நிம்மதியாக இருக்க இதுதான் வழி

தேஜஸ்வி

வாழ்வின் மிக முக்கியமான இரண்டு சொற்கள்

1. இல்லை 2. உண்டு.

இந்த இரண்டு சொற்களும் முறையே வருத்தத்தையும், மகிழ்ச்சியையும் தருகின்ற சொற்கள். இல்லை என்கிற சொல் துக்கத்தைத் தருகிறது. உண்டு என்கிற சொல் சந்தோஷத்தைத் தருகிறது. இது பொதுவான விஷயம். ஆனால், நம்மில் பெரும்பாலானோர் மகிழ்ச்சியை விட துக்கத்தில் இருப்பதற்கு என்ன காரணம் என்பதை சிந்தித்தால்  ஒரு விஷயம்தான் சட்டென நினைவுக்கு வரும்.

அவர்கள் இயல்பாக உண்டு என்பதைக் கண்டு கொள்வதைவிட, இல்லை என்பதை வலிய தேடிச்சென்று துக்கத்தை அடைகின்றார்கள். பல வருடங்களுக்கு முன்னால் என்னுடைய அலுவலகத்தில் நடைபெற்ற சில உரையாடல்களை நினைத்துப் பார்க்கிறேன். என்னுடைய நண்பர் ஒருவரிடத்தில் ஒரு குணம் உண்டு. அவர் எப்பொழுது பேச வந்தாலும், ஒருவித மனக்குறையோடு தான் பேசுவார். பெரும்பாலும் இல்லை என்ற பட்டியல் அவர் பேச்சில் நீண்டு வரும்.

‘‘என்ன சார் வாழ்க்கை இது?” என்று பெருமூச்சுவிடுவார். நல்ல சம்பளம் வாங்குகின்றார். மனைவி மக்கள் எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். சொந்த வீடு உண்டு. ஆயினும் அவருக்கு ஏராளமான குறைகள் உண்டு. சைக்கிளில் வந்த பொழுது, ஒரு மொபெட் வாங்க வேண்டும் என்று நினைத்தார். மொபெட் வாங்கிய பிறகு, ``இது என்ன சிறிய வண்டியாக இருக்கிறது. கொஞ்சம் பெரிய வண்டியாக இருந்தால் நன்றாக இருக்குமே’’ என்று ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கினார்.

மோட்டார் சைக்கிளில் இரண்டு பேருக்கு மேல் போக முடியவில்லை, மூன்று பேர் போவது சிரமமாக இருக்கிறது என்று ஒரு மாருதி 800 வாங்கினார். நீண்ட தூரம் போகும்பொழுது அதில் உட்கார்ந்து போவது கஷ்டமாக இருக்கிறது என்று அதற்கு அடுத்த நிலையில் உள்ள பெரிய காரை வாங்கினார். எந்தக் காரில் அவர் பயணம் செய்தாலும், சாலையில் போகின்ற இதைவிட பெரிய காரைக் காட்டி, அதில் உள்ள வசதிகள் இந்தக் காரில் இல்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டே வருவார். அவர் கார் வைத்திருந்தபொழுது, நான் ஒரு டூவீலர் வைத்திருந்தேன்.

அப்போது அவர், ‘‘உனக்கு என்ன? கவலை இல்லை. உன்னிடத்தில் எல்லாம் இருக்கிறது. நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய்” என்றார். நான் சொன்னேன்;

‘‘என்னுடைய மகிழ்ச்சியை நீ எடுத்துக்கொள். உன்னுடைய துக்கத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்” என்றேன். ‘‘என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்.

‘‘இல்லையப்பா... என்னுடைய டூவீலரை எடுத்துக்கொண்டு நீ மகிழ்ச்சியாக இரு. உன்னுடைய காரை நான் வாங்கிக்கொண்டு கஷ்டமாக இருக்கிறேன்” என்று சொன்னவுடன் சிரித்துக்கொண்டே பேசாமல் போய்விட்டார்.

நம்முடைய வாழ்க்கையில் நாம் காணும் மிக எதார்த்தமான விஷயம் இது. நீங்கள் யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள். அவர்கள் கஷ்டத்தை பட்டியலிடுவார்கள். அது இல்லை.. இது இல்லை.. என்று வரிசையாகப் பட்டியல் போடுவார்கள். அதுதான் அவர்கள் துக்கத்திற்குக் காரணம் என்பார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் துக்கத்திற்குக் காரணம், இல்லாத பொருளால் ஏற்படுவது அல்ல. அவர்களிடத்தில் இருக்கக் கூடிய பொருளைப் பற்றி கருதாததுதான் பெரும்பாலானோர் துக்கத்திற்கும், மனமகிழ்ச்சி இல்லாமைக்கும் காரணம். இதை தெரிந்து கொண்டுதான் ஒரு பாடல் சொல்லி வைத்தார்கள்.

தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை

அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினுங்

கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்ற

தெல்லாம்

எற்றே இவர்க்குநாம் என்று (நீதி நெறி விளக்கம்)

அது சரி,

இல்லை.. இல்லை.. என்று புலம்புவதால் என்ன கேடு நேர்ந்துவிடும் என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் இல்லை என்று புலம்புவது கேட்டினைத் தான்தரும்.

‘‘இல்லை இல்லை” என்று எண்ணி துக்கப்படுவதன் மூலமாக இரண்டு செயல்கள், அதுவும் எதிர்மறைச் செயல்கள் நம் மனதில் நடக்கின்றன. சூரிய உஷ்ணமானது லேசான மழை தூறலைக் கூட உறிஞ்சிவிட்டு, சூட்டை அதிகப்படுத்தி விடும். அதனால்தான், மழை பெய்தவுடன் வருகின்ற உஷ்ணம் அதிக ஆற்றலோடு நம்மைத் தகிக்கும். அதேதான், இந்த விஷயத்திலும் நடக்கிறது.

முதலில் அது உங்கள் மன ஆற்றலைக் குறைத்து, செயல்பட முடியாத ஒரு நிலையை உண்டாக்கிவிடுகிறது. துக்கத்தில் ஆழ்ந்தவன் எப்படிச் செயல்படமுடியும்? எனவே துக்கத்தில் உள்ளவன் முயற்சியின்றி முடங்கிப் போகின்றான். இது முதல் கேடு. அடுத்து இருக்கின்ற சந்தோஷத்தை, அதாவது நம்மிடம் இருக்கக்கூடிய பொருட்கள் கொடுக்கும் சந்தோஷத்தையும் அது இல்லாமல் செய்துவிடும். ஒரு அடிப்படையான விஷயத்தை தெரிந்துகொள்ள வேண்டும்.

100 சந்தோஷங்கள் ஒரு துக்கத்தைப் போக்காது. ஆனால், ஒரே ஒரு துக்கம் 100 மகிழ்ச்சி களைப் போக்கிவிடும். இது, உண்டு - இல்லை என்கின்ற விஷயத்திற்கும் பொருந்தும். ஒரு திரைப்படப் பாடல் வரி இது. ஒரு காலத்தில் மிகவும் புகழ்பெற்ற, பட்டி தொட்டிகளில் எல்லாம் எதிரொலித்த பாட்டு.

“ஆயிரம் இருந்தும்

வசதிகள் இருந்தும்

நோ பீஸ் ஆஃப் மைண்ட்.”

வசதி இருப்பவர்களுக்கும் அமைதியில்லை.

இல்லாதவர்களுக்கும் அமைதிஇல்லை.

இதற்கு எத்தனையோ காரணங்களைச் சொன்னாலும், அடிப்படையான உளவியல் பூர்வமான காரணம், இல்லை என்கிற எதிர்மறைச் சொல்தான். இன்னும் கொஞ்சம் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், பலவும் தங்களிடம் இருப்பதையே கண்டுகொள்ளாமல், இல்லை என்று நினைத்து வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றொரு வேடிக்கை என்ன என்று சொன்னால், பலருக்கு என்ன இல்லை என்று கேட்டால், சொல்லத் தெரியாது. இதைப் போய் பெரிய விஷயமாக சொல்லிக் கொண்டிருக்கிறோம்  என்று சிலர் சொல்வதற்கு வெட்கப் படுவார்கள். உளவியல் என்னவென்றால், இருப்பதின் சிறப்பு எவருக்கும் தெரிய வில்லை.

சரி. இதை எப்படிப் போக்கிக்கொள்வது?

1. என்னென்ன இல்லை என்பதை சிந்திக்கும் போதே என்னென்ன இருக்கிறது என்பதை எண்ணிப் பாருங்கள்.

2. இருப்பதையெல்லாம் எழுதுங்கள்.

 

3. என்ன இல்லை என்பதையும் எழுதுங்கள்.

 

4. அதோடு முக்கியமான விஷயம், எதனால் இல்லை என்பதையும், தகுதி இல்லாததால் இல்லையா, தகுதி இருந்தும் இல்லையா என்பதையும் எழுதுங்கள்.

5. இல்லாத பொருள் தனக்கு நிச்சயம் அவசியமா என்பதையும் எழுதுங்கள்.

6. அவசியம் என்றால் அதை எப்படிப் பெறலாம் என்றும் எழுதுங்கள்.

இந்தப் பட்டியலை வைத்து ஒரு பத்து நிமிடம் தயவு தாட்சண்யம் இல்லாமல், ஒப்பிட்டுப் பாருங்கள். நிம்மதி தானாக வரும். இருக்கின்ற பொருளின் அருமையும் தெரியும்.

Related Stories: