஆனந்தத்துக்கு காரணம் புரியாமல் கிருஷ்ணன் வியந்தான். ஆனால் அது இந்திரனைப் போற்றும் விழா என்றதும் சற்றே கோபம் கொண்டான். எதிர்பாராத வகையில் அவனுடைய சினத்தைக் கண்ட மக்கள், ‘கண்ணா, இந்திரன் ஐம்பூதங்களுக்கும் அதிபதி. அவனருளால்தானே ஆகாயம் மழை பொழிகிறது, நீர்வளம் பெருகுகிறது, அக்னி ஒளிர்கிறது, காற்று வீசுகிறது, பூமி செழிக்கிறது? ஆகவே இவற்றுக்கெல்லாம் மூலவனான இந்திரனை பூஜிப்பது முறைதானே?’ என்று கேட்டார்கள். உடனே கிருஷ்ணன், உஷ்ணமானான்.

‘அப்படி ஒன்றும் இல்லை. அவன் தேவர்களுக்கெல்லாம் அரசனாக இருக்கலாம், ஆனால் பஞ்சபூதங்கள் அவனை அடிபணிவது ஏற்புடையதல்ல,’ என்று சொன்னான். ‘அவற்றை மக்களின் தேவைக்கேற்ப இயக்குவது மட்டுமே அவனுடைய வேலை என்றுதான் நாம் பாவிக்க வேண்டுமே தவிர, அவற்றுக்கெல்லாம் தலைவனாக்கி அவனைக் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை…’ என்றான். ஆயர்பாடி மக்களுக்கு அவனுடைய கடுமையான சொற்கள் வித்தியாசமாக இருந்தன. காளிங்க நர்த்தனம் புரிந்தவன், புள் வாய் பிளந்தவன், பூதகியின் உதிரம் உறிஞ்சி உயிர் பறித்தவன், விருட்சமாய் நின்ற இரட்டை அரக்கர்களை வீழ்த்திய அவன், கிட்டத்தட்ட அதே கோபத்தில் இந்திரனையும் நோக்குவது ஏன்? என்று அவர்களுக்குப் புரியவில்லை.

ஆனாலும், தம்மை பலவகையான ஆபத்து களிலிருந்து காத்த அவன், பாலகனே ஆனாலும் தம் பாதுகாவலன் என்ற உண்மையை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்த அவர்கள், அவன் கூற்றில் ஏதோ உள்ளர்த்தம் பொதிந்திருப்பதை அறிந்து, அப்போதே தாம் மேற்கொண்டிருந்த பணிகளை அப்படியே அரைகுறையாக நிறுத்திவிட்டார்கள். இதைக் கேள்விப்பட்ட இந்திரன், ஆணவக் கோபம்கொண்டான். ஒரு பாலகன் தனக்கு நடக்கவிருக்கும் விழாவைத் தடுத்து நிறுத்துவதா? என்று கடுஞ்சினம் கொண்டான்.

உடனே வருணனை அழைத்து, கோகுலமே மூழ்கும்படியாக கனமழை பொழியக் கட்டளையிட்டான். அவ்வாறே பிரளயம்போல ஆயர்பாடியை ஆக்கிரமிக்க பெருமழை வானிலிருந்து வீழ்ந்தது. மக்கள் அனைவரும் திடுக்கிட்டார்கள். தமது வீடுகளில் வெள்ளம் புகுவதை அறிந்து வெளியே வந்தார்கள், வீதிகளில் ஓடினார்கள். முதியோர், இளையோர், பாலகர்கள் என்று அனைவரும் தம்மைக் காத்துக்கொள்ள வழிதேடி அலைந்தார்கள். கிருஷ்ணன் பார்த்தான். தன் சொற்கேட்டு இந்திர விழாவைப் புறக்கணித்த மக்களை அவன் பழிவாங்குவதை உணர்ந்தான்.

உடனே ஊர்மக்கள் அனைவரையும் அழைத்தான். இவர்கள் ஓடிப் போய் அவனைச் சேர, அவர்களைப் பின்தொடர்ந்தன கால்நடைகள் எல்லாம். அனைவரும் ஒருசேரக் கூடியபின், கிருஷ்ணன் அங்கிருந்த கோவர்த்தன மலையை அப்படியே பெயர்த்தெடுத்தான், அதன் பரந்த அடிப்பகுதியின் மையத்தைத் தன் சுண்டுவிரலால் தாங்கிக்கொண்டான். ஊரையே மழையிலிருந்து காக்கும் பேரண்டக் குடையாக அது விளங்கியது.

ஏழு நாட்கள் மழை சீறி சினந்தாலும், கண்ணனின் காலடியில் மக்கள், மாக்கள் எல்லோருமே பாதுகாப்பை உணர்ந்து நிம்மதி கொண்டிருந்தார்கள். சலித்துப்போன வருணன், தன்னால் ஆயர்குல மக்களைத் தீண்டவே முடியாதபடி கிருஷ்ணன் அரண் குடை பிடித்திருப்பதை இந்திரனிடம் மிகுந்த சோகத்துடன் தெரிவித்தான். இதற்கிடையில் கிருஷ்ணனின் பிற பராக்கிரமங்களையும் அறியவந்த இந்திரன், ஓடோடி வந்து அவனிடம் சரணாகதி அடைந்தான். கிருஷ்ணனின் பாதங்களில் வீழ்ந்த அவன், சற்று மேலே நிமிர்ந்து பார்த்தபோது, அங்கே கிருஷ்ணனுக்கு பதிலாக ஸ்ரீராமன் கையில் கோதண்டத்துடன் நின்றிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டான்.

‘ராமனா, கிருஷ்ணனா…’ என்ற வியப்புக் குழப்பத்தில் தவித்திருந்த இந்திரனைப் பார்த்து (ராம) கிருஷ்ணன் சொன்னான்:  ‘‘இந்திரா, என் ராமாவதாரத்தின்போது கௌதம முனிவரின் சாபத்தால் கல்லாகிக் கிடந்தாள் அகலிகை. மாற்றான் மனைவி என்று கொஞ்சம்கூட நாகரிகம் பார்க்காமல் அவளைத் தீண்டியவன் நீ. அப்பாவியான அவளும், தன் கணவர் கௌதம முனிவராக நீ உருமாறி வந்ததில் ஏமாந்து, மயங்கினாள். ஆனால் அங்கே முனிவரே வந்துவிட, உண்மை தெரிந்து அப்போதே இறந்தவள் போலானாள் அகலிகை. அடாத செயல்புரிந்த உன்னைச் சபித்தார். கூடவே, தன் மனைவியையும் உணர்வற்ற ஒரு கல்லாக மாறும் படி சாபமிட்டார் முனிவர். அந்த அகலிகைக்கு என் பாதத் தூசியால் விமோசனம் கொடுத்தேன் நான்….

‘‘ஆம் ஐயனே, நான் அந்தச் சம்பவத்தை அறிவேன்,’’ என்று குற்ற உணர்ச்சியுடன் சொன்னான் இந்திரன். ‘‘ஆனால் என் பட்டாபிஷேகத்தின் போது, வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காசிபர், காத்யாயனர், சுயக்ஞர், கௌதமர், விஜயர் ஆகிய எட்டு முனிபுங்கவர்கள் எனக்கு அபிஷேகம் செய்ததை, உனக்கு உன் கட்டுப்பாட்டில் இருக்கும் அஷ்ட வசுக்கள் அபிஷேகம் செய்தது போல இருந்தது என்ற வர்ணனை என்னை மிகவும் புண்படுத்திவிட்டது. ஏக பத்தினி விரதனான என்னை பலதாரப் பித்தனான உன்னுடன் ஒப்பிட்ட விதம் என்னை அவமானப்படுத்திவிட்டது…

‘‘ராம (கிருஷ்ணனை) முடிக்க விடவில்லை இந்திரன். ‘‘ஆனால், அது வால்மீகி முனிவர் எழுதிய வர்ணனை அல்லவா, நான் அதற்கு எப்படிப் பொறுப்பாவேன்?’’ என்று பரிதாபமாகக் கேட்டான். ‘‘உண்மைதான், வால்மீகியார் அப்படி ஒப்பீடு செய்ததில் எனக்கு உடன்பாடில்லைதான். ஆனால், அதற்குக் காரணமானவனாக நீ இருந்திருக்கிறாய் என்ற கோபம் என் மன அமைதியை இழக்கச் செய்தது. அப்போதைக்கு வால்மீகியாரை என்னால் எதிர்க் கேள்வி கேட்க இயலவில்லை. ஏனென்றால் அதுதான் என் சுபாவமாக இருந்தது.

கானகத்துக்குப் போகச் சொன்ன தாயார் கைகேயியை நான் மறுத்துப் பேசவில்லை, என்னுடன் கானகத்துக்கு வருவேன் என்று அடம் பிடித்த மனைவி சீதையை அனுமதித்தேன். அவள் விரும்பிக் கேட்டாளே என்பதற்காக பொன்மானை விரட்டிச் சென்றேன். அவளைத் தேடிச் சென்றபோது எதிர்பாராத விதமாக வாலியை மறைந்திருந்து வதம் செய்ய வேண்டிய சூழ்நிலையையும் ஏற்றுக் கொண்டேன். இவ்வளவு ஏன், நிராயுதபாணியாக நின்ற ராவணனை, அது போர்க்களமே என்றாலும், இறுதி வாய்ப்பு கொடுக்கும் வகையில் அன்றுபோய் மறுநாள் வருமாறு மன்னித்து அனுப்பி வைத்தேன். இப்படி மென்மை மனம் கொண்டவனாகவே நான் அந்த அவதாரத்தில் நடந்து கொண்டேன்.

ஆனால், எக்காலத்திலும் பிறன்மனை விழைதலை மட்டும் என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. ஆகவே உனக்கு ஏதாவது தண்டனை அளிக்க வேண்டும் என்று அப்போதே மனதுக்குள் முடிவெடுத்தேன். அதனை இந்த கிருஷ்ணாவதாரத்தின்போது நிறைவேற்ற முடிந்திருக்கிறது.’’இந்திரன் தலைகுனிந்தான். ‘‘ஆணவச்செருக்கு கொண்டிருந்ததால்தான் பிறருடைய மனைவியை வெகு துச்சமாக உன்னால் எண்ண முடிந்திருக்கிறது.

அதேபோன்ற ஆணவத்தால்தான் ஐம்பூதங்களுக்கும் தலைவன் என்று சொல்லிக்கொண்டு அப்பாவி மக்களை பரிதவிக்கவிடும் கிராதகனாகவும் நீ மாறியிருக்கிறாய். ஆகவே போன அவதாரத்துக் கடனை இந்த அவதாரத்தில் நான் தீர்த்திருக்கிறேன். மனதிலிருந்து செருக்கை அகற்றி, உன் பதவியால் மக்களுக்கு என்னவெல்லாம் நன்மை செய்ய முடியுமோ அவற்றை மட்டும் செய்,’’ என்று நிறைவாக அறிவுறுத்தினான் ராம (கிருஷ்ணன்).  சென்னை பெரம்பூரில் கல்கி ரங்கநாதன் பள்ளி வளாகத்தில் திருமதி பத்மஜா ராஜ்குமார் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து ஒரு பகுதி.

தொகுப்பு: பிரபு சங்கர்

Related Stories: