ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்

அப்பூதி அடிகள் குரு பூஜை - 24.1.2023

ஒவ்வொரு ஊரிலும் ஆலயங்கள் இருக்கும். அந்த ஆலயங்களோடு பல்வேறு அருளாளர்களின் வாழ்வு இணைந்தும் பிணைந்தும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு ஊர்தான் திங்களூர். இன்று கிராமம். ஒரு காலத்தில் மிகச் சிறந்த நகரமாக விளங்கியது. கும்பகோணம் திருவையாறு சாலையில், திருவையாறுக்கு அருகே காவிரியின் வடகரைத் திருத்தலமாக விளங்குகிறது இந்தத் தலம். நவகிரகத் தலங்களில் சந்திரனுக்கு உரிய தலம். சந்திரன் பெயராலேயே திங்களூர் என்று வழங்கப்படுகிறது.

அங்கே வாழ்ந்து வந்தார் ஒப்பற்ற சிவநெறிச் செல்வர். பெயர் அப்பூதி அடிகள். சமய குரவர்களில் அப்பர் என்ற திருநாமம் உடைய திருநாவுக்கரசர் மீது காணாமலே காதல் கொண்டு அவர் பெயரிலேயே தர்மங்கள் பலவற்றைச் செய்துகொண்டிருந்தார். அந்த ஊரில் எங்கு நோக்கினும் நாவுக்கரசரின் பெயரால் தண்ணீர் பந்தல்கள், மடங்கள், அன்னதான கூடங்கள் அமைத்தார். திங்களூர் ஈசனுக்கு கைலாசநாதர் என்று திருநாமம். ஒரு நாள் திங்களூர் கைலாசநாதரை வணங்க எழுந்தருளுகிறார் திருநாவுக்கரசர். அது வேனில் காலம். ‘‘தண்ணீர், தண்ணீர்” என்று தாகத்திற்கு மக்கள் அலையும் பகல் நேரம். நல்ல மரநிழலில், குளிர்ந்த நீரினை வந்தவர்களுக்கு உபசரித்துக் கொடுக்கும் தண்ணீர் பந்தலைப் பார்க்கிறார்.

பத்து ரூபாய் தர்மத்திற்கு 100 ரூபாய் விளம்பரப்பலகை வைக்கும் காலம் அல்லவா...அன்றைக்கும் அங்கே ஒரு விளம்பரப் பலகை இருந்தது. விழிகளால் அளந்த நாவுக்கரசரின் வியப்பு கேள்வியாக மாறியது விசாரித்தார். ‘‘ஐயா, இந்தத் திங்களூரில் எங்கு பார்த்தாலும் “தர்மம், தர்மம்” என்று தர்ம சாலைகள் நிறைந்திருக்கிறதே, இதனை இத்தனை ஊக்கத்தோடு நடத்தும் அறவழிச் செல்வர் யார்?’’

பதில் கிடைக்கும் முன் பதிலே நடந்து வருகிறது. ஆம். வினாவுக்கு விடையாக அப்பூதியடிகளே அங்கு வந்து விடுகிறார். அறவழிச் செல்வர் தவநெறிச் செல்வரின் தாள் பணிகிறார். அப்பூதி அடிகளாரைப் பார்த்துக் கேட்கிறார். ‘‘நீங்கள் புரிகின்ற அரங்கேற்றம் பலவும் கேட்டோம். ஆயினும் ஓர் ஐயம்.’’ ‘‘சொல்லுங்கள்’’ ‘‘சிவனடியார் பொருட்டு நீங்கள் தர்மம் செய்கிறீர்கள். உங்கள் பெயர் எழுதாமல் யாரோ திருநாவுக்கரசர் என்று போட்டிருக்கிறீர்கள், என்ன காரணம்?’’

‘‘யாரோ திருநாவுக்கரசா?’’ அதுவரை அமைதியாக இருந்த அப்பூதி அடிகளாருக்கு ஆத்திரம் தலைக்கேறுகிறது.

“நாவுக்கரசரை யாரோ என்று கேட்கும் இவர் சிவனடியார்தானா?’’ என்ற சந்தேகம் எழுகிறது.

‘‘என்ன சொன்னீர்? வேறொரு பெயரா? அன்று சமணரோடு வாதம் செய்து சைவம் வளர்த்த ஒப்பற்ற பெயரா வேறொரு பெயர்? என்போன்ற ஞானம் இல்லாது இருக்கும் எளியவர்களுக்கும் செம்மை புரியும் திருநாவுக்கரசரின் பெயரைத் தவிர்த்து வேறு ஒரு பெயரா வைப்பது? நீர் சிவவேடம் போட்டவரா? சிவனடியாரா? நீர் யார்? உடனே கூறும்.’’

“தன் மேல் இவ்வளவு அன்பு கொண்டவரா, இந்த அடியார்.” திருநாவுக்கரசரை எதிர்த்து திருநாவுக்கரசே பேசினாலும் அதனைத் தள்ளும் அற்புத அடியாராக இருக்கிறாரே....

‘‘ஐயா, அடியேன் தான் அந்த சிறுமையோன்’’ (தெருளும் உணர்வில்லாத சிறுமையேன்-சேக்கிழார்). காண்போமா என்று ஏங்கி இருந்த அப்பூதி அடிகளாருக்கு எதிரில் அடக்கமாக நிற்கும் திருநாவுக்கரசரைக் கண்டதும் ஏக மகிழ்ச்சி.  ஒப்பற்ற ஞான தரிசனம் கிடைத்த பூரிப்பு. நெகிழ்கிறார். நெக்குருகி விழுந்து நெடுஞ்சாண் கிடையாக நிலத்தில் விழுந்து வணங்குகிறார்.

வீட்டிற்கு விருந்துண்ண அழைக்கிறார். திருநாவுக்கரசரும் அன்புக்கு கட்டுப்பட்டு ஏற்கிறார். விருந்து தயாராகிவிட்டது. விருந்துக்கு முன் வாழை இலை பறிக்க செல்கிறான் அப்பூதியடிகளின் மகன் திருநாவுக்கரசு. அங்கே மறைந்திருந்த பாம்பு தீண்டி இறந்து விடுகிறான். அழுவதற்கும் நேரமில்லை.விருந்து கெடுமே.... திருநாவுக்கரசர் வெளியே சென்று வீட்டுக்கு வரும் நேரம். அவர் அறிந்தால் கஷ்டப்படுவார்.... என்ன செய்வது?  

இந்த சோகக் காட்சியை சேக்கிழார் வர்ணிக் கிறார் பாருங்கள். பெறுவதற்கு அரிய புதல்வனைப் பெற்றவர்கள் பிள்ளையின் சடலத்தை ஒரு பாய் வைத்து மறைக்கின்றனர்.

சோகத்தைக் கஷ்டப்பட்டு மறைத்துக் கொண்டு திருநாவுக்கரசரின் வருகையை எதிர்நோக்கி விருந்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை தயங்காமல் செய்கின்றனர். திருநாவுக்கரசரும் வந்துவிட்டார். அழகான வாழை இலையில் அன்னமும் கறிகளும் அழகாகப் பரிமாறி இருக்கும் வேளையில் திருநாவுக்கரசர் பூசனைகள் புரிந்து வெண்ணீறு பிரசாதமாக இருவருக்கும் தந்து,

‘‘ஆமாம், இங்கேவிளையாடிக் கொண்டிருந்த தங்கள் புதல்வன் எங்கே? கூப்பிடுங்கள். என்னோடு விருந்து உண்ணட்டும்’’ என்று கேட்கும் போது தான் அதுவரை இல்லாத மயக்கம்

வருகின்றது.

‘‘சுவாமி அவன் தங்களுக்கு இப்போது உதவான்’’ அவன் இறந்து விட்டான் என்று சொல்லவில்லை. ஒரு கணம் திகைத்தார் திருநாவுக்கரசர் ஏன்? ‘‘இப்போதுவரை இங்கு விளையாடிக் கொண்டிருந்தான்...அவன் எங்கே? உண்மையைச் சொல்லும்’’ பெரியவரின் விருந்திற்கு விரோதம் வரும் என்று சொல்லியாக வேண்டிய நிலை. நடந்த கதையைச் சொன்னார்கள்.

‘‘நல்லது செய்தீர் ஐயா, நல்லது செய்தீர். இந்த வயோதிகனுக்கு விருந்து படைக்க வேண்டும் என்று வயசுப் பிள்ளையைப் பறிகொடுத்து, அதனை மறைத்துக் கொள்ளும் துணிவா? யாராவது இப்படிச் செய்வார்களா? அவனை இங்கே கொண்டு வாருங்கள்.

நீலம் பாரித்துக் கிடந்த பிள்ளையை கொண்டு வந்து கிடத்துகிறார்கள். அடுத்து அவர் உதட்டிலிருந்து பரம கருணையோடு வெளிப்படுகின்றது ஒரு பதிகம்.

ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை

ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்

ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது

ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே

விடம் தீர்க்கும் பதிகம் என்பார்கள்.

திருநாவுக்கரசரின் தமிழமுதம் அந்த பச்சிளம் பாலகனைக் காத்தது. தூங்கி எழுந்தவன் போல் எழுந்து வந்து பெற்றோர்களைக் கட்டிக் கொள்கின்றான். திருநாவுக்கரசர் திருப்பாதங்களில் சிறுவனோடு விழுந்து பணிகின்றார்கள். ஆண்டவனிடம் அடிமைப் பூண்டவர் நாவுக்கரசர். நாவுக்கரசரிடம் அடிமை பூண்டவர் அப்பூதி அடிகளார்.  அப்பூதி அடிகளாரின் அற்புத வாழ்வோடு இணைந்த திருத்தலம் திங்களூர் திருத்தலம்.

தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்

Related Stories: