புகழ் மடந்தை - கீர்த்திலட்சுமி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

பெரியோர்களை அடுத்து, நாம் கல்வி கேள்விகளின் வாயிலாக நல்லறிவைப் பெற்றுக் கொள்ளுகிறோம். கடுமையாக உழைத்து பெருஞ்செல்வத்தை அடைந்துவிடுகிறோம். ஆனால், புகழை அப்படிச் சுலபமாகஅடைந்துவிடமுடியாது.அது மெதுவாகவே நம்மை வந்தடையும். நல்லொழுக்கத்தினாலும், உயர்ந்த குணத்தாலும், பிறருக்கு உதவும் பண்பினாலும், கொடை அளிப்பதாலுமே ஒருவருக்குப் புகழ் வந்தடைகிறது. புகழ் ஒன்றே மனிதன் மாண்ட பின்பும் அவனது பெருமைகளை உலகில் நிலைபெறச் செய்கின்றது. அதனால், அதுவே நிலையானதென்று பெரியோர்கள் கூறுகின்றனர். பழந்தமிழர் உயிரைக் கொடுத்தேனும், தம் புகழை உலகில் நிறுத்த வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர்.

நந்திவர்மன் `நந்திக் கலம்பகம்’ என்னும் தமிழ் நூலைக் கேட்க, தம் உயிரைக் கொடுத்து, தம் புகழை நிலைபெறச் செய்தான். புறநானூறு என்னும் நூல், உயிரைக்கொடுத்தேனும் நிலையான உயர்ந்த புகழை அடைய வேண்டும் என்று கூறுகிறது. திருவள்ளுவர், ‘‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது, ஊதியமில்லை உயிர்க்கு’’ என்கிறார். பிறருக்குக் கொடுத்து மகிழ்வது, புகழோடு வாழ்வது ஆகிய இரண்டுமே உயிருக்கு உண்மையான ஊதியம் என்பது இதன் பொருள்.

அள்ளிக் கொடுக்கும் வள்ளல்கள் தம் கொடைத் திறத்தால் இந்த உலகில் நிலையான புகழைப் பெற்றிருக்கின்றார்கள். கர்ணன் கொடையால் புகழ்பெற்றான். பாரி முதலான வள்ளல்கள், புலவர்களால் மட்டுமின்றி சுந்தரமூர்த்தி சுவாமிகள் முதலிய அருளாளர்களாலும் போற்றப்பட்டுள்ளனர். இராஜராஜசோழன், இராஜேந்திர சோழன் முதலிய மாமன்னர்கள், தங்கள் தோள்வலிமையாலும், புகழ் பெற்றிருக்கின்றனர். கபிலர், பரணர் முதலிய புலவர்கள் தமிழ்ப் புலமையால் நிலைத்த புகழை அடைந்துள்ளனர்.

இப்படி ஒவ்வொருவரும் தத்தம் அரிய செயலால் பெரும்புகழைப் பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் வாழ்ந்து முடிந்து பலநூறு ஆண்டுகள் ஆன பின்பும், அவர்கள் பெற்றிருக்கும் புகழால் அவர்களுடைய பெருமைகளை இந்த சமுதாயம் நினைவுகூர்ந்து போற்றிக்கொண்டிருக்கிறது. செல்வர்களின் செல்வம் இப்போது இல்லை. மாமன்னர்கள் ஆண்ட நாடுகள் அவர்களின் வாரிசுகளிடம் இல்லை. ஆனால், அவர்களுடைய புகழ் நிலைபெற்றிருக்கின்றது.

ஆகவே உலகில் வாழ்வாங்கு வாழ்வதால், புகழ் தானே வந்தடையும். புகழால், திசையனைத்தும் செல்வாக்கு உண்டாகிறது. செல்வாக்கு பெற்றவர்களுக்குச் செயல்களைச் சாதிப்பது எளிதாகிறது. புகழை மகாலட்சுமியின் அம்சமாகக் கூறுவர். அந்த வடிவில் விளங்கும் லட்சுமியைக் கீர்த்திலட்சுமி என்பர். அவளைத் தமிழில் `புகழ் மடந்தை’ என்றும், `இசை மடந்தை’ எனவும் போற்றுகின்றனர். இசை என்ற சொல் இங்கே புகழ் என்னும் பொருளைத் தருகின்றது. கல்வெட்டுக்களில் கீர்த்திலட்சுமியை, இசை மடந்தை என்றே குறித்துள்ளனர். சோழ மன்னர்களின் கல்வெட்டில் பூமாது, ஜெயமாது ஆகியோருடன் புகழ்மாதும் போற்றப்படுகிறாள். சில கல்வெட்டுக்களில், அவள் இசை மடந்தை என்றும், இசை மாது என்றும் குறிக்கப்பட்டுள்ளாள். திருக்குறளில் வள்ளுவர், புகழை இசை என்னும் சொல்லால் குறித்துள்ளார்.

புகழ் மடந்தையான கீர்த்திலட்சுமி, தம்மிடம் சேர்ந்திருக்க வேண்டும் என விரும்புவர். அதுவே, அவர்களை உயர்ந்த நிலையில் வைக்கும். அன்பர்களுக்கு தாழாத கீர்த்தி உண்டாக வேண்டு மென்று வாழ்த்துகின்றனர். பதினாறு செல்வங்களில், ஒன்றாகப் புகழ் கருதப்படுகிறது. முனிவர்கள் அரசர்களைக் கீர்த்திமானாக இருக்க வேண்டுமென்று வாழ்த்துகின்றனர்.

எல்லோரும் கீர்த்திமானாக, தம் அரிய செயலால் புகழ் படைத்து விளங்க வேண்டுமென்று நவராத்திரி நன்னாளில் அன்னை மகாலட்சுமியை வணங்கித் துதிப்போம். புகழ் மடந்தையாக விளங்கும் மகாலட்சுமியை, ஞானிகள் பல்வேறு வடிவங்களில் கண்டு மகிழ்ந்திருக்கின்றனர். அறிவால் வரும் புகழ், ஆற்றலால் வரும் புகழ், கொடையால் வள்ளல் தன்மையால் வரும் புகழ், என பல்வேறு புகழ் நிலைகளின் தன்மைக்கேற்ப தோன்றி அருள்பாலிக்கின்றாள். அவற்றுள் ஒன்றான ‘‘எண்திசை மதிக்க வரும் ராஜயோக கீர்த்தி லட்சுமியை இங்குக் காணலாம்’’.

இதில், மகாலட்சுமி கீர்த்திலட்சுமியின் சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறாள். திசை எட்டிலும் வென்ற பொருளைக்கொண்டு நிறைந்த செல்வப்பேழை, அவள் திருவடியில் உள்ளது. அவர் சந்நதியில் அமைதி தவழ்வதைக் குறிக்கும் வகையில், மான்கள் இடம்பெற்றுள்ளன. எட்டுத் திசைகளிலும் பெற்றுள்ள செல்வாக்கால், அத்தனை தெய்வங்கள் அளித்த அடையாளப் பொருட்களை ஏந்தியவாறு அப்சரப் பெண்கள் நிற்கின்றனர்.

கிழக்குத் திசையில் இருந்து இந்திரன் அளித்த கொடியும்; தென்கிழக்கிலிருந்து அக்னி அளித்த அடுக்கு தீபத்தையும்; நிருதி திக்கில் நிருதி அளித்த கண்ணாடியையும்; மேற்குத் திசையிலிருந்து வருணன் அளித்த சங்கையும்; வாயு திக்கிலிருந்து வாயு அளித்த சாமரத்தையும்; வடதிக்கிலிருந்து குபேரன் திரையாக அளித்த சுவர்ண யானையையும்; ஈசான திக்கிலிருந்து ஈசானன் அளித்த நிறைகுடத்தையும் ஏந்தியவாறு அப்சரப் பெண்கள் சூழ்ந்துள்ளனர். இந்த எட்டுப் பொருட்களும், மங்கலப்பொருட்களாகும். இவற்றை அஷ்டமங்கலம் என்பர். இவற்றுடன் மகாலட்சுமியை வைத்து வழிபட செல்வப் பெருக்கு உண்டாகும்.கீர்த்திலட்சுமியான இந்தத் திருமகளை வழிபடுவதால், எண்திசை மதிக்கவரும் புகழ் உண்டாகும். புகழால் செல்வாக்கு உயரும்!

தொகுப்பு: அருள்ஜோதி

Related Stories: