அறுமுகனின் திருப்புகழை உவக்கும் அனுமன்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அழகிய காலைப் பொழுது அது. உதிக்கின்ற செங்கதிர், உச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. காசிக்குப் போகும் அந்தப் பாதையை, தனது பால் போன்ற கதிர்களால் கதிரவன், அபிஷேகம் செய்து கொண்டிருந்தான். குயில்களும், கிள்ளைகளும், அன்னமும், தனது அழகான குரலால், மேலும் அந்தக் காலைப்பொழுதை இனிமையாக்கியது. அந்தக் குயில் குரலுக்கு, சவால்விட்டது ஒரு மனிதரின் குரல். ஆம்! வெண்கல மணியைப் போல ஒலித்த அவரது குரலிசை, ஏதோ கந்தர்வ கானம் போல இருந்தது. அதுவும் வாஸ்தவம்தான். பாடும் அந்த நபர் முறையாக ஒருநாளும் சங்கீதம் பயின்றதில்லை. வள்ளிமலைச் சாரலில் தவம் செய்யும்போது, கந்தர்வர்கள் பாடுவதை கேட்டு பாட ஆரம்பித்ததாக சொல்லுவார்கள். அண்ணாமலையின் ஞான ஒளியான ரமணமஹரிஷியின் வழிகாட்டுதலின் பேரில், சேஷாத்ரி சுவாமிகளிடம் உபதேசம் பெற்றவர்.

முதலில், பரம நாஸ்தீகராக இருந்தவர். பின் தீராத வயிற்றுவலியும், மனவேதனையும் வந்தது. இருக்காதா பின்னே? வரிசையாய் மூன்று பிள்ளைகளை பறிகொடுத்துவிட்டார். ஒரே ஒரு மகன்தான் எஞ்சி இருந்தான். இது போதாதென்று விதி, வயிற்று வலியாக வந்தது. “எத்தை தின்றால் பித்தம் தெளியும்” என்றிருந்தார் இவர். அப்போது, ஒரு மகான் பழனி ஆண்டவரை சரண் புகுமாறு சொன்னார். வேறு வழி தெரியாமல், பழனி சென்றார். நியமமுடன், விரதம் இருந்தார். வயிற்றுவலி பறந்தோடியது. முருகன்மீது பக்தி கூடியது.

அங்கே ஒரு ஆடல் அரசி, முருகனுக்கு முன்னே திருப்புகழுக்கு நடனமாடினாள். அப்போது, செவிவழியாக அவர் உள்புகுந்த திருப்புகழ், அவரது உள்ளத்தை பறித்துக் கொண்டது.

பல திருப்புகழை கற்றுத் தேர்ந்து, முருகனிடம் பக்தியில் உருகினார். அப்போதுதான் சேஷாத்ரி சுவாமிகள் உபதேசம் கிடைத்தது. “திருப்புகழ்தான் சிறந்த மந்திரம், அதை உலகில் பரப்பவே நீ அவதரித்து இருக்கிறாய்” என்று சேஷாத்ரி மகான் ஆசி வழங்கினார்.

அந்த மகான் வாக்கின்படி, திருப்புகழை உலகெங்கிலும் பரப்ப ஆரம்பித்தார். வள்ளி மலையில் பல நாள் தங்கி தவபுரிந்தார். அவரது தவத்தை மெச்சி வள்ளி நாச்சியார், பொங்கி என்ற உருவில் வந்து இவரிடம் பல அற்புதத்தை நிகழ்த்தினார். அவரது இயற்பெயரான அர்த்தநாரி என்பது மறைந்தது. அன்பர்கள் அவரை அன்போடு, “வள்ளிமலை திருப்புகழ் சச்சிதானந்த சுவாமிகள்”  என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இந்த வள்ளிமலை சுவாமிகள்தான், அன்று காசி செல்லும் பாதையில் தேவகானம் போலத் திருப்புகழை பாடிக் கொண்டிருந்தார்.

திருப்புகழ் அமுதால், உலகின் ஞானப் பசியை போக்கிய மகான், இன்று காசிக்கு செல்லும் பாதையில் வயிற்றுப் பசியோடு திருப்புகழ் பாடிக் கொண்டிருந்தார். அற்புதமான பூர்வி கல்யாணி ராகம். அதன் ஏற்ற இறக்கத்தில் கல்லும் உருகிவிடும். “சற்றே விலகி இரும் பிள்ளாய்” என்ற பாபநாசம் சிவன் பாடல் இதே ராகம் தான். இந்தப் பாடலை கேட்டவர்க்கு, பூர்வி கல்யாணியின் அருமை தெரியும். அதுவும் இறை அருளோடு இன்னிசையும் சேர்ந்து விட்டால் சொல்லவும் வேண்டுமா? கரும்பும் தேனும் சேர்ந்தாற் போல, தித்திக்கும் அல்லவா? சுவாமிகள் பாடலை கேட்டால் கரும்பும் துவர்த்து, செந்தேனும் புளித்து விடும் போல இருந்தது.

“வஞ்சங்கொண் டுந்திட ராவண

னும்பந்தென் திண்பரி தேர்கரிமஞ்சின்

பண் புஞ்சரி யாமென......வெகுசேனை”

ஒரு ஆலமரத்தடியில் அமர்ந்து சுவாமிகள் பாட ஆரம்பித்தார். பாடல் ஆரம்பித்ததுதான் தாமதம். அந்த மரத்தில் தாவி குதித்து, கத்தி கும்மாளம் இட்டுக் கொண்டிருந்த குரங்குகள், சட்டென்று தனது கும்மாளத்தை நிறுத்தியது. ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல, ஒரு சேட்டையையும் செய்யாமல், இருந்த இடம் விட்டு, இம்மி அளவும் அசையாமல் கற்சிலை போல நின்றன.

“வஞ்சக எண்ணமும் வலிமையும் கொண்ட ராவணன், வேகமாய் பாய்ந்து செல்லும் வலிய குதிரை, தேர், யானை, மற்றும் மேக கூட்டங்களை ஒத்த பலப்பல காலாட்படைகளுடன்...” என்பது சுவாமிகள் பாடிய திருப்புகழ் வரிகளின் அர்த்தம். இதை கேட்டதும் தனது முன்னோர்களின் வீர சாகசத்தை பற்றிய கதையாயிற்றே என்று குரங்குகள் மவுனமாய் கேட்க ஆரம்பித்ததோ என்னவோ? இது இப்படி இருக்க சுவாமிகள் தொடர்ந்து பாடினார்.

“வந்தம்பும் பொங்கிய தாகஎ

திர்ந்துந்தன் சம்பிர தாயமும்

வம்புந்தும் பும்பல பேசியு ...... மெதிரேகை

மிஞ்சென்றுஞ் சண்டைசெய் போதுகு

ரங்குந்துஞ் சுங்கனல் போலவெ

குண்டுங்குன் றுங்கர டார்மர ...... மதும்வீசி

மிண்டுந்துங் கங்களி னாலெத

கர்ந்தங்கங் கங்கர மார்பொடு

மின்சந்துஞ் சிந்தநி சாசரர் ...... வகைசேர”

“இராவணன் பலவகையான சேனைகளுடன் போருக்கு வந்தான். அம்புக் கூட்டங்கள் பலவற்றை விடுத்து, வானர சேனையை எதிர்த்தான். தனது சாமார்த்தியப் தற்பெருமைப் பேச்சென்னும் வீண் பேச்சுபேசி, இழிவான வார்த்தைகளால் பலவாறாக ராமனையும் அவன் சேனையையும் ஏசினான். இதை கேட்ட வானர சேனைக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது.

பல வகையான தெய்வீக ஆயுதம் இல்லாவிட்டாலும், ராமநாமம் ஜெபித்து, மலைகளையும், கரடுமுரடான மரங்களையும் பிடுங்கி வீசி, அசுரப் பதர்களை வானரங்கள் எதிர்த்தன. இதனால் பல அசுரர்களின், உடம்பு, தலை, கை, மார்பு இவைகளுடன், மற்ற உடற்பகுதிகளும் நொறுங்கி சிதறியது” என்பது திருப்புகழ் அடிகள் அடுத்து பாடிய அடிகளின் தேர்ந்த பொருள்.

தங்களது பழம் பெருமையை கேட்ட குரங்குகளுக்கு, தன்னைப் புகழ்ந்து பாடும் இந்த மகனுக்கு ஏதாவது பரிசு தர வேண்டும் என்று தோன்றியது. உடன் கூட்டத்தில் இருந்த ஒரு குரங்கு ஓடிச் சென்றது. சில நொடிகளில் திரும்பி வந்த அது, தனது கைகளில் ஒரு நெய் ரொட்டியை எடுத்து வந்தது.

பவ்யமாக சுவாமிகளின் மடியில் வைத்துவிட்டு, ஓரமாக அமர்து பாடலை கேட்டது. அடுத்த நொடியில் ஒரு ரொட்டி எப்படி இவருக்கு போதும் என்று நினைத்த அந்தக் குரங்கு, மீண்டும் கிடுகிடுவென்று ஓடியது. சுவாமிகள் இது எதையும் கவனிக்காமல் பாடிக்கொண்டிருந்தார்.

“வுஞ்சண்டன் தென்றிசை நாடிவி

ழுந்தங்குஞ் சென்றெம தூதர்க

ளுந்துந்துந் தென்றிட வேதசை..... நிணமூளை”

“இப்படி வானரசேனை வேகவேகமாக அரக்கர்களை அழித்து ஒழித்ததால், ஒரு பிரச்னை உருவானது. யமன் உலகமான நரகத்தின் வாயிலில் கூட்டம் அதிகரித்தது. ஆம்! போர்க்களத்தில் கொத்துக்கொத்தாக இறந்த அரக்கர்கள், அங்குதானே சென்று சேர்வார்கள்? இந்த அமளி துமளியை சமாளிக்க, யம தூதர்கள் நரகத்தின் வாயிலில் வந்து நின்றார்கள். அசுரர்களை நரகத்தின் உள்ளே தள்ளினார்கள். மேற்கண்ட பொருளுடைய அடிகளை சுவாமிகள் பாடி முடிப்பதற்குள், அவரது மடியில் சுடச்சுட, மூன்று நெய் ரொட்டியை அந்தக் குரங்கு கொண்டுவந்து சேர்த்தது. தன்னை மறந்த நிலையில், திருப்புகழ் பாடிக் கொண்டிருந்த சுவாமிகளுக்கு இது எதுவுமே தெரியவில்லை. மோன நிலையில் இருந்த படி திருப்புகழ் இன்னமுதத்தை பருகிக் கொண்டிருந்தார் அவர்.

“உண்டுங்கண் டுஞ்சில கூளிகள்

டிண்டிண்டென் றுங்குதி போடவு

யர்ந்தம்புங் கொண்டுவெல் மாதவன்....மருகோனே”

“யம லோகம் இப்படி இருந்தது என்றால், போர்க்களத்தை யோசித்து பாருங்கள். மாமிச மலைகளான பல அசுரர்களின் உடல்கள், மலைபோல குவிந்து கிடந்தன. போதாதா? பேய்களும், நரிகளும், கழுகுகளும்,” அப்பாடா.. இன்று நமக்கு விருந்துதான் “என்று கொண்டாடி தீர்த்தன. இப்படியாக அம்பு எய்து போர் புரிந்த ராமனின் மருகோனே! முருகோனே” என்ற பொருள்படும் வரிகளை சுவாமிகள் பாடி முடித்து கண்கள் திறந்தார். அப்போது அந்தக் குரங்கு மற்றொரு நெய் ரொட்டியை எடுத்து வந்து அவர் மடியில் வைத்தது. அந்தக் குரங்கை துரத்திக் கொண்டு ஒருவன் வந்தான்.

சுவாமிகள் ஒன்றுமே புரியாமல் விழித்தார். “சுவாமி! நான் அருகில்தான் ரொட்டி கடை வைத்திருக்கிறேன். திடீரென்று இந்தக் குரங்கு வந்தது. ஒரு ரொட்டியை எடுத்துக்கொண்டு சென்றது. நான் ஒரு ரொட்டிதானே என்று விட்டுவிட்டேன். ஆனால், இது தொடர்ச்சியாக நான்கு ரொட்டியை கொண்டு சென்றுவிட்டது. அதனால், அதை துரத்தி வந்தேன். பார்த்தால் மோன நிலையில் நீங்கள் அழகாக பஜனை பாடிக் கொண்டிருக்க, இது உங்கள் மடியில் ரொட்டியை வைத்ததை பார்த்தேன். பிறகு அந்தக் குரங்கு பவ்யமாக உங்கள் அருகில் அமர்ந்துகொண்டது.

இந்த அதிசயத்தை கண்டு சொக்கிப் போன நான், உங்கள் பாடலைக் கேட்டு மயங்கிப் போனேன். அப்பப்பா! என்ன அற்புதமான பக்தி பாவம். அந்த ஆஞ்சநேயரே உங்களுக்கு உணவளித்துவிட்டார். அதை தட்டிப் பறிக்க நான் யார்? வயிறார உண்டு மனமார என்னை வாழ்த்தி விட்டுச் செல்லுங்கள் சுவாமி” என்று அந்த ரொட்டி கடைக்காரன் சுவாமிகள் காலில் விழுந்தான்.

இராமாயணத்தில், ராமன் பெருமை வந்தாலும் சரி, திருப்புகழில் ராமன் பெருமை வந்தாலும் சரி, அனுமன் ஆனந்தமாக கேட்டு அருள் செய்கிறார் என்பது சுவாமிகள் வாயிலாக இன்று உலகிற்கு பாடமானது. அஞ்சனை மைந்தனின் அற்புதமான திருவிளையாடல் இது என்று சுவாமிகளுக்கு நொடியில் புரிந்தது. தன் எதிரில் இருந்த குரங்கை வணங்கி நமஸ்கரித்தார். அந்தக் குரங்கு எதுவும் சொல்லாமல் கள்ளப் புன்னகை பூத்து விட்டுச் சென்றது.

“யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம், தத்ர தத்ர கிருதம் ஹஸ்தகாஞ்சலிம்” (எங்கு எங்கு ராமன் பெருமை ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் கை குவித்து கண்ணீர் மல்க அதை அனுமன் கேட்டுக்கொண்டிருப்பான்) என்ற புகழ்பெற்ற அனுமன் துதி எவ்வளவு உண்மை பாருங்கள். கதிர்காம திருப்புகழில் இலங்கையை எரித்த பின், அனுமன் மனம் வருந்தியதாகவும், கதிர்காம கதிர்வேலன், அனுமனுக்கு மனசாந்தி அளித்ததாகவும் அருணகிரிநாதர் சொல்கிறார்.

இதிலிருந்து கந்தனுக்கும் அனுமனுக்கும் இருக்கும் நட்பு நமக்கு தெரிகிறது. பல இடங்களில் இராமாயணத்தின் பல அற்புதமான காட்சிகளை அருணகிரிநாதர் வர்ணிக்கிறார். திருப்புகழை ஓதி உணர்ந்த உத்தமர்கள் இதை நன்கு அறிவார்கள்.சுவாமிகளைப் போலவே நாமும் திருப்புகழில், ராமன் புகழை பாடி, கந்தன் அருளையும், ராமன் அருளையும், அனுமன் அருளையும் பெறுவோம்.

தொகுப்பு: ஜி.மகேஷ்

Related Stories: