கோமதியம்மன் ஆடித்தபசு

10-8-2022

உமை ஒரு பாகனாய் காட்சி தரும் சிவ பெருமான் சங்கரன் கோவிலில் புன்னை வனத்தில் பசுக்கூட்டங்களின் நடுவே அன்னை கோமதி அம்மன் ஊசி முனையில் தவம் இருந்ததை மெச்சி, நாராயணரை தனது இடது பாகத்தில் ஏற்று சங்கரநாராயணராக காட்சியளித்தனர்.

இந்த நிகழ்வு ஒரு ஆடி மாதத்தில் நிகழ்ந்தது

இன்றைக்கும் ஆடி மாதத்தில் சங்கரன்கோவிலில் தவசு திருவிழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆடித் தபசின் பன்னிரண்டு நாளும், ஊர் மக்கள் தங்கள் வீட்டு விழாவைப் போல் கொண்டாடுகின்றனர்! ஆடி மாதத்தின் பெளர்ணமி நன்னாளில், உத்திராட நட்சத்திர நாளில்தான் சிவனாரும் பெருமாளும் சங்கரநாராயணராகக் காட்சி தந்தருளினர்.

அதனால்தான் ஒவ்வொரு ஆடி பெளர்ணமிக்கு முன்னதாக, ஆடித்தபசு விழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அம்பாளுக்கான பிரதான விழா என்பதால், அம்பாள் மட்டுமே தேரில் எழுந்தருளுவாள். கடைசி நாளில் அம்பிகை தபசு மண்டபம் சென்று, கையில் விபூதிப்பையுடன் ஒரு கால் ஊன்றி தவம் இருப்பாள். மாலையில் சங்கர நாராயணர் இவளுக்குக் காட்சி தருவார்.

 

சங்கரன்கோவில் வித்தியாசமான கோயில். சிவன், அம்பாள் சந்நிதிகளுக்கு நடுவில் சங்கரநாராயணர் சந்நதி உள்ளது. சிவனுக்குரிய வலப்பாகத்தில்  தலையில் கங்கை, பிறைச்சந்திரன், அக்னி, ஜடாமுடி, காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை  இருக்கிறது. திருவாசியில் நாகவடிவில் சங்கரன் குடை பிடித்தபடி இருக்கிறான்.

திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணிகிரீடம், காதில் மாணிக்க குண் டலம், மார்பில் துளசிமணி மற்றும் லட்சுமி மாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் இருக்கிறது. இவர் பக்கமுள்ள திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான். இந்த சந்நதியில் காலை பூஜையில் துளசி தீர்த்தம் தரப்படும். மற்ற நேரங்களில்  விபூதி தருவர். பூஜையின் போது வில்வம், துளசி மாலைகளை அணிவிக்கிறார்கள்.

பகல் 12 மணியளவில் கோமதியம்மன் தங்கச்சப்பரத்தில் புறப்பட்டு வீதி யுலா வந்து, தெற்கு ரதவீதியிலுள்ள தபசு மண்டபத்திற்கு எழுந்தருள்வாள். மாலை 4.00 மணிக்கு கோயிலில் இருந்து ரிஷப வாகனத்தில் சிவன் சங்கர நாராயணராக அலங்கரிக்கப்பட்டு, காட்சி மண்டபம் வந்து சேர்வார். அங்கிருந்து காட்சிப் பந்தலுக்கு போவார்.

தபசு மண்டபத்தில் இருந்து அம்பாள் புறப்பட்டு காட்சிப் பந்தல் வந்தவுடன் பட்டு, பரிவட்டம், மாலை மரியாதை நடைபெறும். அப்போது தன் வலது காலை உயர்த்தி, இடக் காலால் நின்றவாறு தலை யில் குடம் வைத்து, அதை இரு கைகளால் பிடித்த கோலத்தில் அம்பாள் தவக்கோலத்தில் காட்சி அருள்கிறாள். இந்தக் காட்சியை பல்லாயிரம் பக்தர்கள் கண்டு வணங்குகிறார்கள்.

அம்பாளின் தபசுக் காட்சியின்போது பக்தர்கள் பருத்தி, மிளகாய் வத்தலையும், விவசாயிகள் நெல், சோளம், கம்பு, மிளகாய்வத்தல், பஞ்சு, பூ என வயலில் விளைந்த பொருட்களை அம்பாள் முன்பு நேர்த்திக் கடனைச் செலுத்துகிறார்கள். அம்பாள் சுவாமியை மூன்று முறை வலம் வருவாள். சிவன் அம்பிகைக்கு 6.15 மணிக்கு சங்கர நாராயணராக காட்சி தருவார். விழாவில் தினமும் காலை, இரவில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும். விழாவின் 9ம் நாள்  தேரோட்டம் நடைபெறும்.

விழாவின் சிகர நிகழ்ச்சிதான் ஆடித்தபசு

சங்கரநாராயணராக அம்மைக்கும் மக்களுக்கும் காட்சி அளித்த ஈசன் நள்ளிரவு 12 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமி யாக அம்பாளுக்கு காட்சி அளிக்கும் 2ஆம் தபசுக் காட்சி நடக்கும். இந்த விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

முனைவர் ஸ்ரீராம்

Related Stories: