எரிஏந்தி ஆடும் பிரான்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

அக்னியைக் கரத்தில் ஏந்தி வலம் வருதல், அக்னியைப் பரப்பி அதன்மீது நடனமாடுதல் முதலியன சிறப்புமிக்க தென்னிந்திய சமயச் சடங்குகள் ஆகும். கிராமியத் தெய்வக் கோயில்களில் நெருப்பு மிதித்தல் அக்னி சட்டி எடுத்தல், அக்னிக் காவடி எடுத்தல் போன்ற பலநூறு சடங்குகள் இன்றும் நடைபெற்றுவருவது இங்கு எண்ணத்தக்கதாகும். சிவபெருமான் எரியும் தீ அகலை ஏந்தியுள்ளார். இதற்கே மழு என்பது பெயர். பெரும் நெருப்பைக் கக்கி அதனைத் தன் வடிவமாக்கிக் கொண்டு நெருப்பாக ஜொலிக்கும் பொருளே மழு எனப்படும். பெருமான் பற்றிஎரியும் காட்டில் தீயின்மீது நின்று ஆடுகின்றான். இதற்கு மழு நடனம் என்றும் எரியாடல் என்றும் பெயர். இதனால் பெருமானுக்குத் தீயாடியப்பர் என்று பெயராயிற்று. திருக்காட்டுப்பள்ளி என்ற தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்குத் தீயாடியப்பர் என்பது பெயராகும்.

சிவபெருமான் தீயுகந்து அதனுள் நின்று நடனமாடியது. திருமுறைகளில் பலநூறு இடங்களில் சிறப்புடன் பேசப்பட்டுள்ளதைக் காண்கிறோம். பெருமான் தீயுள் நின்று நடனமாடுவதை விளக்க அவருடைய பிரபாமண்டலத்தில் தீச்சுடர்களை அமைத்துள்ளனர். நடராஜரைச் சுற்றி அமையும் பிரபாமண்டலத்தில் இருபத்தேழு சுடர்களை அமைத்திருப்பதைக் காணலாம். (காலப்போக்கில் சுடர் அமைந்த பிரபையை எல்லா தெய்வங்களுக்கும் அமைக்கும் வழக்கம் வந்துவிட்டது.

சிவபெருமான் பிணங்கள் எரியும் காட்டில் அத்தீயின் மத்தியில் எரி அகலையும், (தீச்சட்டி) தீயுமிழும் கண்களை உடைய பாம்புகளையும், ஏந்தி, நெருப்பைக் கக்கும் பூதங்கள் பண்பாட அக்னி தாண்டவம் ஆடுவதாகப் பைரவ சமய நூல்கள் கூறுகின்றன. தேவாரத்தில் எரியாடல், எரியேந்தியாடல், முதலியன ‘‘அங்கையில் அனலேந்தி ஆடுவார்’’ என்றும், ‘‘அனலேந்தி விளையாடும் அழகர்’’ என்றும் குறிக்கப்பட்டுள்ளன. நெருப்பிடை நின்று பெருமான் ‘‘ஆடும் நடனம், அழகர் கனலாடல், அனலாடல், அனலாடு நட்டம் என்று குறிக்கப்பட்டுள்ளன.

சிவபெருமான் தீயுள் மகிழ்ந்து ஆடுவதை அப்பர் ஒரு பெரும் பதிகமாகவே பாடியுள்ளார். இதில் தில்லைக்கூத்தன் தீயுள் நின்றாடுதல் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும். நீண்டெரி ஆடுமாறே, துளங்கெரி ஆடுமாறே, கனலெரியாடுமாறே என்று பலவாறு பாடுதலைக் காணலாம். இதில் அக்னி பாலனாகவும் விருத்தனாகவும் இருப்பதை ஒன்பதாவது பாடலிலும் இந்த அனலாடல் அதிசயமாக இருக்கிறதென்பதைப் பத்தாவது பாடலிலும் குறித்துள்ளது கண்டு மகிழத்தக்கதாகும்.

தொகுப்பு: அருள்ஜோதி

Related Stories: