இந்த வார விசேஷங்கள்

15-10-2022 - சனி  சஷ்டி விரதம் மற்றும் புரட்டாசி 4-வது சனிக்கிழமை

விரதங்களில் சஷ்டி விரதம் சிறப்பானது. ஆறாவது திதி சஷ்டி திதி. அது ஆறாவது ராசி மாதமான புரட்டாசியில் வருவது மிகவும் சிறப்பு. அதுவும் இன்று சஷ்டி திதி மிருகசீரிஷ நட்சத்திரத்தில் வருகிறது. மிருகசீரிஷம் செவ்வாய்க் கிரகத்துக்கு உரியது. செவ்வாயின் அதிதேவதை முருகப் பெருமான். எனவே வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானை நினைத்து சஷ்டி விரதத்தில் வணங்குவது சாலச்சிறந்தது.

சகல நலன்களையும் அளிக்கும் சஷ்டி விரதம் இருந்து, மாலையில் முருகன் கோயிலுக்குச் செல்ல வேண்டும் செவ்வரளி மலர்களால் முருகனை பூஜிக்க வேண்டும்.

இரண்டாவதாக இது புரட்டாசி மாதத்தின் நான்காவது சனிக்கிழமை. சனிக்கிழமையை ஸ்திரவாரம் என்பார்கள். காரணம் சனி பகவான் ஒரு நன்மையைச் செய்து விட்டால் அது நிலைத்து நிற்கும். மிருகசீரிஷம் மிதுன ராசியில் உள்ளது. அங்குதான் மிருகசீரிஷம் நட்சத்திர அதிபதி செவ்வாய் இன்றைய தினம் இருக்கிறார்.

மிதுனம் புதனுக்குரிய ராசி. புதன் பெருமாளைக் குறிப்பவர். இது தவிர சனிக்கிழமை என்பது சனி பகவானின் அவதார தினமாகக் கருதப்படுகிறது. எனவே புரட்டாசியில் பெருமாளை நினைத்து விரதம் இருப்பது சனி தோஷங்களைக் குறைக்கும். புரட்டாசி சனிக்கிழமை தளிகை போட மறந்தவர்கள், இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது. காலையில் குளித்து விரதம் இருக்கத் தொடங்க வேண்டும். ஒரு மனைப் பலகையில் கோலம் போட்டு அதன் மீது குத்துவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.

குத்துவிளக்கின் முகப்பு, ஐந்து முகங்கள், தண்டு மற்றும் அடி பீடம் என எட்டு இடங்களில் மஞ்சள் குங்குமம், பொட்டு வைக்க வேண்டும். பூமாலை சாற்ற வேண்டும். அன்றைய பூஜையில் துளசி அவசியம் பயன்படுத்த வேண்டும். இதன் மூலமாக அஷ்ட லட்சுமிகளின் அருளும் நமக்கு கிடைக்கும். இன்னொரு பலகையில் கோலம் போட்டு, தலைவாழை இலையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் சித்திரான்னங்களைப் படைக்க வேண்டும். அவசியம் உளுந்துவடை செய்ய வேண்டும்.

ஏழுமலை அப்பனுக்குப் படையல் போடுவதால் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் ஏழு பட்சணங்களை வைக்க வேண்டும். பாயசமும், வெல்ல பானகமும் வைக்கவேண்டும். படைக்கும் பொழுது நாராயண கோபால நாமமும், கோவிந்த நாம சங்கீர்த்தனமும் உரக்கச் சொல்ல வேண்டும். இதனால் சனியாலும், செவ்வாயாலும் ஏற்படும் சுபத் தடைகள் நீங்கும். சனிக்கிழமை பெருமாள் ஆலயங்களுக்கு தலயாத்திரையாகச் செல்லலாம்.

திருவஹீந்திரபுரம், அண்ணன் கோயில், குணசீலம், உப்பிலியப்பன் கோயில், திருமலை, நவதிருப்பதிகள், ஸ்ரீவில்லிபுத்தூர், முதலிய திருத்தலங்களுக்குச் சென்று சுவாமியை வணங்குவது சிறப்பு. ஸ்ரீநிவாசன் என்ற திருநாமக் கோயில்கள் அனைத்தும் விசேஷம். வேங்கடேசப் பெருமாளை குலதெய்வமாகக் கொண்டவர்கள் தளியலோடு மாவிளக்கு போட்டு வணங்குவார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை என்கிற தலம் ஒன்று உண்டு.

 

அதை தென் திருப்பதி என்றும் சொல்லுவார்கள். அங்குள்ள பெருமாள் கோயிலில் நான்கு சனிக்கிழமையும் விசேஷமான பூஜைகள் நடைபெறும். கோவிந்தனை நினைக்க வேண்டிய நாள் இது.

17-10-2022 - திங்கள்  ஈஸ்வராஷ்டமி

இன்றைய தினம் இரவு 7.22, சூரியன் கன்னி ராசியில் இருந்து பெயர்ச்சி அடைந்து, துலா ராசிக்குச் செல்லுகின்றார். இன்று அஷ்டமி தினம். ஈஸ்வராஷ்டமி என்று சொல்வார்கள். சாந்த்ர ஆஸ்வின பகுள அஷ்டமி என்பார்கள். காலை சிவன் கோயிலுக்குச் செல்ல வேண்டும். மாலை சூரிய அஸ்தமனம் ஆனவுடன் பைரவரை வணங்க வேண்டும். இந்த அஷ்டமி தினம் புனர்பூசம் நட்சத்திரத்தில் வருவதால் விரதமிருந்து பைரவரை வணங்குபவர்களுக்கு குரு தோஷம் விலகும்.

குருவினுடைய ஆசிர்வாதம் கிடைக்கும். புனர்பூச நட்சத்திரத்தின் மூன்று பாதங்கள் மிதுன ராசியில் இருப்பதால், அது மூன்றாவது ராசியாகவும் இருப்பதால், சகோதரப் பகை நீங்கும். வளமான வாழ்வும் வெற்றியும், பதவியும் கிடைக்கும்.

18-10-2022 - செவ்வாய்  ராதா ஜெயந்தி

அஷ்டமி திதி என்பது கண்ணனுக்கு மட்டும் உரியதல்ல. ராதைக்கும் உரியது. இந்த அஷ்டமியில் வடக்கே உள்ள கிருஷ்ணா பக்தர்கள் ராதா ஜெயந்தியை மிக விசேஷமாகக் கொண்டாடுகிறார்கள். சில பகுதிகளில் மார்கழி மாதத்தில் கொண்டாடப்படுவதும் உண்டு. ராதை பிறந்த பர்சானா (Barsana), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இவ்வூரில் இராதை - கிருஷ்ணர் நினைவைப் போற்றும் விதமாக இராதா ராணி கோயில் அமைந்துள்ளது. ராதா எப்போதும் கிருஷ்ணரின் பக்கத்தில் இருப்பதாகச் சித்தரிக்கப்படும் ராதைக்கு, இன்றைய கௌடிய வைஷ்ணவ மத சாஸ்திரத்தில் சிறப்பான இடம் உண்டு. பிரம்ம வைவர்த புராணம், கற்க சம்ஹிதா போன்ற நூல்களில் கிருஷ்ணர் உடனான ராதாவின் உறவுமுறை பற்றி விரிவாகக் கொடுக்கப் பட்டுள்ளது. நிம்பர்க்கர் சம்பிரதாயத்தில் ராதைக்குச் சிறப்பிடம் உண்டு.

ஜெயதேவரின் அஷ்டபதியில் கிருஷ்ணர் ராதையின் தெய்வீகக் காதல் விளக்கப்படுகிறது. பாகவத சம்பிரதாயத்தில் ராதைக்கு ஒரு விசேஷமான இடம் உண்டு. கிருஷ்ண பிரேமையை ஒரு வடிவமாகத் திரட்டினால் அதற்கு ராதை என்று பெயர் கொடுக்கலாம். ராதையை வணங்காமல் கிருஷ்ண வழிபாடு முழுமையடைவதில்லை என்பார்கள்.

வடக்கே, யாரைப் பார்த்தாலும் “ராதே கிருஷ்ணா” என்றுதான் சொல்வார்கள். அது ஒரு மங்கல முழக்கமாக, ஒருவரை ஒருவர் பார்க்கும்போது சொல்லப்படுகிறது. இப்படிச் சொல்லும்போது சகல பாவங்களும் நீங்கிவிடும். ஒரு ஆன்மீக ஆனந்தம் தோன்றும். ஆண்டாள் கல்யாணம், ருக்மணி கல்யாணம், சீதா கல்யாணம், பத்மாவதி கல்யாணம் என்று பல கல்யாணம் இருந்தாலும், அஷ்டபதி பஜனை பாடி ராதா கல்யாணம் செய்வது மிகவும் விசேஷம்.

இப்பொழுதும் சிலர் திருமண வைபவங்களுக்கு முதல்நாள், ராதா கல்யாணத்தை நடத்துவதன் மூலம் தம்பதிகள் நல் வாழ்க்கை வாழ்வார்கள் என்கின்ற நம்பிக்கையோடு செய்கிறார்கள். ராதையை கிருஷ்ணப்ரியா என்று சொல்வார்கள். குழந்தை இல்லாதவர்கள் இந்த ராதா ஜெயந்தியைக் கொண்டாடலாம். ஒரு கலசத்தில் தீர்த்தம் பரிமளம் முதலியவற்றைச் சேர்த்து, ராதையையும் கிருஷ்ணனையும் ஆவாகனம் செய்து அலங்கரிக்க வேண்டும்.

வெண்ணெய் மற்றும் பலகாரங்களை வைத்து நிவேதனம் செய்யலாம். அந்த கலசத்தை ஒரு பட்டுத் துணியின் மீது தம்பதியர் மடியில் வைத்து மனம் உருகப் பிரார்த்திக்க வேண்டும். பிறகு கலசத்தை பழைய இடத்தில் வைத்துவிட்டு ஆரத்தி எடுக்கவும். ஏதேனும் ஒரு ஏழைக் குழந்தைக்கு தேவையான பொருட்களை வழங்கவும். இதனால் ராதை கண்ணனின் அருள் கிடைக்கும். வெகு சீக்கிரம் அவர்கள் வீட்டில் குழந்தைச் செல்வம் தவழும்.

18-10-2022 - செவ்வாய்  துலா ஸ்நானம்

துலா மாதம் என்பது ஐப்பசி மாதம். இன்று ஐப்பசி மாதம் பிறந்திருக்கிறது. துலாக்கோல் என்பது தராசு. தராசு இரண்டு பக்கமும் சமமாக இருப்பதைப் போல, இந்த மாதத்தில் இரவும் பகலும் சமமாக இருக்கும் என்பதால் துலா மாதம் என்றார்கள். காலச்சக்கரத்தின் 7ஆவது ராசி இந்த ராசி. இந்த ராசியில் ஆத்மகாரகன் சூரியன் நீசம் அடைகிறார். எனவே இந்த மாதத்தில் புனித நீராடுவதன் மூலம் ஆத்ம பலத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

துலா மாதமான ஐப்பசி மாதத்தில் காவிரி நதியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பார்கள். காவிரியில் ஒவ்வொரு நாளும் நீராடுவது சிறப்பு என்றாலும் துலா மாதமான ஐப்பசி மாதத்தில் நீராடுவது மிகச் சிறப்பு. பொதுவாக நதிகளில் கங்கைநதி உயர்வானது என்பார்கள். கங்கையில் நீராடும் பொழுது எல்லா பாவங்களும் போய்விடும் என்பது சாஸ்திரம். ஆனால், அந்த கங்கையின் பாவங்கள் எங்கே போகும் என்று சொன்னால், காவிரி நதியில்தான் போகும்.

அதனால், ஆழ்வார்கள் “கங்கையின் புனிதமாயக் காவிரி” என்று காவிரியைச் சிறப்பித்துப் பாடினர். இந்த காவிரிக் கரையில்தான் ஸ்ரீமன்நாராயணனின் ஐந்து அரங்கங்கள் இருக்கின்றன. தலைக்காவிரியில் ஆரம்பித்து மாயவரம் திருஇந்தளூர் வரை காவிரிக்கரையில் பெருமாள் யோகசயனத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பு. துலா மாதத்தில், கங்கை, யமுனை, சரஸ்வதி முதலிய அத்தனை புனித நதிகளும் காவேரியில் நீராடி புனிதம் பெறுகின்றன.

ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் தந்து அன்னதானம் செய்வது விசேஷம் என்று காவேரி மகாத்மியம் கூறுகிறது. சூரிய உதயத்திற்கு முன் நீராடி கிழக்குநோக்கி சூரிய நமஸ்காரத்தை செய்வது விசேஷம். அப்பொழுது சங்கல்பம் செய்துகொண்டு சூரியனை நோக்கி அர்க்கியம் விட வேண்டும். ஸ்ரீரங்கம், திருப்பராய்த்துறை, பவானி கூடுதுறை, திருவையாறு, திருவிடைமருதூர், பூம்புகார், மாயவரம் முதலிய பல்வேறு இடங்களில் துலா மாதத்தில் நீராடுவதற்கு துலா கட்டங்கள் உண்டு. அருகிலுள்ள கோயில்களிலிருந்து சுவாமி ஊர்வலமாக வந்து தீர்த்தவாரியும் நடக்கும்.

21-10-2022 - வெள்ளி  இந்திரா ஏகாதசி

இன்று மகாலட்சுமிக்குரிய வெள்ளிக்கிழமை. மக நட்சத்திரமும், பூர நட்சத்திரமும் இணைந்திருக்கிறது. பூரம் சுக்கிரனுக்குரிய நட்சத்திரம். சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. இப்படிப்பட்ட உன்னதமான நாளில் ஏகாதசி விரதம் இருப்பது அற்புதமான பலன்களைத் தரும். ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயர் உண்டு. இந்த ஏகாதசிக்கு இந்திரா ஏகாதசி என்று பெயர்.

மாகிஷ்மதி என்கிற நகரத்தை இந்திரசேனன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவனுக்கு எக்குறையும் இல்லாமல் இருந்தது. அவருடைய சபைக்கு ஒருநாள் நாரதர் வந்தார். இந்திரசேனனிடம் ‘‘உன் தந்தையை நான் சந்தித்தேன்” என்று சொல்ல, ‘‘என்னுடைய தந்தை எப்படி இருக்கிறார்?” என்று இந்திரசேனன் கேட்டான்.

அப்பொழுது தந்தை சொன்னதாக ஒரு தகவலை நாரதர் சொல்லுகின்றார்.  

“பூலோகத்தில் சென்று என்னுடைய குமாரன் இந்திரசேனனிடம் ஏகாதசி விரதமிருந்து, அடுத்த நாள் எனக்கு நீர்க்கடன் செய்யச்சொல். நான் பல பாவத்தினால் நரகத்தில் இருக்கிறேன். ஏகாதசி விரதம் என்னுடைய பாவங்களைத் தீர்த்து, இந்த நரக வேதனையிலிருந்து சொர்க்கத்திற்கு மாற்றும். அதனால் இந்த ஏகாதசி விரதத்தை எனக்காக என்னுடைய குமாரனிடம் இருக்கச்சொல். இதன் மூலமாக நான் மட்டுமல்ல நரகவாசிகள் அத்தனை பேருமே பயனடைவார்கள் என்று சொன்னார்” என்று சொல்லிவிட்டு, ஏகாதசி விரதம் இருக்க வேண்டிய முறையையும் இந்திரசேனனுக்கு உபதேசித்தார் நாரதர்.

புரட்டாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசி விரதத்தை சிரத்தையுடன் செய்து முடித்து தன்னுடைய தந்தைக்கும் முறையான நீர்க் கடன்களை தர்ப் பணமாகச் செய்தான். இதன் மூலமாக அவருடைய தந்தை உட்பட அனைவரும் சத்கதி அடைந்தனர். ஒரு குடும்பத்தில் பிதுர் தோஷங்கள் இருந்தால், அதற்கு எத்தனையோ பரிகாரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன அதில் ஒன்று இந்த புரட்டாசி தேய்பிறையில் வரக்கூடிய ஏகாதசி விரதம். இந்திரசேனன் அனுஷ்டித்த ஏகாதசி விரதம் என்பதால் இதனை இந்திரா ஏகாதசி என்று அழைக்கிறார்கள்.

இந்த விரதம் இருப்பதன் மூலமாக எல்லா விதமான சுபத்தடைகளும் விலகி வெற்றி கிடைக்கும். மனஉறுதி பெருகும். பிள்ளைகள் மிக நல்ல மேன்மையான நிலையை அடைவார்கள். ஏகாதசி விரதம் இருந்து மறுநாள் துவாதசியில் பாரணை செய்ய வேண்டும்.

அப்பொழுது கன்றுடன் கூடிய பசுவை வணங்க வேண்டும். இதன் மூலமாக முப்பத்து முக்கோடி தேவர்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாற்றி வழிபடலாம். இந்த ஏகாதசி பிதுர் தோஷத்தை நீக்கும் என்று சொல்வார்கள்.

தொகுப்பு: சங்கர்

Related Stories: