நிதானம்!

நபிகளார்(ஸல்) கூறினார்கள்: “மறுமைக்கான செயல்களைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் நிதானத்துடனும் காலதாமதம் செய்தும் நடந்துகொள்ளுங்கள்.” (ஆதாரம்: அபூதாவூத்)

இந்த நபிமொழிக்குப் புகழ்பெற்ற மார்க்க அறிஞர் மௌலானா முஹம்மது பாரூக் கான் விளக்கம் அளித்துள்ளார். உலக விவகாரங்களின் விளைவு நல்லதாக இருக்குமா, பெருங்கேடு விளைவிப்பதாக முடியுமா என்பது எந்த ஒரு மனிதருக்கும் நிச்சயமாகத் தெரியாது. எனவே, இந்த விவகாரங்களில் நிதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்படுவதே பொருத்தமானது. இவற்றில் எந்த நிலையிலும் அவசரப்படவோ

பதற்றப்படவோ கூடாது.

இதற்கு மாறாக, எந்த அறங்களில் ஈடுபட்டால் மறுமையில் நல்ல பலன் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இருப்பதில்லையோ, எவற்றைக் குறித்து விரும்பத்தக்க செயல்கள் என்றுகுர்ஆனிலும் நபிமொழிகளிலும் தெளிவான குறிப்புகள் இடம்பெற்றுள்ளனவோ அந்தச் செயல்களைச் செய்து முடிப்பதில் சிறிதும் தயக்கம் காட்டக் கூடாது; கால தாமதம் செய்யக்கூடாது. மீண்டும் அந்தச் செயல்களைச் செய்வதற்கான வாய்ப்பும் அவகாசமும் நற்பேறும் கிடைக்குமோகிடைக்காதோ யாருக்குத் தெரியும்?

எடுத்துக்காட்டாக, இறைவழியில் செலவிட வேண்டும் என்கிற எண்ணமும் ஆசையும் இருக்குமேயானால் காலம் தாழ்த்தக்கூடாது. ஷைத்தான் மனசஞ்சலங்களை ஏற்படுத்தி,

நற்காரியங்களுக்காகச் செலவிடுவதிலிருந்து தடுத்து விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.“ஷைத்தான் வறுமையைக் காட்டி உங்களை அச்சுறுத்துகிறான். மானக்கேடானவற்றைச் செய்யும்படியும் உங்களை ஏவுகிறான். ஆனால் இறைவனோ தன்னிடமிருந்து மன்னிப்பையும் அருட்செல்வத்தையும் உங்களுக்குவாக்களிக்கின்றான்.” (குர்ஆன் 2:268)உலக விவகாரங்களில் அவசரப்பட்டு முடிவெடுத்து தாட்பூட் என்று செயல்படும்போது பெரும்பாலான நேரங் களில் தவறான அடி எடுத்துவைத்துவிடுகின்றோம். பிறகு ‘அடடா...இப்படி ஆகிவிட்டதே’ என்று பரிதவிக்கிறோம்.

ஆகவே எந்த வேலையாக இருந்தாலும் ஆற அமர, அதன் அனைத்துப் பரிமாணங்களையும் ஆராய்ந்து பார்த்து, நல்ல பலனைத் தரும் என்கிற முழுமையான  மனநிறைவு ஏற்பட்ட பிறகுதான் அதைச் செய்யத் தொடங்க வேண்டும். அதைத்தான் இந்த நபிமொழி வலியுறுத்துகிறது.“தானத்தில் சிறந்தது நிதானம்” என்றுபெரியவர்கள் சொல்வதும் இதே கருத்தில்தான்.

- சிராஜுல்ஹஸன்

Related Stories: