வள்ளுவர் சொல்லும் உறக்கம்!

குறளின் குரல்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

உறக்கம், மனித வாழ்வில் மிக முக்கியமான ஒரு பகுதி. உறங்காமல் இருந்தால் உடல் நலம் கெடுகிறது. சிறு குழந்தைகள் உறக்கத்திலேயே வளர்கின்றன. தொடர்ந்த உறக்கமின்மை ஒரு மனிதனை உருக்குலைத்து விடுகிறது. ‘நித்திரை, துயில், துஞ்சுதல்’ எனப் பல சொற்களால் குறிப்பிடப்படுகிறது மனிதர்களின் உறக்க நிலை. விழிப்புணர்ச்சியுடன் பல்வேறு செய்திகளைப் பேசும் திருவள்ளுவர் உறக்கத்தைப் பற்றியும் பல குறட்பாக்களில் பேசுகிறார்.

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.

(குறள் எண் 339)

இறப்பென்பது உறங்குவதைப் போலத்தான். பிறப்பு என்பது உறங்கி விழிப்பதைப் போலத்தான்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்

கெடுநீரார் காமக் கலன்.

(குறள் எண் 605)

காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், உறக்கம் இந்த நான்கும் கெடுகின்ற இயல்பை உடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்

யாதொன்றும் கண்பாடு அரிது.

(குறள் எண் 1049)

ஒருவன் நெருப்பினுள் இருந்து உறங்குவதும் இயலக்கூடும். ஆனால், வறுமையில் உறக்கம் கொள்வது அரிது.

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு.

(குறள் எண் 1103)

`தாம் விரும்பும் காதலியின் மெல்லிய தோளில் சாய்ந்து உறங்கும் உறக்கத்தை விட, அந்தத் தாமரைக் கண்ணனாகிய திருமால் வாழும் சொர்க்கம் இனியதா என்ன?’ எனக் கேட்கிறான் காதலன்.

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா

என்னல்லது இல்லை துணை.

(குறள் எண் 1168)

‘இந்த இரவுக்காலம் பெரிதும் இரங்கத்தக்கது. எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டது இது. அதனால், தூங்காத என்னை அல்லாமல் வேறு துணையில்லாமல் இருக்கிறது’ என்கிறாள் காதலி. நம் புராணங்களும், இலக்கியங்களும் கூட உறக்கத்தைப் பற்றிப் பேசுகின்றன. பாற் கடலில் பெருமாள் பாம்பணைமேல் துயில் கிறார். திருவரங்கத்திலும் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார். அப்படியானால் அவர் உறங்குகிறாரா? அல்ல.

உறங்காமல் உறங்கும் உறக்கம் அது. பெருமாளின் துயில், துயிலும் காலத்திலும் எல்லாவற்றையும் அவர் அறிந்துகொண்டே துயில்வதால், அறிதுயில் எனப்படுகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சுருட்டப் பள்ளி என்ற திருத்தலத்தில், பள்ளிகொண்டீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இங்கு சிவபெருமான் பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். பற்பல தலங்களில் அருவம், உருவம், அருவுருவம் என மூன்று நிலைகளிலும் காட்சி தருபவர் சிவன். அவரை அவரது நடனக் கோலத்தில் பல ஆலயங்களில் நாம் தரிசிக்கலாம்.

ஆனால், சிவபெருமானின் சயனக் கோலம் என்பது சுருட்டப்பள்ளிக் கோயிலில் மட்டுமே காணப்படும் தனிச்சிறப்பு. அமிர்தத்திற்காகப் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய நஞ்சை உண்டு நஞ்சுண்ட கண்டன் ஆனான் சிவன். பின்னர், அந்தக் களைப்பு நீங்க சுருட்டப்பள்ளியில் சற்று நேரம் துயில் கொண்டதாகச் சொல்கிறது சுருட்டப்பள்ளியின் தலபுராணம்.வாழ்வின் பெரும்பகுதியை உறங்கியே கழித்த ஒரு பாத்திரத்தையும், பதினான்கு ஆண்டுகள் உறங்கவே உறங்காமல் கழித்த இன்னொரு பாத்திரத்தையும், ஒருவருக்காக மற்றவர் உறங்கிய ஒரு பாத்திரத்தையும் ராமாயணம் சொல்கிறது.

பிரம்மனிடம் நித்யத்துவம் என வரம் கேட்க எண்ணினான் ராவணன் தம்பி கும்பகர்ணன். தேவர்களின் பொருட்டாக அவன் நாக்கைப் பிறழவைத்தாள் பிரம்மனின் மனைவியான அன்னை கலைவாணி. அவன் நித்யத்துவம் எனக் கேட்பதற்குப் பதிலாக நாதடுமாறி நித்ரத்துவம் என வரம் கேட்டான். தந்தேன் எனக் கூறி மறைந்தார் பிரம்ம தேவர். பின்னர் அந்த வரம் ஆறுமாத உறக்கமென்றும், ஆறுமாத விழிப்பென்றும் பிரம்மனின் கருணையால் மாற்றப் பட்டது. அதன்படி கும்பகர்ணன், ஒரு வருடத்தின் ஆறு மாதங்களைத் தூக்கத்திலேயே கழிக்கலானான்.

ராமனது வனவாசத்தின்போது, உடன்வந்த லட்சுமணன் பதினான்கு ஆண்டுகளும் இரவிலும், பகலிலும் உறங்கவே உறங்காமல் ராமனையும் சீதையையும் காவல் காத்தான். உறங்காமல் வில்லேந்திக் காவல் காத்த காரணத்தால், `உறங்காவில்லி’ என்று இலக்குவனுக்குப் பெயர் ஏற்பட்டது. ஆனாலும், லட்சுமணனுக்குக் களைப்பே தோன்றவில்லையாம். ஏன் தெரியுமா? அவனுக்கான உறக்கத்தைத் தான் உறங்கினாள் ஈருடலும் ஓருயிருமாக வாழ்ந்த அவன் மனைவி ஊர்மிளை.

நித்திரைக்கென்று ஒரு தேவி உண்டு. அவளே நித்திராதேவி எனப்படுகிறாள். அந்த தேவியை உபாசித்து, கணவனுக்கான உறக்கத்தை, தான் உறங்கலாம் என்று வரம் வாங்கிக் கொண்டாள் ஊர்மிளை என்கிறது ஓர் அபூர்வ ராமாயணம். உறங்காதிருந்தாலும் களைப்பையே லட்சுமணன் உணராதிருந்த காரணம் ஊர்மிளைக்கு, நித்திராதேவி அளித்த வரம்தான். ராம, ராவண யுத்தகாலத்தில் கும்பகர்ணன் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தான்.

அவனை யுத்தத்திற்கு அனுப்ப எண்ணினான் ராவணன். ஆனால், கும்பகர்ணன் விழிக்க வேண்டுமே? அவனை விழிக்கச் செய்வதன் பொருட்டு வீரர்களை கும்பகர்ணனின் அரண்மனைக்கு அனுப்பினான். வீரர்கள், யானைகளை அழைத்துவந்து அவற்றின் கால்களால் கும்பகர்ணன் மேனியை இடறச்செய்தும், இன்னும் பல்வேறு தொல்லைகளைக் கொடுத்தும் அவனை ஒருவாறு எழுப்பினார்கள். அப்போது அந்த வீரர்கள் சொல்வதாகக் கம்பராமாயணத்தில் ஒரு புகழ்பெற்ற பாடல் உண்டு.

உறங்குகின்ற கும்பகர்ண!  உங்கள்மாய வாழ்வெலாம்

இறங்குகின்ற தின்றுகாண் எழுந்திராய் எழுந்திராய்

கறங்குபோல விற்பிடித்த காலதூதர் கையிலே

உறங்குவாய் உறங்குவாய் இனிக்கிடந்துறங்குவாய்.

‘உன் வாழ்க்கை முடியப்போகிறது. நீ இறக்கப்போகிறாய். காலதூதர் கையில் அல்லவா இனி நீ உறங்க வேண்டும்? எழுந்திரு!’ என அந்த வீரர்கள் அதட்டினார்கள் என்கிறது பாடல். பலராலும் போற்றப்படும் சந்தச் சிறப்பு நிறைந்த இந்த அழகிய பாடலைக் கம்பர் எழுதியிருக்க முடியாது என்றும், இது இடைச் செருகலாகத்தான் இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார், நீதிபதி மு.மு.இஸ்மாயில்.

‘ராவண ராஜ்ஜியத்தில் அவன் தம்பியை எழுப்பும் ராவணனின் வேலையாட்கள், கும்பகர்ணனுக்கு எதிரான வாசகங்களைச் சொல்ல எப்படித் துணிவார்கள்? இந்த உளவியல்கூட அறியாதவரா கம்பர்?’ என்பது கம்பன் காதலர் இஸ்மாயிலின் வாதம். அனுமன், சுந்தரகாண்டத்தில் சீதையை அசோகவனத்தில் பார்க்கிறான். சீதாதேவியுடன் பேச வேண்டுமே? அதற்கு அவளைக் காவல் காத்துக்கொண்டிருந்த அரக்கியர் இடைஞ்சலாக இருக்கிறார்களே? என்ன செய்வதென்று யோசித்த அனுமன், ஒரு மந்திரத்தின் மூலம் அத்தனை அரக்கியரையும் ஒரே நேரத்தில் ஆழ்ந்து உறங்கச் செய்துவிட்டதாகச் சொல்கிறது ராமாயணம்.

அனுமன், வந்ததையோ சீதாப் பிராட்டியுடன் பேசியதையோ அந்த அரக்கிகள் அறியவில்லை. கம்பர், பாலகாண்டத்தில் கோசல நாட்டை வர்ணிக்கும்போது, என்னென்னவெல்லாம் எங்கேங்கேயெல்லாம் உறங்குகின்றன என ஓர் அழகிய பட்டியல் தருகிறார்.  

 

நீரிடை உறங்கும் சங்கம்

நிழலிடை உறங்கும் மேதி

தாரிடை உறங்கும் வண்டு

தாமரை உறங்கும் செய்யாள்

தூரிடை உறங்கும் ஆமை

துறையிடை உறங்கும் இப்பி

போரிடை உறங்கும் அன்னம்

பொழிலிடை உறங்கும் தோகை!

‘நீர்நிலைகளில் சங்கு உறங்கும். நிழல்கண்ட இடத்தில் எருமை உறங்கும். மலர் மாலைகளில் வண்டு உறங்கும். தாமரையில் திருமகள் துயில்வாள். பொய்கையின் அடிப்பகுதியில் ஆமை உறங்கும். கடல் துறைகளில் முத்துச் சிப்பி உறங்கும். வைக்கோல் போர்களில் அன்னம் உறங்கும். நந்தவனங்களில் மயில்கள் உறங்கும்.’ என உறக்கக் காட்சி ஒன்றைச் சொல்லோவியமாகத் தீட்டுகிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர்.

குமரகுருபரர் எழுதிய நீதிநெறி விளக்கம் என்ற நூலில் ஒரு பாடல், செயலூக்கம் உடையவர்கள் எப்படிச் செயல்படுவார்கள் என்பதைப் பட்டியலிட்டுப் பேசுகிறது.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்

கருமமே கண்ணாயி னார்

‘தாம் மேற்கொண்ட ஒரு செயலைச் செய்து முடிப்பதிலே ஊக்கமுடையவர்கள் தம் உடல் துன்பத்தைப் பொருட்படுத்தமாட்டார்கள். பசியைக் கருதமாட்டார்கள். கண்மூடி உறங்கவும் மாட்டார்கள். தங்களுக்குப் பிறர் செய்யும் தீமையையும் பொருட்படுத்தமாட்டார்கள்.

காலத்தின் அருமையையும் எண்ணிப் பார்க்கமாட்டார்கள். பிறர் தங்களை அவமதிப் பதையும் மனத்தில் கொள்ளமாட்டார்கள்’ என்று சொல்லும் குமரகுருபரர், செயலூக்கம் உடையவர்களுக்கு உறக்கம் வராது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். திரையிசைப் பாடல்களும் தூக்கத்தைப் பற்றியும், தூங்காதிருப்பதைப் பற்றியுமெல்லாம் பேசுகின்றன.

‘தூங்காத கண்ணென்று ஒன்று, தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே.., தூங்காதே தம்பி தூங்காதே..’ என்றெல்லாம் திரைப்பாடல்கள் ஒலிப்பதைக் கேட்கிறோம்.‘தாய் சொல்லைத் தட்டாதே’ திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், பி.சுசீலா குரலில் ஒலிக்கும் கண்ணதாசன் பாடல், உறக்கத்தைப் பற்றிச் சற்று விரிவாகவே பேசுகிறது. காதலனைப் பிரிந்த பிரிவாற்றாமை காரணமாகக் கண்விழித்திருக்கும் தலைவி, உலகமெல்லாம் உறங்கும்போது தனக்கு உறக்கம் வரவில்லையே என மனம் கசிந்து பாடுகிறாள்.

பூவுறங்குது பொழுதும் உறங்குது

நீ உறங்கவில்லை நிலவே

கானுறங்குது காற்றும் உறங்குது

நான் உறங்கவில்லை...

மான் உறங்குது மயிலும் உறங்குது

மனம் உறங்கவில்லை என்

வழி உறங்குது மொழியும் உறங்குது

விழி உறங்கவில்லை...

தாலாட்டுப் பாடல்களெல்லாம் குழந்தைகளை உறங்க வைக்கவென்றே பாடப்படும் பாடல்கள்தான். தால் என்றால் நாக்கு. ‘ஆராரோ ஆரிரரோ’ என நாக்கை அசைத்து ஒலி எழுப்பிப் பாடுவதால் அதற்குத் தாலாட்டு எனப் பெயர் வந்தது என்கிறார்கள். பழந்தமிழ் இலக்கியத்தில், பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் தாலப்பருவம் என்றே ஒரு பருவம் உண்டு. ‘தாலோ தாலேலோ’ எனக் குழந்தைகளைத் தாலாட்டும் பருவம் அது.

நாட்டுப் பாடல்களிலும் கற்பனை நயத்தோடு கூடிய அழகிய தாலாட்டுப் பாடல்கள் பல உண்டு. பல நாட்களாக இரவு முழுவதும் உறக்கமே வராமல் தவிப்பவர்கள் இருக்கிறார்கள். உறக்கமின்மை என்ற வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள். அத்தகை யவர்களின் பிரச்னை தீர இயற்கை வைத்தியம் ஒரு குறிப்புத் தருகிறது.ஒரு நாளின் கடைசி உணவைச் சூரியாஸ்தமனத்திற்கு முன்னர் சாப்பிட வேண்டும் என்றும் அந்த உணவு சமைக்காத உணவாய் இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது அது. அப்படிச் செய்தால் இரவு நல்ல உறக்கம் வரும் என்கிறார்கள்.

கைப்பேசியைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பது உறக்கத்தைக் கெடுக்கிறது. படுக்கப்போவதற்கு இரண்டு மணிநேரம் முன்னதாக கைப்பேசியைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்துவிட்டால், இயல்பான உறக்கம் கைகூடும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு. உன்னைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு.’ என்றார் நம் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். ‘எழுமின் விழிமின் குறிசாரும் வரை நில்லாது செல்லுமின்’ என்றார் வீரத்துறவி விவேகானந்தர். அளவற்ற உறக்கத்தைத் தவிர்த்து, உடல் நலனுக்குத் தேவையான அளவான உறக்கத்தை மேற்கொண்டு வள்ளுவர் காட்டிய வழியில் சாதனைகள் செய்வோம்.

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

Related Stories: