கஜாரூடராக காட்சி தந்த கந்தவேலன்

நெடியம், திருவள்ளூர்

குன்றுகள் என்றாலே குதூகலம்தான் குகனுக்கு. அந்த குன்றுகளில் குமரன் புரிந்த விளையாடல்களோ ஏராளம். அதிலும் கந்தன் வள்ளியை மணம் முடித்த தணிகாசலமும், அதையொட்டி வள்ளி கல்யாணத்திற்கு தொடர்புடைய திருத்தலங்களும் எண்ணற்றவை. அதுபோல திருத் தணியைச் சுற்றிலும் ஆறுமுகனின் பாதம் பதிந்த மலைகளும் சற்று கூடுதல்தான். அப்படி மால்மருகனின் பாதம் பதிந்த அற்புத மலைத்தலம்தான் நெடியம். நெடிதுயர்ந்து காணப்படுவதால் இந்த மலையின் பெயர் நெடியம் என்றானது. யானை படுத்திருப்பது போன்ற தோற்றத்தில் உள்ள இந்த மலை, யானைமலை என்றும், கஜகிரி என்றும் போற்றப்படுகின்றது.

‘‘நிலைபெறுந் திருத்தணியில் விளங்கு சித்திர நெடிய குன்றில் நிற்கும் முருகோனே’’.... என அருணகிரிநாதர் திருத்தணிகை திருப்புகழில் இந்த நெடிய மலையையும் இணைத்து பாடியுள்ளது சிறப்பு. சமர்புரிந்து குறவர் கூட்டத்தாரிடம் இருந்து (போர் புரிந்து) வள்ளியை கவர்ந்து வந்த கந்தன், போர்புரிந்த சினம் அடங்காமல் இந்த நெடிய மலையின்மீது கால் ஊன்றுகின்றார். வேலனது சினத்தைத் தாங்காத நெடியமலை பிளவுற்று, சற்று கீழிறங்கியது.

அதன் பின், தணிகைமலையில் கால்பதித்த குமரன் சினம் தணிந்து, வள்ளியை கரம் பிடிக்கின்றார். குமரனின் பாதம் பதிந்த மகிமையினை அறிந்த இந்திரன், இந்த மலைக்கு வந்து கந்தனை பிரதிஷ்டை செய்து, கல்ஹார புஷ்பத்தினால் பூஜிக்கின்றார். மகிழ்ந்த கார்த்திகேயன், காட்சி தந்தருள்கின்றார். முருகனின் திவ்ய திருக்காட்சி கண்ட தேவர்கோன், தனது ஐராவத யானையை கந்தனுக்கு பரிசளிக்கின்றான். அதை ஏற்ற கந்தன், மீண்டும் யானை மீது அமர்ந்தபடி மேற்கு முகமாக திருக்காட்சி அளிக்கின்றார்.

இதனால் கந்தனுக்கு ‘‘கஜாரூடர்’’ என்கிற பெயர் உண்டானது. கந்தனது அற்புத திருக்கோலங்களில் இதுவும் ஒன்றாகும். யானையை பரிசு தந்த தேவேந்திரன், தனது ஐராவதமின்றி கலையிழந்த நிலையில் தேவலோகம் செல்ல, ஐராவதம் இல்லாத தேவர் உலகமும் கலையிழந்தது. இதனால் ஏனைய தேவர்களின் ஏச்சுக்கும் ஆளாகின்றான் இந்திரன். இந்த நிலையை தேவேந்திரன் தேவசேனாபதிக்கு எடுத்துரைக்க, வள்ளிமணாளன் மேற்குத் திசையிலிருந்து கிழக்குத் திசையான இந்திரதிசைக்கு ஐராவதத்தை திருப்புகின்றார்.

கந்தனின் கருணையாலும், தெய்வீக ஒளியாலும் இந்திரனும், இந்திர உலகமும் ஒளி பெற்றதாக இந்த தலத்தில் நடந்த சம்பவங்களை தணிகாசல புராணம் விரிவாக விவரிக்கின்றது. திருத்தணி, இளையனார் வேலூர், செய்யூர் மற்றும் திருமாகறல் போன்ற தலங்களில் ஐராவத கஜாரூட கோலத்தில் கந்தனை தரிசிக்கலாம். பல திருத்தலங்களில் முருகனுக்கு யானை வாகனம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 600 படிகள் கொண்ட மலைமீது தனிக்கோயில் கொண்டுள்ளார் கந்தன். கார்வேட்டு மகாராஜாவால் கட்டப்பெற்ற ஆலயம் அழகுற அமைந்துள்ளது.

இந்திரன், இத்தல முருகனை செங்கலுவ (தெலுங்கில்) என்னும் நீலோத்பல மலரால் பூஜித்ததால், ‘‘செங்கல்வராயர்” என்கிற திருப்பெயருடன் திகழ்கின்றார். இங்கு மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் முருகன் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டுள்ளார். இடது கரத்தை இடுப்பில் மடித்தபடி கடியஸ்தராக திருக்காட்சி தருகின்றார். வள்ளி மற்றும் தெய்வானை உடன் உள்ளனர். வள்ளி - தெய்வானை உடனான ஷண்முகர், ஸ்ரீபாலசுப்பிரமணியர், கணபதி, காலபைரவர், திரிபுரசுந்தரி உடனுறை திருக்குமாரேஸ்வரர், சுமித்ரேஸ்வரர், ஸ்ரீசண்டேஸ்வரர், ஸ்ரீசூரியன், திருமால், மகாலட்சுமி, கருடாழ்வார் ஆகிய தெய்வங்களும் ஆலயத்தின் பரிவாரங்களாக அமைந்துள்ளன.

கிருத்திகையில் சிறப்பு அபிஷேக - அலங்காரங்கள் செய்விக்கப்படுகின்றன. ஆடிக் கிருத்திகையில் காவடி எடுத்துக்கொண்டு பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். பங்குனி உத்திர பிரம்மோற்சவம் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. ஆங்கில வருடப் பிறப்பன்று கந்தன் சந்தனக் காப்பில் கண்கொள்ளாத காட்சி அளிப்பார். இங்கு ஆலயத்தில் விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுகள் பெருமளவில் காணப்படுகின்றன. இந்திரன் கண்ட சுனை நீலோத்பல தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்றது. இதுவே இந்த தலத்தின் தீர்த்தமாகத் திகழ்கிறது. மேலும், இரண்டு சுனைகளும் இங்குள்ளன.

தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரை மட்டுமே ஆலயம் திறந்திருக்கும். கிருத்திகையில் சற்று கூடுதல் நேரம் திறந்திருக்கும். திருத்தணியை தரிசிக்கும் முன்னர் இந்த நெடியமலையில் உள்ள செங்கல்வராயரை தரிசிப்பது சிறப்பிலும் சிறப்பாகும். கல்வித்துறை சார்ந்தவர்களும், வாகனத் துறையில் இருப்பவர்களும் வழிபட வேண்டிய சிறந்த தலமாக இந்த நெடியமலை திகழ்கின்றது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் நகரி செல்லும் பேருந்து மார்க்கத்தில் கரீம்பேட்டிற்கு அடுத்ததாக

அமைந்துள்ளது நெடியம்.

தொகுப்பு: பழங்காமூர் மோ. கணேஷ்

Related Stories: