ராகு கேது தோஷம் நீக்கும் கார்கோடகநாதர் வழிபாடு

1000 ஆண்டு பழமையானது

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து தென்கிழக்கே நல்லத்துக்குடி வழியாக 6 கி.மீ. சென்றால் காணப்படுவது கோடங்குடி என்ற கிராமம்.  விவசாய வயல்கள் நிறைந்த இந்த கிராமத்தில் தஞ்சை பெரிய கோயிலுக்கு முன்பு எழுப்பப்பட்ட ஆலயமாகத் திகழ்கிறது கைவல்லியம்மன் சமேத கார்கோடகநாதர் ஆலயம்.   சப்த நாகங்களில் முதன்மையாக திகழ்வது கார்கோடகன் எனப்படும் ராஜநாகம்.  கார்கோடகனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்க வேண்டும்போது வில்வாரண்ய கோயிலில் சிவனை வழிபட தேவர்களும், நவக்கிரகங்களும் கூறியதால் இந்த தலத்திற்கு வந்து பத்மசரஸ் என்ற தாமரைத் தடாகத்தை நிறுவி சிவனுக்கு தாமரை மலர்வைத்து பூஜை செய்து வந்தார்.

இதனால் மனங்குளிர்ந்த சிவன் காட்சி தந்து சாப விமோசனம் அருளினார்.  ‘நான் வணங்கிய இந்த தலம் என் பெயராலேயே தாங்கள் அருள் பாலிக்கவேண்டும்’ என்றும், ‘கலி காலத்தில் பக்தர்களுக்கு குறை தீர்க்கும்படியும் தாமரை தடாகத்தில் நீராடி இறைவனைத் தொழுதால் நவக்கிரகங்களும் சிவனுக்குள் அடக்கமாதலால் தங்களை பூஜித்தால் ராகுகேது தோஷங்கள் நீங்கவேண்டும்’ என்றும் கார்கோடகன் வரம் வேண்டி பெற்றான். சிவனும் வரம் அருளினார். நளமகராஜனுக்கு சனிதோஷம் ஏற்பட்டு நாடுமுழுவதும் சுற்றி வரும்போது இறுதியாக கோடங்குடி என அழைக்கப்படும் கார்கோடகநாதபுரத்திற்கு வந்து அங்கே வழிபட்ட பிறகே திருநள்ளாறு சென்று நளன் தீர்த்தம் அமைத்து சனிபகவானை தரிசித்ததாக ஐதீகம்.  

ஆகவே சனி பகவானை வழிபடுவதற்கு முன்பு கோடங்குடி சென்று கார்கோடகநாதரை வழிபட்டுச் சென்றால் அனைத்து தோஷங்களும் நீங்கி அனைத்து வளமும் பெறுவார்கள். நாகராஜன் பூஜித்து வரம் பெற்றதால் கார்கோடகநாதராக சிவன் காட்சி அருளினார். பக்தர்கள் லக்னம், குடும்பம், ஸப்தமம் ஆகிய இடங்களில் ராகு, கேது, புத்திர தோஷங்களால் ஜாதகத்தில் பாதிக்கப்படுகிறவர்கள் குறைகள் நீங்கி மனம் மகிழ்ந்து வாழ்வார்கள் என்பது ஐதீகம். இந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழமன்னர்களால் அமைக்கப்பட்டது. தற்போது இந்து அறநிலையத்துறை பராமரிப்பில் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் கிராமப்புறத்தில் உள்ளதால் பக்தர்கள் வருகை குறைவாக உள்ளது. இந்த ஆலயத்தின் மேன்மையை உணர்ந்து தற்போது தமிழக பக்தர்கள் மட்டுமில்லாமல் ஆந்திராவை சேர்ந்த பக்தர்களும் வரத் துவங்கியுள்ளனர்.

Related Stories: