இந்த வார விசேஷங்கள்

19.12.2022 - திங்கள்  இந்த ஏகாதசி விரதம் இருந்தால் பகையை வெல்லலாம்

திதிகளில் 11-வது திதி ஏகாதசி. ஒரு பக்தையின் பெயர் அது. கிருத யுகத்தில், முரன் என்னும் ஒரு அசுரன் இருந்தான். மிகுந்த பலசாலி. ஆனால், நல்லவர்களை துன்புறுத்துவான். தேவர்கள், முனிவர்கள் எல்லோரையும் கொடுமைப்படுத்தி வந்தான். இதனால், துன்பமடைந்த தேவர்கள் மற்றும் முனிவர்கள், மகாவிஷ்ணுவை சரணடைந்தனர். மஹாவிஷ்ணு, முரணுடன் சண்டை செய்தார். 1000 ஆண்டுகள் உக்கிரமான போர் நடந்தது.

தவம் செய்து, தேவர்களிடம் பெற்ற வரபலன் கெடக்கூடாது அல்லவா. எனவே, விஷ்ணு காலம் தாழ்த்தி நடிக்கிறார். சற்று களைப்பாறுவது போல் போக்கு காட்டி, ஒரு குகையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். இதுதான் சமயம் என்று, விபரீதம் புரியாத அசுரன் முரன், அவரைக் கொல்ல முற்பட்டான்.

அந்த சமயத்தில் யோக நித்திரை கொண்ட மகாவிஷ்ணுவின் உடலிலிருந்து ஒரு பெண் தோன்றினாள். அவள் அசுரனுடன் போரிட்டு அவனைக் கொன்றாள். உறக்கத்திலிருந்து விழித்த மகாவிஷ்ணு, நடந்த நிகழ்ச்சிகளை அறிந்தார். அந்த பெண்ணைப் பாராட்டி `ஏகாதசி’ என்ற பெயரை சூட்டினார்.

(ஏகம்(1)+தசம்(10)= ஏகாதசம் (11) (ஏகாதசி)

“ஏகாதசியே! நீ தோன்றிய இந்த நாளில், விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு பாவம் போக்கி, சகல செல்வங்களையும் தந்து, முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்!” என்று வரம் தந்தார். இந்த ஏகாதசி திதி தோன்றியது மார்கழி மாதத்தில் தேய்பிறையில். அன்றிலிருந்து ஏகாதசி விரதம் உற்பத்தி ஆனதால், இந்த ஏகாதசிக்கு `உற்பத்தி ஏகாதசி’ என்று பெயர். இன்று உற்பத்தி ஏகாதசி (19.12.2022) கடைபிடிக்கப்படுகிறது.

19.12.2022 - திங்கள்  சிவ பக்தியால் உயர்ந்தவர்

(மானக்கஞ்சாற நாயனார் குரு பூஜை)

கஞ்சநகர் மானக்கஞ் சாற னார்சீர்க்

காதன்மகள் வதுவைமணங் காண நாதன்

வஞ்சமலி மாவிரதத் தலைவ னாகி

வந்துபுகுந் தவளளக மகிழ்ந்து நோக்கிப்

பஞ்சவடிக் காமென்ன வரிந்து நீட்டும்

பத்தரெதீர் மறைந்திறைவன் பணித்த வாக்கா

லெஞ்சலில்வண் குழல்பெற்ற பேதை மாதை

யேயர்பிராற் குதவியரு ளெய்தினாரே.

    

மாயவரம் பக்கத்திலே ஆனந்ததாண்டவபுரம் என்று ஒரு ஊர். ஆனந்த தாண்டவம் இப்பொழுது ஆனதாண்டவபுரம் என்று வழங்கப்படுகிறது. அந்த ஊரிலே வேளாளர் குலத்திலே அவதரித்தவர் மானக்கஞ்சாற நாயனார். அரசனுக்கு சேனைத் தலைவராக பதவி வகித்தவர். சிவ நெறிச்செல்வர்.

அவர் சிலகாலம் பிள்ளைப் பேறின்மையால் அதிதுக்கங்கொண்டு, பிள்ளைப் பேற்றின் பொருட்டுப் பரமசிவனை உபாசனை செய்து, அவருடைய திருவருளினால் ஒரு பெண்குழந்தையைப் பெற்றார். பேரழகும் பெருங் குணமும் வாய்ந்த அந்தப் பெண் குழந்தையை, பெருமையோடு வளர்த்தார்.

அந்தப் பெண் குழந்தையும் நல்ல பண்போடு வளர்ந்தது. உரிய வயது அடைந்தவுடன் திருமணம் செய்து வைப்பதற்காக, தகுந்த மணமகனைத் தேடினார். ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்ற சிவபக்தர் கிடைத்தார்.

திருமண ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த நேரத்தில், மாவிரத முனிவர் என்ற பெயரோடு ஒரு வயதான சிவனடியார் வந்தார். மானக்கஞ்சாற நாயனார், அவருக்கு பல விதமான உபசாரங்கள் செய்தார். தன்னுடைய மகளையும் ஆசி பெறவைத்தார்.

மணமகளின் நீண்ட கூந்தலை பார்த்த அந்த முனிவர், அவளுடைய கூந்தலை அரிந்து கொடுத்தால் தமக்கு உதவும் என கேட்க, ஒரு சிவனடியார் கேட்டதை தராமல் இருப்பதா என்று எண்ணிய மானக்கஞ்சாற நாயனார், உடனடியாக தம்முடைய பெண்ணின் கூந்தலை அரிந்து கொடுத்தார்.  இந்த விஷயங்களைக் கேட்ட கலிக்காம நாயனார், தன்னுடைய மாமனாரின் சிவபக்தியை எண்ணி மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியைக் காணக் கொடுத்து வைக்கவில்லையே என்று ஏங்கினார்.

கலிக்காம நாயனார் விரைந்து சென்று மணப் பெண்ணை பார்த்தார். ஆனால், அவள் சர்வ அலங்கார பூஷிதையாக கருத்த குழலோடும், கலைமான் விழியோடும், அற்புத அழகோடும் காட்சி தந்தாள். ஆம். சிவபிரான், அவள் கூந்தலை மறுபடியும் தோன்றச் செய்தார்.  சாதாரண மனிதர்களின் செயலுக்கு அப்பாற்பட்ட சிவபக்தியும், வைராக்கிய சீலமும் கொண்ட மானக்கஞ்சாற நாயனாரின் குருபூஜை தினம் இன்று. அவர் குருபூஜையில் கலந்துகொள்வோம்.

21.12.2022 - புதன்  அளப்பரிய நன்மைகளை அள்ளித்தரும் புதானுராதா

சில குறித்த நாளும் திதியும் இணைந்து வருவதை புனித விரத வழிப் பாட்டுக்குரிய நாளாக பெரியவர்கள் சொல்லி சென்றிருக்கிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறையோ, இருமுறையோ அந்த சிறப்பான நாட்கள் அமையும்.  அப்படி ஒரு நாள்தான் ``புதானுராதா’’. புதன்கிழமையும், அனுஷம் நட்சத்திரமும் இணைத்து வரும் தினம், புதானுராதா தினம். இந்த நாள், வழிபாடு அளப்பரிய நன்மைகளை அள்ளித்தரும். அறிவாற்றலை அதிகரிக்கும். உறவில் ஏற்படும் சிக்கல்களைப் போக்கி நட்புறவு வளர்க்கும். பெருமா ளையும் நவக்கிரகங்களில் சனிபகவானையும், வழிபட நலம் பல சிறக்கும். இதுதவிர, இன்று பிரதோஷம் என்பதால் மாலையில் அவசியம் சிவாலயம் செல்லவும்.

22.12.2022 -  வியாழன்  திருநெடுந்தாண்டகம் தொடக்கம்

(வைகுண்ட ஏகாதசி ஸ்ரீ ரங்கத்தில் தொடக்கம்)

திருவரங்கத்திலும் மற்ற எல்லாப் பெருமாள் கோயில்களிலும் `திருநெடுந்தாண்டகம்’ இன்று தொடக்கம். மார்கழி மாதத்தின் சிறப்புகளில் ஒன்று வைகுண்ட ஏகாதசி. வைகுண்ட ஏகாதசிக்கு முன்னும் பின்னும் பகல்பத்து, இராப்பத்து உற்சவங்கள் பெருமாள் ஆலயங்களில் நடைபெறும். இதற்கு ``திரு அத்யயன உற்சவம்’’ என்று பெயர். ஸ்ரீ ரங்கத்தில் இந்த உற்சவம் நடைபெறும் இருபத்தொரு நாட்களும், விழாக்கோலம் கொண்டிருக்கும். அதன் தொடக்கம்தான் திருநெடுந்தாண்டகம்.

திருநெடுந்தாண்டகம் என்பது திருமங்கையாழ்வாரின் ஆறாவது பிரபந்தம். இதை வைணவர்கள் திருநெடுந்தாண்டக சாஸ்திரம் என்பார்கள். இந்தப் பிரபந்தத்தை வைத்துத்தான் பராசரபட்டர் வேதாந்தியான மாதவாச்சாரியாரை நஞ்ஜீயர் என்கின்ற ஆச்சாரியராக மாற்றினார். திருமங்கையாழ்வார் இந்தத் திருநெடுந்தாண்டகத்தை பெருமாள் முன் பாடி, அதற்குச் சன்மானமாகத்தான் திருவாய்மொழி உற்சவத்தை நடத்த, பெருமாளிடம் அனுமதி பெற்றார் என்பது வரலாறு.

இந்த உற்சவத்தின் ஒரு பகுதிதான் வைகுண்ட ஏகாதசி. ஸ்ரீ ரங்கத்தில் திருநெடுந்தாண்டகம் 22.12.2022 வியாழக்கிழமை தொடங்குகிறது, அடுத்த நாள் வெள்ளிக்கிழமை 23.12.2022 முதல் பகல் பத்து ஆரம்பமாகிறது. ஜனவரி மாதம் 1-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெருமாள், மோகினி அலங்காரத்தில் காட்சிதருவார். அடுத்த நாள் 2.1.2023 வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் காலை 4.30-க்கு திறக்கப்படும். ஜனவரி மாதம் 8-ஆம் தேதி கைத்தலச் சேவையும், 9-ஆம் தேதி திருமங்கை மன்னனின் வேடுபறி உற்சவமும், ஜனவரி 10-ஆம் தேதி தீர்த்தவாரியும், 11-ஆம் தேதி ஸ்ரீ நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறும்.

Related Stories: