இரண்டு கேள்விகள் ஒரே விடை பராசர பட்டரின் அனுபவம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

இறைவனிடம் பக்தி செலுத்துவதற்கு சாத்திரங்கள் தேவையா? சாத்திரங்களை மட்டும் நிறைய படித்து விட்டால் பக்தி தானாக வந்துவிடுமா? இப்படி எல்லாம் பல கேள்விகள் வரும். சாத்திரங்கள் எல்லாம் இறைவனுடைய குணங்களையும், அவனைத் தெரிந்து கொள்ளுகின்ற வழிமுறைகளையும் காட்டுகிறதே தவிர, பக்தி என்பது அனுபவத்தில் வரக்கூடிய ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உபநிடதத்தில் ஒரு வாக்கியத்தைச் சொல்வார்கள்.

நிறைய படித்திருந்தாலும் நமக்கு ஒன்றும் தெரியவில்லை என்று நினைக்கும் மனப்பான்மை வரும்போது எல்லாம் தெரிந்ததாக ஆகிவிடுகிறது. “எல்லாம் தெரிந்தது” என்று நினைக்கின்ற பொழுது ஒன்றும் தெரியாமல் போய்விடுகிறது. பக்தி விஷயத்தில் பல நேரங்களில் இப்படித்தான் ஆகிவிடுகிறது. எதைத் தெரிந்துகொள்ளவேண்டுமோ அந்த விஷயம் உறுதியாக நெஞ்சில் பட்டுவிட்டால், மற்ற விஷயங்களைத் தெரிந்து கொண்டு ஆகப்போவது ஒன்றும் இல்லை.எதைத் தெரிந்துகொள்ளவேண்டுமோ அந்த விஷயம் உறுதியாக நெஞ்சில் படாவிட்டால், மற்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வதால் எந்தப் பயனும் இல்லை.இதை ஒரு எளிமையான கதை மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.

திருவரங்கத்தில் பராசரபட்டர் என்ற ஒரு மகான் இருந்தார் அவர் கூரத்தாழ்வான் பிள்ளை. கூரத்தாழ்வான் யார் என்று சொன்னால் ராமானுஜருடைய பிரதான சீடர். மகா அறிவாளி. சாஸ்திரங்களை எல்லாம் கரைத்துக் குடித்த மகா சாஸ்திர ஞானி. படிப்பாளி. அவர் பிள்ளை, பராசரபட்டர் காலக்ஷேபம் சீடர்களுக்கு சாதித்துக் கொண்டிருந்தார். அவர் காலட்சேப அனுபவம் சுவையாக இருக்கும். நிறைய விளக்கங்கள் கேட்பார்கள். அவர் சொல்வார்.

பெரிய பெரிய வித்வான்கள் காலக்ஷேபத்தில் கலந்துகொள்வார்கள். அந்த கோஷ்டியில் அதிக சாஸ்திர ஞானம் இல்லாத சாதாரண பக்தர்களும் கலந்து கொள்வார்கள். ஆச்சாரியார் நல்ல விஷயத்தைச் சொல்கிறார் என்கின்ற ஒரு விஷயம்தான் அவர்கள் வருகைக்குக் காரணமே தவிர, மற்ற தர்க்க சாஸ்திர விஷயங்கள் எல்லாம்  தெரியாது. அதில் ஒரு பாகவதர் இந்த விஷயத்தை எல்லாம் கேட்பதே புண்ணியம்” என்று நினைத்துக்கொண்டு தவறாமல் வந்து கவனிப்பார்.

அவரைப் பார்க்கும்போது மற்ற சில படிப்பாளிகளுக்கு, ‘‘இவர் ஏன் வருகிறார்? அபாரமான சாத்திர விஷயங்கள் எல்லாம் இவருக்கு எங்கே புரியப் போகிறது? ஏன் வேலை மெனக்கெட்டு இங்கே வந்து உட்கார்ந்து இருக்கிறார்.’’ என்று நினைப்பார்கள்.ஆனால் பராசரபட்டர் இந்த ஸ்ரீவைஷ்ணவ பாகவதருக்குத்தான் தான் மிகுந்த மரியாதை தருவார். ஒருநாள் காலட்சேபம் ஆரம்பிப்பதற்கு தாமதமாகிக்கொண்டே இருந்தது.

எல்லோரும் ஆசாரியார் யாருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்? “ம். ஏதோ பெரிய வித்வான் யாராவது வருவார்கள் போலிருக்கிறது” என்று நினைத்தார்கள். ஸ்ரீரங்கத்தில் பராசரபட்டரை விட பெரிய வித்வான் யாருமில்லை. அப்படி யானால் யாரோ வெளியூரிலிருந்து ஒரு தகுதியான வித்வான் வருகிறார். அதற்காகத்தான் அவர் காத்துக்கொண்டிருக்கிறார் என்று நினைத்தார்கள். ஆனால் அவரிடம் கேட்கவில்லை. ஆனால் இன்னொரு விஷயத்தையும் அவர்கள் கவனித்தார்கள்.தினசரி வந்து முதலில் வந்து, முன்னால் அமர்ந்து கொண்டு, எதுவும் புரியாமல் பாதி தூக்கத்தில் கேட்கக்கூடிய அந்த வைணவர் வரவில்லையே! ‘‘ஆமாம்… அவர் இங்கே வந்து அவருக்கு என்ன புரியப்போகிறது? அதனால் அவர் வருவதும் ஒன்றுதான். வராமல் இருப்பதும் ஒன்றுதான்’’ இப்படி நினைத்துக் கொண்டிருந்தபோது அந்த வைணவர் வந்து விட்டார்.

உடனே பராசரபட்டர், ‘‘வாரும் வாரும்... என்ன தாமதம்... உமக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன். நீர் வராவிட்டால் எனக்கு காலட்சேபம் செய்தது போலவே இல்லை’’ என்றெல்லாம் அவருக்கு நிறைய புகழுரை சொல்லி உட்காரவைத்தார். மற்றவர்களுக்கு இந்தச் செயல் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தந்தது.நிறையப் படித்து தர்க்கம் செய்யும் ஞானம் படைத்த சாஸ்திர ஞானிகளான தங்களைவிட, ஒன்றும் தெரியாத இந்தநபருக்கு இவ்வளவு உயர்ந்த மரியா தையைத் தருகிறாரே...  

பராசரபட்டர் ஏன் இப்படிச் செய்கிறார்? இப்படி எல்லாம் அவர்கள் மனதில் சிந்தனை ஓடியது.இப்படிச் சிந்தனை ஓடுவதைச் சிறந்த ஞானியான, பிறர் உள்ளத்தை ஊடுருவி படிக்கக்கூடிய பராசரபட்டருக்குத் தெரியாமல் இருக்குமா? சரி, இன்று இவர்களுக்கு இந்தப் பாகவதரின் பெருமையைப் புரியவைத்து விட வேண்டும் என்று நினைத்தார். அவர் எல்லா வித்வான்களையும் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார்.

‘‘நீங்கள் எல்லாம் பரம பண்டிதர்கள். நான் இப்பொழுது உங்களிடம் ஒருகேள் வியைக் கேட்கிறேன். பதில் சொல்ல வேண்டும்’’எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது பட்டர் கேட்டார்.” ஆன்மா உய்வு அடைய வேண்டும். அதற்காகத்தான் சாஸ்திரங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை நாம் எல்லோருமே ஏற்றுக் கொண்டிருக்கிறோம் அல்லவா? அப்படியானால் ஆன்மா உய்வு பெறுகின்ற உபாயம் எது?”அதாவது ஆன்மா கரை ஏறுவதற்கு எது வழி என்பது கேள்வி.

உடனே வித்வான்கள் எல்லோருக்கும் சந்தோஷம். தாங்கள் படித்த பல்வேறு வேதவாக்கியங்களையும், கீதை ஸ்லோகங்களையும், விஸ்தாரமாகச் சொன்னர்கள். ஒருவரை ஒருவர் மேற்கோள்கள் சொல்லி மறுத்தார்கள். கர்மயோகம் தான் வழி என்று ஒருவர் சொன்னார். இல்லை ஞானயோகம் தான் வழி என்று ஒருவர் சொன்னார். பக்தி யோகம் தான் வழி என்று ஒருவர் சொன்னார். அந்த விஷயங்களை எல்லாம் நிறுவுவதற்கு அவர்கள் பல்வேறு மேற்கோள்களை மழையாகக் கொட்டினார்கள். அவர்கள் வாதத் திறமையைப் பார்த்து அவர்களுக்கே மகிழ்ச்சியாக இருந்தது.

அதுவும் பராசரபட்டர் போன்ற ஒரு சாஸ்திர நிபுணரின் முன்னால் பேசக்கூடிய ஒரு வாய்ப்பு கிடைத்ததால் சந்தோஷம் அதிகமானது.“சரி உங்களால் ஒரே மாதிரியான உறுதியான விடையைச் சொல்ல முடிய வில்லை”என்று கூறிய பட்டர்  அவரவர்களுக்குரிய  மரியாதை மொழிகளைச் சொல்லிவிட்டு, “சரி இருக்கட்டும் இன்னொரு கேள்வியைக்  கேட்கிறேன், சொல்லுங்கள்’’ ‘‘உபாயத்தைச் சொல்லிவிட்டீர்கள்… கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் என்றெல்லாம் சொல்லிவிட்டீர்கள்.

எல்லாம் சரிதான். உபேயம் எது? உபேயம் என்றால் பயன். அல்லது பேறு.ஒன்றை அடைகிறோம் என்று சொன்னால், அதை அடைந்து, அதனால் ஏதேனும் நமக்கு ஆதாயம் கிடைக்க வேண்டுமல்லவா? அதற்குத்தான் உபேயம் என்று பெயர்.எம்பெருமானை அடைந்தால், அடைந்தபின் என்ன கிடைக்கும் என்று பார்க்க வேண்டும் அல்லவா? இப்பொழுது வித்வான்கள் மறுபடி சாஸ்திர சுவடிகளின் ஆராய்ச்சிகளை தொடங்கினார்கள்.ஒருவர் ஐஸ்வர்யம்தான் உபேயம் என்றார்.

இன்னொருவர் கைவல்யம் அதாவது ஆன்மா அனுபவம் தான் உபேயம் என்றார்.இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதிலைச் சொன்னார்கள். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, பராசர பட்டர் மறுபக்கம் திரும்பினார். இவர்கள் எல்லாம் யாருக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்தார்களோ,  அந்த  வைஷ்ணவரிடத்திலேயே, ‘‘சுவாமி, நீர்  இந்த இரண்டு விஷயத்தைக் குறித்து என்ன தெரிந்து கொண்டிருக்கிறீர் என்பதைச் சொல்ல வேண்டும்? என்றார்.

எல்லோரும் சிரித்து விட்டார்கள். வித்வான்கள் எதிரில், ஒன்றும் தெரியாதவரிடம் சிக்கலான கேள்விகேட்டு மடக்கி விட்டார் என்று நினைத்தார்கள். வித்வான்கள் இருக்கிற இடத்திலே ஒன்றும் தெரியாமல் வந்ததின் விபரீதம் அவருக்கு உணர்த்தவே இந்த கேள்வி என்று நினைத்தார்கள்.“ம்... தினசரி வந்து என்ன புண்ணியம்? பேசாமல் வீட்டிலேயே இருக்கலாமே என்று சொல்லப்போகிறார் போலிருக்கிறது’’ என்று நினைத்துக்கொண்டார்கள்.அந்த பாகவதருக்கு அச்சம் வரும். வாய் குழறும். பேசத் தெரியாமல் தடுமாறுவார் என்றெல்லாம் நினைத்தார்கள்.

ஆனால் பாகவதர் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு ஆசாரியரையும் கோஷ்டியையும் நமஸ்காரம் செய்துவிட்டுச் சொன்னார். “அடியேன் சிறிய ஞானத்தன். தேவரீர் பலபடியாக சொன்ன விஷத்தை அடியேன் மந்த மதி கிரகித்த அடிப்படையில், தேவரீர் கேட்ட இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில் தான்” என்றார். ‘‘சொல்லும். நீர் புரிந்துகொண்டதைச் சொல்லும்’’ என்றார் பட்டர்.

‘‘அதோ இருக்கிறானே, ரங்கநாதன், அவன்தான் நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில்’’ பராசரபட்டர் ஆனந்தமாகச்  சொன்னார்.‘‘பார்த்தீர்களா. நீங்கள் ஒரு கேள்விக்குப் பல பதில்களைச் சொன்னீர்கள். அதற்கு பல சாஸ்திர மேற்கோள்களை எல்லாம் காட்டினீர்கள். ஆனால் அவர் இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில் சொல்லிவிட்டார். அவர் சாஸ்திரத்தை மேற்கோளாகக் காட்டவில்லை. சாஸ்திரம் தந்தவனையே மேற்கோளாகக் காட்டிவிட்டார். இதைத்தான் ஆழ்வார் “ஆறும் பேறும் அவனே” என்றார். ஆறு என்றால் உபாயம்.

பேறு என்றால் உபேயம். அடையும் பயனும் அவனே. அந்தப் பயனை அடையச் செய்பவனும் அவனே என்பதுதான் முடிவான விஷயம். அந்த முடிவான விஷயத்தை கொஞ்சமும் குழப்பமில்லாமல் தெரிந்துகொண்ட இவருக்கு நாம் முதல் மரியாதை தரவேண்டும். வெறும் சாஸ்திர அறிவு பயன்படாது. சமயத்தில் அது நம்பிக்கையின்மையைக கூட தந்துவிடும்.  குழப்பங்களைத் தரும்.

ஆனால், உறுதியான நம்பிக்கை உள்ளவனுக்கு அந்த நம்பிக்கைதான் சாஸ்திரம். அந்த நம்பிக்கைதான் ஞானம். அந்த ஞானம் தான் இவர் இடத்திலே இருக்கிறது” என்றார். வித்வான்களுக்கு, அந்தப் பாகவதரின் பெருமையும், தங்கள் தவறும் புரிந்தது.

தொகுப்பு: பாரதிநாதன்

Related Stories: