குரு பகவானின் மகிமைகள்

குரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9ம் இடங்களை நோக்குவார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை குருபகவானின் நட்சத்திரங்கள். தனுசு ராசிக்கும் மீன ராசிக்கும் தலைவரான குருவிற்கு தானியங்களில் கடலையும், ரத்தினங்களில் புஷ்பராகமும், மலர்களில் முல்லையும், வேள்வி சமித்து குச்சி அரசும், சுவைகளில் இனிப்பும், உலோகங்களில் தங்கமும், சித்ரான்னங்களில் தயிர்சாதமும் உரியவை.

குரு தசை 16 வருடங்கள் கொண்டது. ஜோதிடத்தில் முழு சுப கிரகம் எனும் அமைப்பையும், பெருமையும் பெற்ற ஒரே கிரகம் இதுவே. வாழ்வின் ஆதாரமான தனம், குழந்தை வரம் எனும் புத்திரசம்பத்து இரண்டையும் அளிக்கக் கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு ஒருவரே. குரு பகவான் திருவருள் பெற்றால் மந்திரி யோகம், நிதித்துறை, நீதித்துறை, வங்கி, கல்வி, வேத உபதேசம் போன்ற அனைத்தையும் பெறலாம். இவை குருவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. முழு சுப கிரகமாக இருப்பதால் அவருக்கு ஸ்தான, கேந்திர தோஷம் உண்டு. குரு எந்த இடத்தில் இருந்தாலும் ஏதாவது ஒரு கிரகத்துடன் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். அப்படி சேர்க்கை பெறாமல் தனியாக இருப்பது சிறப்பல்ல.

ராசி, அம்சத்தில் பலம் பெற்ற குரு அமர்ந்து விட்டால் அந்த ஜாதகருக்கு அந்த பலமே போதுமானது. கவுரவம், செல்வாக்கு, பட்டம், பதவிகள் தானாகவே தேடி வரும். ஆன்மிக விஷயங்களில் ஜாதகர் ஆத்மார்த்தமாக ஈடுபடுவார். மத போதகர்கள், சொற்பொழிவாளர்கள், கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்வோர், தர்மஸ்தாபனம் அமைத்திருப்பவர்கள், தலை சிறந்த வக்கீல்கள், நீதிபதிகள் போன்றோர் பரிபூரண குருவின் திருவருள் பெற்றவர்களே.குருவருள் கிட்ட முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபடலாம்.

வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து கொண்டைக்கடலை மாலை சாற்றலாம். நம் கை விரல்களில் ஆள்காட்டி விரல் குருவிரல் என்றும் அதன் அடியில் உள்ள மேடு குருமேடு என்றும் அழைக்கப்படும். அந்த மேட்டில் வளையம் போன்ற (சாலமன் ரிங்) அமைப்பு உள்ளவர்கள் உயர்ந்த உன்னத பதவி, செல்வாக்கு, சொல்வாக்கு கொண்டவர்களாய்த் திகழ்வார்கள். வியாழக்கிழமையும், 3, 12, 21, 30ம் தேதிகளும், மஞ்சள் நிறமும் குருவின் அம்சங்களாகக் கருதப்படுகின்றன. குரு அருள் இல்லையேல் திருவருள் இல்லை. குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்று வாக்குகள் உண்டு.

Related Stories: