வசந்தமான வாழ்வளிக்கும் வசந்த பஞ்சமி

ஒவ்வொரு மாதமும் அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை உள்ள காலத்தை வளர்பிறை என்றும் (சந்திரன் ஒளி வளர்ந்து வருவதால்) பௌர்ணமி முதல் அமாவாசை வரை உள்ள காலத்தை தேய்பிறை என்றும் (சந்திரன் தன் ஒளியை இழந்துவருவதால்) பெரியோர் வகுத்துள்ளனர். வளர் பிறையில் ஐந்தாம் நாளாகவும், தேய்பிறையில் ஐந்தாம் நாளாகவும் வரும் பஞ்சமி திதி மிகுந்த சிறப்புள்ளதாகும். இவற்றில் கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, வசந்த பஞ்சமி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

ஆவணி மாதத்தில் விநாயகர் சதுர்த்திக்கு மறுநாளில் வரும் வளர்பிறை பஞ்சமியை கருட பஞ்சமி என்றும், புரட்டாசியில் வரும் வளர்பிறை பஞ்சமிக்கு ரிஷி பஞ்சமி என்றும் பெயர். தை மாதத்தில் சியாமளா நவராத்தியை ஒட்டி வரும் வளர்பிறை பஞ்சமியை வசந்த பஞ்சமி என்று அழைக்கின்றனர். குளிர்காலம் முடிந்து அடுத்து வரவிருக்கும் வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுவதால், வசந்த பஞ்சமி என்று இந்நாள் அழைக்கப்படுகிறது.

வசந்த பஞ்சமிக்கு பல சிறப்புகள் உள்ளன. கல்வி, கேள்வி, ஞானம், வாக்குவன்மை போன்ற ஆய கலைகள் அறுபத்து நான்கினுக்கும் தலைவியாய் விளங்கும் சரஸ்வதி தேவியின் அவதாரத் திருநாளாக இந்த நாள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த நாளில் கல்விக் கடவுளான சரஸ்வதி தேவியை பூஜித்து வழிபட்டால், அவள் அருளால் கலைகளில் சிறப்பு பெறுவதோடு, நம் உள்ளத்தில் இருக்கும் அஞ்ஞான இருள் நீங்கி, வசந்தம் வீசும் என்பது ஐதீகம். தமிழகம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இந்த நாள் அதிக முக்கியத்துவம் பெறுவதில்லை. ஆனால், தமிழகத்தில் சரஸ்வதி வழிபாடு என்பது புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரியை ஒட்டி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆனால், வட நாட்டில் நவராத்திரியை துர்க்கா பூஜையாக கொண்டாடுவார்கள். அதனால் வசந்த பஞ்சமி தினத்தைத்தான், வடநாட்டினர் சரஸ்வதியை வழிபடுவதற்கான விழாவாகக் கொண்டாடுகின்றனர். குறிப்பாக மகாராஷ்டிரம், பஞ்சாப், அரியானா, மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா, ஒடிசா போன்ற இடங்களில் இந்த வசந்தகாலத் துவக்கத்தில் சரஸ்வதிதேவியை வழிபடும் வழக்கம் நிலவுகிறது. வசந்த பஞ்சமி அன்று புனித நதிகளில் நீராடி சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் ஆடை, மஞ்சள் மலர்களால் மாலை அணிவித்து தாங்களும் மஞ்சளாடை அணிந்து பூஜை செய்து வழிபடுகின்றனர். அன்றைய எல்லா இடங்களிலும் மஞ்சள் வண்ணம் அதிகம் இடம் பெறும்.

பஞ்சாப் மாநிலத்தில் இந்த காலகட்டத்தில்தான் கடுகு செடியில் மஞ்சள் நிறப்பூக்கள் பரவலாக பூத்துக் குலுங்கும். இந்த நாளில் அம்பிகைக்கு படைக்கும் நிவேதனங்களும் மஞ்சள் வண்ணத்தில் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. காஷ்மீர் மாநிலத்தில் வசந்த திருவிழாவாக இது கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் முன் காலத்தில் `காமன் பண்டிகை’ என்ற பெயரில் வசந்த பஞ்சமி கொண்டாடப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணர் எல்லா மாணவர்களைப் போல குருகுல வாசம் சென்று கல்வி கற்ற முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இந்த நாள் கருதப்படுகிறது.

பொதுவாகவே பஞ்சமி திதி என்பது சப்த மாதர்களில் ஒருத்தியாகத் திகழும் வாராஹி தேவியை வழிபடுவதற்கு உரிய நாள். எனவே சியாமளா நவராத்திரி காலத்தில், வசந்த பஞ்சமி திதியில், சரஸ்வதிதேவியுடன் வாராஹி அம்பிகையையும் மனமுருக, ஆத்மார்த்தமாக வழிபட்டால், துஷ்ட சக்திகள் அண்டாது. எதிர்ப்புகள் தவிடுபொடியாகும். இல்லத்தில் இதுவரை தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள், மங்கல விசேஷங்கள் தடையின்றி நிகழும். இல்லத்தில் தனம் தானியம் பெருகும்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் ஆயிரக்கணக்கான இந்து திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. குஜராத் மாநிலங்களில், இளைஞர்கள் பல வண்ணப் பட்டங்களை காற்றில் பறக்கவிடுவார்கள். பாகிஸ்தானிலும் இன்று பட்டம் விடும் பழக்கம் உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் புஷ்கரில் உள்ள பிரம்மா - சரஸ்வதி கோயில், கர்நாடகத்தில் உள்ள உடுப்பி கிருஷ்ணர் கோயில், ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன் நாதர் கோயில் ஆகிய தலங்களில் வசந்த பஞ்சமி திருநாள் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இத்தகைய சிறப்புமிகு வசந்த பஞ்சமி தினம் இந்த மாதம் 26-ஆம் தேதி இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட இருக்கிறது. நாமும் அன்று அம்பிகையை வழிபட்டு அவள் அருள் பெறுவோம்.

Related Stories: