வளம் தரும் வைகாசி விசாகம்

முத்துக்கள் முப்பது-வைகாசி விசாகம்: 12-6-2022

வளம் தரும் வைகாசி விசாகத்தின் சிறப்பையும், முருகப்பெருமானின் சிறப்பையும் முப்பது முத்துக்களாகக் காண்போம்.

1) வைகாசி விசாகம்

பொதுவாக நம்முடைய இந்து சமயப் பண்டிகைகள், வைணவமாக இருந்தாலும், சைவமாக இருந்தாலும், மூன்று விஷயங்களின் அடிப்படையில் தான் கடைபிடிக்கப் படுகின்றன. ஒன்று, மாதத்தின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படுகிறது. சித்திரை மாதப் பிறப்பு, தை மாதப்பிறப்பு என்று சொல்லலாம். திதியின் அடிப்படையில் சில பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. உதாரணம்: சித்ரா பௌர்ணமி, கந்த சஷ்டி, விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, ஏகாதசி, கோகுலாஷ்டமி, ராம நவமி என்று சொல்லிக்கொண்டே போகலாம். நட்சத்திரங்களின் அடிப்படையில் கொண்டாடப் படுவதும் உண்டு. ஆவணி அவிட்டம், வைகாசி விசாகம், தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, ஆடிப்பூரம் என்று வரிசையாகச் சொல்லலாம். அதில் மிகச்

சிறப்பான ஒன்றுதான் வைகாசி விசாகம்.

2) அழகு முருகனின் அற்புத தரிசனம்

ரோகிணி நட்சத்திரம் என்றால் கண்ணன் நினைவுக்கு வருவார். புனர்பூசம் நட்சத்திரம் ராமனை கண்முன் நிறுத்தும். திருவாதிரை நட்சத்திரம் சிவனின் திருநடனக் காட்சியைக் காட்டும். பூரம் என்றால் ஆண்டாளின் அழகுமுகமும், கையில் கொண்ட கிளியும் நினைவில் முன்நிற்கும். விசாகம் என்றால் அழகு முருகனின் அற்புத தரிசனம் தோன்றும். தெய்வங்களின் அவதாரங்களால் நாள்களும் நட்சத்திரங்களும் பெற்ற சிறப்பு இது.

3) பிறவி விடுதலை கிடைக்கும்

கால புருஷனின் ஒன்பதாவது ராசிக்கும், (தர்ம ராசி) பன்னிரண்டாவது ராசிக்கும் (மோட்ஷ ராசி) உரிய குருவின் நட்சத்திரம்தான் விசாகம். அதனால்தான் இந்த நட்சத்திரத்தில், தகப்பனாகிய சிவனுக்கே குருவாக அமைந்த முருகப்பெருமானும், வைணவத்தில் முதல் குரு என்று சொல்லப்படும் நம்மாழ்வாரும் அவதரித்தார்கள். இருவருடைய அவதாரமும் வைகாசி விசாகத்தில் நடந்தது. கால புருஷனின் பன்னிரண்டாவது ராசி பிறவி விடுதலையைக் குறிப்பது. அது குருவுக்குரியது. முருகப்பெருமானை வணங்குவதன் மூலமாகவும், நம்மாழ்வாரை வணங்குவதன் மூலமாகவும் ``பிறவி விடுதலை’’ கிடைக்கும் என்பது அவரவர் சமயத்தினரின் அழுத்தமான நம்பிக்கை.

4) பதினாறு பேறுகள் பெறலாம்

வேத ஜோதிட சாத்திரத்தில், அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில், விசாக நட்சத்திரம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். விசாக நட்சத்திரம், ஆறு நட்சத்திரங்களின் கூட்டமாகும். குருபகவானின் ஆதிக்கத்தில் வரும் நட்சத்திரம். மேலும் 27 நட்சத்திரங்களில், 16வது நட்சத்திரமாக இந்த விசாக நட்சத்திரம் வருகிறது. இந்த நட்சத்திரத்தில், அவதரித்த முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் பதினாறு பேறுகளையும் சிறப்புறப் பெறலாம். விசாக நட்சத்திரம் அமைந்த ராசி விருச்சிக ராசி ஆகும். இந்த ராசிக்கு உரிய கிரகம் செவ்வாய்க் கிரகம். செவ்வாய்க் கிரகத்துக்கு உரிய தெய்வம் முருகன்!

5) விசாக நட்சத்திர சிறப்பு

குருவின் நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்கள், சுக்கிரனுக்கு உரிய துலாம் ராசியிலும், எஞ்சிய ஒரு பாதம் செவ்வாய்க்கு உரிய விருச்சிக ராசியிலும் இடம் பெற்றுள்ளதால், தெளிவான அறிவும், விடா முயற்சியும் இவர்களிடம் நிறைந்திருக்கும். ஆண்மையும், அறிவுத் திறனும் நிறைந்தவர்கள். ஏழை பணக்காரன் என்ற வித்யாசம் பாராமல், அனைவரையும் சமமாகப் பாவிக்கும் தன்மை கொண்டவர்கள் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். ஆழ்ந்த சிந்தனையும், அகன்ற அணுகு முறையும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணமாக இருக்கும்.

தஞ்சை பெரிய கோயிலில் ஒரு கல்வெட்டில், பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனின் சரித்திரத்தை நாடகமாக அரங்கேற்றுபவர்களுக்கு, வைகாசி விசாக தினத்தில் ஊதியமாக நெல் வழங்கி ராஜேந்திர சோழன் ஆணையைப் பிறப்பித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாபாரதத்தின் வில்வித்தகனான அர்ஜுனன் சிவனிடமிருந்து பாசுபத ஆயுதத்தை வரமாக பெற்ற நாள். வைகாசி விசாகத்தை ஒட்டித்தான் புகழ்பெற்ற காஞ்சி வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும்.

அதன் சிறப்பான நிகழ்வான கருட சேவை நடைபெறும். இந்திரன் வைகாசி விசாகம் அன்று தான் சுவாமிமலை முருகனை வழிபட்டு தன் ஆற்றலை வளர்த்துக் கொண்டான். தஞ்சைக்கு அருகிலுள்ள திருமழபாடியில் உள்ளே ஈசன்  வைகாசி விசாகத்தில் திருநடனக்காட்சி அருள்கிறார். திருநெல்வேலிக்கு  அருகிலுள்ள ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாரின் அவதார வைகாசி விசாகப் பெருவிழா பத்து நாள் உற்சவமாக நடைபெறுகிறது. திருச்செந்தூரில் வைகாசி  விசாகம் 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம்  பெருவிழாவாகக் கொண்டாடப்படாத முருகன் கோயில்களே இல்லை என்று சொல்லலாம்.

6) ஆறு சுடர்களும் ஆறு முகங்களாக

தர்மம் நலியும் பொழுது இறைவன் அவதாரம் எடுப்பான் என்பது இந்து சமயத்தின் அடிப்படை நம்பிக்கை. ஒரு சமயம் சூரபத்மன் எனும் அசுரன் மிகுந்த பலம் பெற்று உலகை அச்சுறுத்திக் கொண்டு இருந்தான். தேவாதி தேவர்களை எல்லாம் வென்று சிறையில் அடைத்துத் துன்புறுத்தினான். அப்பொழுது சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு சுடர்களைத் தோற்றுவித்தார். அந்தத் தீப்பொறிகளின் வெப்பம் தாளாது உலகம் நடுங்கியது. அக்னி பகவானும் வாயு பகவானும் அந்த ஆறு பொறிகளையும் கங்கையில் கொண்டு விட்டனர்.

அங்கே ஒரு அழகான பொய்கையில் (சரவணப் பொய்கை) கார்த்திகை கன்னியர்கள் ஆறு சுடர்களையும் குழந்தைகளாக  வளர்த்தனர். அன்னையான பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும்பொழுது, ஆறுமுகனாக முருகப் பெருமான் அவதாரம் நிகழ்ந்தது. ஆறு சுடர்களும் ஆறு முகங்களாக அவதரித்த தினம் வைகாசி மாதத்தில் விசாக தினம்.

7) எமதர்மனின் அவதாரம்

முருகப்பெருமான் அவதார தினமான வைகாசி விசாகத்திற்கு இன்னும் பல சிறப்புகள் உண்டு. புத்தரின் அவதார நாளும் வைகாசி விசாகம் தான் என்று கூறப்படுகிறது. வேறு வகையில் சித்தார்த்தர் புத்தராக மாறியது வைகாசி விசாகத்தில் என்பார்கள். கால புருஷனாகிய எமதர்மனின் அவதாரம் நிகழ்ந்ததும் விசாகம் என்பார்கள். அதனால் சில இடங்களில் எமனுக்கு சிறப்பு வழிபாடு உண்டு. இந்த தினத்தில் கால தேவனுக்கு விசேஷ பூஜை செய்தால், நீண்ட ஆயுள் கிடைக்கும். ஆயுள் தோஷங்கள் நீங்கும்.

8) தமிழ் வேறு முருகன் வேறு அல்ல

முருகன் தமிழ் வடிவானவன். தமிழ் வேறு, முருகன் வேறு அல்ல. முருகப்பெருமானின் பன்னிரண்டு கரங்களும் தமிழ்மொழியின் 12 உயிர் எழுத்துக்கள். அவனது 6 முகங்களும் 12 கண்களும் தமிழ் மொழியின் 18 மெய்யெழுத்துக்கள். ஆய்த எழுத்து முருகன் கையில் உள்ள கூர்மையான வேல். தமிழ் எழுத்து வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்று இனமாக பிரிக்கப்பட்டுள்ளது அல்லவா. இந்த மூன்று எழுத்துக்களில் ஒவ்வொரு இனத்திற்கும் ஓரெழுத்து எடுத்தார்கள். வல்லினத்தில் க, மெல்லினத்தில் மு, இடைஇனத்தில் ரு என்று எடுத்து `முருகா’ என்று அழைத்தார்கள். அவன் அணிந்துள்ள பல மாலைகளில் சிறந்த மாலை தமிழ்ப்பாமாலைதான். “செந்தமிழ்ப்பாவின் மாலைக்கார” என்று அவனை அழைத்தனர். முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் முருகன் என்று கந்தரலங்காரம் பேசுகிறது. அருணகிரிநாதர்,

“சேந்தனை வேல் வேந்தனை  

செந்தமிழ் நூலை விரித்தோனை”    

என்றும்,

“இனிதான முத்தமிழ்  

வரிசை ஆயும் கார”

என்றும் குறிப்பிடுகின்றார்.

9) முருகன் யோகசக்தி

யோக சக்தியாகவும் முருகனைச் சொல்வது உண்டு. குண்டலினி சக்தி பாம்பாக மூலாதாரத்தில் சுருட்டிக்கொண்டிருக்கிறது. அது அங்கு பாம்பு போல் சர்ப்ப ரூபத்தில் இருக்கிறது. அதைத் தட்டி எழுப்ப பல யோக சாதனைகள் செய்கிறோம். முருகப்பெருமான் யோக விஸ்வரூபமாக இருக்கிறார். ஆதிசங்கரரும் “சுப்பிர மணிய புஜங்கம்” பாடிப் போற்றுகிறார். `புஜங்கம்’ என்பதற்கு சர்ப்பம் என்று ஒரு அர்த்தம் உண்டு. `புஜங்கம்’ என்றால் தோளால் நகர்ந்து செல்லும் பாம்பு என்று பொருள்.

இச்சொல் சமஸ்கிருதத்தில் உள்ள ஒருவகைச் செய்யுள் அமைப்பைக் குறிக்கும். இந்த புஜங்கக் கவிதையுள் அமைந்துள்ள சொற்கோவைகள் ஒரு பாம்பானது வளைந்து வளைந்து ஊர்ந்துசெல்வதுபோல இருப்பதனால் இத்தகைய கவிதை அமைப்புக்கு புஜங்கம் என்று பெயர் அமைந்தது. நாகர் பிரதிஷ்டை சஷ்டியில் நாகராஜா பூஜை எல்லாம் முருகனை உத்தேசித்து செய்யும் வழக்கம் உண்டு. எனவே முருகன் யோகசக்தி என்னும் நிறைவு சக்தியாகச் சொல்லலாம்.

10) மயிலின் இறகு

முருகனின் வாகனம் மயில். அந்த மயிலின் இறகு மிகப் புனிதமானது. பூஜை அறையில் வைத்து வழிபடத்தக்கது. மயிலிறகுக்கு தோஷங்களை நீக்கும் சக்தி உண்டு. வாஸ்து தோஷங்களையும் மயிலிறகு நீக்கிவிடும். மயில் இறகுகளை ஒன்றாகக் கட்டி பூஜை அறையில் வைத்து “ஓம் ஸோமாய நமஹ” என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்துவர வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் நீங்கும். சனி தோஷம் நீங்குவதற்கு மூன்று மயில் இறகுகளை கறுப்பு நிற நூலினால் கட்டி பூஜை அறையில் வைக்க வேண்டும்.

செல்வம் சேர்வதற்கு வீட்டில் பணப்பெட்டி, நகை அலமாரியில் மயிலிறகை வைத்திருக்கவேண்டும். அக்காலத்தில் படிப்பு நன்றாக வர வேண்டும் என்பதற்காகவே பிள்ளைகளின் புத்தகத்தில் மயிலிறகை வைத்திருப்பார்கள். வீட்டுக்கு முன்னால் மயிலிறகை வைத்திருந்தால் எதிர்மறை ஆற்றல் வீட்டில் நுழையாது என்பார்கள். படுக்கை அறையில்  மயிலிறகை வைத்திருப்பதன் மூலம் கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கி இல்லற வாழ்க்கை சிறக்கும்.

11) ஏன் நெற்றிக்கண்ணில் உதிக்க வேண்டும்?

சரவண பவ என்பது ஆறு எழுத்து! சடா க்ஷரம் என்று வடமொழியில் சொல்லுவர்! அதன் அருமை பற்றிய பாடல் ஒன்றை, பாபநாசம் சிவன் எழுதியிருக்கிறார். மிகப் பிரபலமான இந்தப் பாடல், சண்முகனுக்குப் ப்ரியமான சண்முகப் ப்ரியா என்னும் ராகத்தில் அமைந்தது!

சரவணபவ எனும் திருமந்திரம் - தனை

சதா ஜபி என் நாவே - ஓம்

புரமெரித்த பரமன் நெற்றிக் கண்ணில் உதித்த

போத சொரூபன் பொற்பாதம் தனைப் பணிந்து

மண்மிசை கிடந்துழல் பிறவிப் பிணியைத் தீர்க்கும்

மாயை அகலப் பேரின்ப நெறியில்

சேர்க்கும்

தண்மதி நிகர் குளிர் கருணை நிலவு

(உ)மிழும்

சண்முக ப்ரிய சடாக்ஷர பாவன

இதில் “புரமெரித்த பரமன் நெற்றிக்கண்ணில் உதித்த என்கிற வரி” வருகிறது. ஏன் நெற்றிக்கண்ணில் உதிக்க வேண்டும்? சிவனுக்கும் பார்வதிக்கும் பிள்ளையாக பிறந்து இருக்கலாமே? என்ற ஒரு கேள்வி வரும். சூரபத்மன் ஒரு தாயின் கருவில் உருவாகின்ற எந்த உயிராலும் தன் உயிர் போகக்கூடாது என்று வரம் வாங்கியிருந்தான். அதனால் தான் சிவபிரான் தனது நெற்றிக்கண்ணைத் திறந்து ஆறுஜோதிகளை உண்டாக்கி சூரபத்மனை அழித்தார். இவரிடமிருந்து நேரிடையாக தோன்றியதால் சிவ அவதாரமாகவே முருகனைக் கருதுவார்கள். சிவன் வேறு; முருகன் வேறு அல்ல. இருவரும் ஒருவரே என்கின்ற தத்துவமும் உண்டு.

12) எத்தனை திருநாமங்கள்?

முருகா என்றழைக்கவா? முத்துக்குமரா என்றழைக்கவா? கந்தா என்றழைக்கவா? கதிர்வேலா என்றழைக்கவா? எப்படி அழைப்பேன்? உன்னை எங்கே காண்பேன்? என்றொரு அருமையான பாடல். தமிழ் நம்பி இயற்றி, டி.எம்.எஸ்.பாடிய அபாரமான மனம் உருக்கும் பாடல். எத்தனையோ திருநாமங்கள் முருகப்பெருமானுக்கு. ஒவ்வொன்றுக்கும் ஒரு பொருள் உண்டு. ஸ்கந்தன், சரவணன், காங்கேயன், சிவகுமாரன், சேனாதிபதி, ஆறுமுகன், கார்த்திகேயன், வேலன், குமரன், குருநாதன், சுவாமிநாதன் என்று ஏராளமான திருநாமங்கள் முருகனுக்கு உண்டு. அதில் ஒரு நாமம்தான் `விசாகன்’ என்கின்ற நாமம். `விசாகன்’ என்றால் விசாகத்தில் அவதரித்தவர் என்று பொருள். வி என்றால் விசும்பு, பறவை, காற்று, கண், திசை, அழகு என்று பல பொருள்கள் உண்டு. இதில் பறவை (மயில்) என்று ஒரு பொருள் எடுத்துக்கொள்ளலாம். சாகன் என்றால் சஞ்சரிப்பவன் என்று பொருள். மயில் மீது உலகை வலம் வருபவன் (முருகன்) என்ற பொருளில், விசாகன் திருநாமத்தை வாயார ஓதுவார்கள் முருக பக்தர்கள்.

13) குறிஞ்சி நிலத்தின் கடவுள்

“முருகு” என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துகளுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவற்றைக் குறிக்கும். இவர் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுள் ஆவார்.

14) முருகனின் பெயரும் பொருளும்

முருகனின் சில பெயர்களுக்கான காரணங்கள். 1. விசாகம் நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன், 2. அக்னியில் தோன்றியதால் அக்னி புத்திரன், 3. கங்கை தன் கரங்களால் சிவபெருமாளின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட தீப்பிழம்பினை ஏந்தியதால் காங்கேயன்,

4. சரவண பொய்கையில் பிறந்ததால் சரவணபவன், 5. கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்ததால் கார்த்திகேயன், 6. தாமரை மலரின் கந்தகத்தில் தோன்றியதால் கந்தன், 7. ஆறுமுகம் கொண்டதால் ஆறுமுகன், 8. ஆறுமுகங்களையும் ஒன்றாக அன்னை பராசக்தி இணைத்து ஒருவராக மாற்றியதால் சண்முகன், 9. பழனி ஆண்டி - ஞானப்பழம் வேண்டியும் கிடைக்காமல் ஆண்டி கோலத்தில் நின்றவன், 10. வேலாயுதன் - கையில் இருக்கும் வேலையே ஆயுதமாகக் கொண்டவன், 11. வள்ளல் - வள்ளியை மணந்தவன், வணங்கும் பக்தர்களுக்கு அருளை

வாரி வழங்குபவன்.

15) முருகப் பெருமானுக்கு காவடி

தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பார்கள். காவடியை அகத்திய முனிவரின் சீடரான இடும்பன்தான் முதன் முதலில் எடுத்து வந்தவன். குருவின் ஆணைப்படி சிவகிரி, சக்திகிரி என்ற இரண்டு மலைகளை அவன் காவடியாக எடுத்து வந்தான். பழனியில் உள்ள இருமலைகளுக்கும் காவல் தலைவன் இடும்பன் தான். அவன் காவடி எடுத்து வந்ததை நினைவுகூரும் வகையில் இப்பொழுது மக்கள் காவடி எடுக்கிறார்கள். இலங்கையிலும், தமிழ் நாட்டிலும், தமிழர் வாழும் பிற நாடுகளிலும் உள்ள முருகன் கோயில்களில் வழிபாட்டின் ஒரு கூறாகக் காவடியாட்டம் இடம்பெறுகிறது. சுமைகாவுபவர்கள் இலகுவாகச் சுமப்பதற்காக, ஒரு நீண்ட தடியின் இரு முனைகளிலும் சுமைகளைத் தொங்கவிட்டு அத்தடியின் நடுப்பகுதி தோளில் இருக்குமாறு வைத்துச் சுமந்து செல்வர். காவுவதற்கான தடி என்னும் பொருள்பட இத்தடியைக் காவுதடி என அழைப்பர். காவடியாட்டத்துக்கான பின்னணி இசைக்கருவிகளாக நாதசுரமும், தவிலும் விளங்குகின்றன. நாதசுரத்தில் காவடிச் சிந்து இசையை வாசிக்கக் காவடியாட்டம் ஆடுவது மரபு.

16) காவடியின் பலன்கள்

காவடியில் பல வகைகள் உண்டு. காவடி எடுப்பவர்கள் அலகு குத்திக்கொள்வதும் உண்டு. இந்த காவடி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்பார்கள். சகல ஐஸ்வர்யங்களையும் தரும் பன்னீர்க் காவடி, மனதில் உள்ள குறைபாடுகளை நீக்கும். தங்கக் காவடி எடுப்பதன் மூலம் நீடித்த புகழை பெறலாம். சர்ப்பக் காவடி, குழந்தைச் செல்வத்தைத் தரும். மயில் காவடி, வீட்டில் உள்ள குடும்பப் பிரச்னைகளை நீக்கும். பழக்காவடி, தொழிலில் லாபத்தை கிடைக்கச்செய்யும். சந்தனக் காவடி, நோய்நொடிகள் தீர்த்து வைக்கும். அலங்காரக் காவடி திருமணத் தடைகளை நீக்கி நல்ல மண வாழ்க்கையைத் தரும். புஷ்பக் காவடி எடுப்பதன் மூலம், மனதின் ஆசைகள் நிறைவேறும்.

17) விசாகனுக்கு பொருள்

விசாகன் என்பதற்கு வேறொரு பொருளையும் காஞ்சி பரமாச்சாரியார் தருகின்றார். சாகை என்றால் கிளைகள் என்று அர்த்தம். வேதத்தில் பல கிளைகள் உண்டு. அது ஒவ்வொன்றுக்கும் பெயர் சொல்வார்கள். ``வி” என்பது பல அர்த்தங்களில் வரும். சில நேரங்களில் ஒன்றை உயர்த்திக் காட்ட ``வி” சேர்ப்பதுண்டு. உதாரணமாக: ஜெயம் கூட ``வி’’ சேர்த்தால் விஜயம். ஆனால், எதிர்மறை பொருளிலும் “வி” எழுத்து உபயோகப்படும். இந்த ரீதியில் விசாக என்பது கிளைகள் இல்லாத என்ற பொருளில் வரும். அப்பா சிவன் பட்ட கட்டையாகவும், அம்மா பார்வதி  இலை இல்லாத கொடியாகவும் இருக்கும்பொழுது, குழந்தை முருகனும் கிளை இல்லாத கீழ்க்கன்றாக இருக்கிறார். அதாவது, முருகன் பரம வைராக்கிய சொரூபம் என்பார் காஞ்சிப்

பெரியவர்.

18) தினசரி பூஜையில் சொல்ல வேண்டிய வாழ்த்து

தினசரி பூஜையில் சொல்ல வேண்டிய

முக்கியமான கந்த புராண பாடல்;

ஆறிரு தடந்தோள் வாழ்க

ஆறுமுகம் வாழ்க - வெற்பைக்

கூறுசெய் தனிவேல் வாழ்க

குக்குடம் வாழ்க - செவ்வேள்

ஏறிய மஞ்சை வாழ்க

யானைதன் அணங்கு வாழ்க

மாறில்லா வள்ளி வாழ்க

வாழ்க சீர் அடியார் எல்லாம்.

ஆறுமுகப்பெருமானின் பன்னிரண்டு அகன்ற பெரிய தோள்கள் வாழ்க; அவருடைய ஆறுமுகங்களும் வாழ்க; கிரௌஞ்ச கிரியைப் பிளந்திடும் ஒப்பற்ற வேல் வாழ்க; சேவற்கொடி வாழ்க; செந்நிறமுள்ள முருகன் அமர்ந்துள்ள மயில் வாழ்க; ஐராவதம் என்னும் யானைக்குரிய தெய்வானை அம்மையார் வாழ்க; மாறுபாடு இல்லாத வள்ளி நாயகியார் வாழ்க; சிறப்புடைய முருகன் அடியார்கள் எல்லோரும் வாழ்க என்பது இப்பாடலின் பொருள்.

19) ஏன் பன்னிரண்டு கரங்கள்?

இதில் முதல் வாழ்த்து முருகப் பெருமானின் பன்னிரு கரங்களுக்கே. அப்பணிகளின் சிறப்பு மகத்தானது. முருகனின் பன்னிரு கரங்களில் இருகரங்கள் தேவர்களையும், முனிவர்களையும் காக்கின்றன. மூன்றாவது கை அங்குசத்தினை வைத்துள்ளது. மதம் அடக்குவதல்லவா அங்குசம்.. மற்றொரு கை ஆடை உடுத்திய தொடையில் பதிந்து அபாய சமயத்தில் அபாயம் தருகிறது. ஐந்து மற்றும் ஆறாவது கைகள் வேலைப் பிடித்திருக்கிறது. வேலுக்கு அறிவாயுதம் என்று பெயர். அதன் கூர்முனைதான். ஏழாவது கை. முனிவர்களுக்கு அரும் பொருளை உணர்த்துகிறது. எட்டாவது கை மார்பில் உள்ள திருமாலை யோடு விளங்குகிறது. ஒன்பதாவது கை வளைகளோடு சுழன்று வேள்வியை ஏற்கிறது. பத்தாவது கை மணியை ஒலிக்கிறது. பதினோராவது கை மழையை அருள்கிறது. பன்னிரண்டாவது கை மணமாலை சூட்டுகிறது.

20) முருகனின் அருள் பெற்றவர்கள்

முருகனின் அருள் பெற்றவர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. அகத்தியர், ஔவையார், திருமுருகாற்றுப்படை பாடிய நக்கீரர், திருப்புகழ் விருப்பமுடன் இசைத்த அருணகிரிநாதர், திருச்செந்தூரில் அருள்பெற்று கந்தர் கலிவெண்பா பாடிய குமரகுருபரர், இந்த நூற்றாண்டின் இணையற்ற முருகபக்தர் பாம்பன் சுவாமிகள் மற்றும் கிருபானந்தவாரியார் என பலரைச் சொல்லலாம். அகத்தியர், முருகனின் அருள் பெற்றவர்களில் முதன்மையானவர். அவர் பொதிகை மலையில் முருகப்பெருமானிடம் உபதேசம் பெற்று அகத்தியம் என்ற இலக்கண நூலை எழுதித் தந்தார்.

21) திருமுருகாற்றுப்படை

பத்துப்பாட்டு என வழங்கப்படும் நூல்களுள் முதலில் வைத்து எண்ணப்படுவது திருமுருகாற்றுப்படை. பன்னிரு திருமுறை பகுப்பில் இது பதினோராவது திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது. கடைச் சங்கப் புலவரான நக்கீரர் திருப்பரங்குன்றத்தில் பூதங்களிடம் சிக்கித் தவித்த போது, முருகப்பெருமான் அவரைக் காப்பாற்றி அருள, அப்போது முருகன் மீது பாடிய ஆற்றுப்படை நூல்தான் திருமுருகாற்றுப்படை, முருகனை வணங்கி பிரார்த்தனை செய்தால், “என் துன்பங்கள் அகன்றது போலவே, உங்களது துன்பங்களும் அகலும்” என்பது அவர் வாழ்க்கை காட்டும் செய்தி.

22) திருப்புகழ்

முருகனை நினைக்கும் பொழுது நம்முடைய நினைவுக்கு வருகின்ற மிக முக்கியமான நூல் திருப்புகழ். திருப்புகழைப் பாடிய அருணகிரிநாதரின் வழிபடு கடவுள் முருகப் பெருமான். முருகப் பெருமானின் திருவருளால்தான் அவர் திருப்புகழ், கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தரனுபூதி, திருவகுப்பு, சேவல் விருத்தம் மயில் விருத்தம், வேல் விருத்தம், திருவெழுகூற்றிருக்கை போன்ற நூல்களைப் பாடி அருளினார். முருக பக்தர்களுக்கு, அருணகிரிநாதர் எழுதிய ‘‘திருப்புகழ்” தேவாரத்திற்கு இணையாகவும், “கந்தர் அலங்காரம்” திருவாசகத்திற்கு இணையாகவும் மற்றும் “கந்தர் அனுபூதி” திருமந்திரத்திற்கு இணையாகவும் போற்றப்படுகின்றது.

23) கந்த சஷ்டி கவசம்

இன்று பட்டிதொட்டிகளில் எல்லாம் ஏராளமான மக்கள் பாராயணம் செய்து, பற்பல நன்மைகளை அடையச்செய்யும் நூலான கந்த சஷ்டி கவசத்தை அருளிய தேவராய சுவாமிகள் முருகனின் பெரும் பக்தர் முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரத்தின் பொருளை சூத்திர வடிவில் நுட்பமாகச் சொல்லும் நூல், படிப்போரை கவசம் போலக் காக்கிறது.

24) வடலூர் வள்ளல் பெருமான்

வடலூர் வள்ளல் பெருமான் சிறுவனாக இருக்கும்போது அவருடைய தியானத்தில் தோன்றி ஞானம் தந்தவன் முருகன். இவருடைய அற்புதமான பாடல் ஒன்று;

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறும் நினது புகழ் பேச

வேண்டும்;

பொய்மை பேசாதிருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும்;

மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்;

மருவு பெண்ணாசையை மறக்கவே

வேண்டும்;

உனை மறவாதிருக்க வேண்டும்;

மதி வேண்டும்; நின்கருணை நிதி

வேண்டும்;

நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்;

தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள்

வளர்தலமோங்கு கந்த வேளே

தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவ

மணி சண்முகத் தெய்வ மணியே

கந்தகோட்டத்தில் வழங்கும் கந்தப்பெருமானிடம் இவர் கேட்கும் ஒவ்வொரு வரங்களும் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான வரங்கள்.

 25) பாம்பன் சுவாமிகள்

இராமேஸ்வரம் அருகே பாம்பன் என்கின்ற ஊரில் பலகாலம் வாழ்ந்தவர் யாழ்ப்பாண சைவ மரபில் தோன்றிய குமரகுருதாச சுவாமிகள். இவர் பாடிய சண்முகக் கவசம் மிகச் சிறந்த நூல். இவரை பாம்பன் சுவாமிகள் என்று அழைப்பார்கள். அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் `உபய அருணகிரிநாதர்’ என்ற பெயரும் பெற்றார். 1894ஆம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் நிட்டையில் இறங்கினார். 35 நாட்கள் அருந்தவம் புரிந்த நிலையில், இவருக்கு முருகப்பெருமானே உபதேசம் நல்கியதாக இவரது சீடர்கள் நம்புகின்றனர். இவரது கனவுகளில் முருகன் வழிநடத்துவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இவ்வாறான வழிகாட்டலில் அவர் சென்னை சென்றார். அங்கிருந்து பல தலங்களுக்கு சமயப் பயணங்கள் மேற்கொண்டார். பல துதி நூல்கள் இயற்றினார்.  

26) கிருபானந்த வாரியார்

“கந்தக் கடவுள் நமது சொந்தக் கடவுள்”, ``வேலை வணங்குவதே என் வேலை”, என்று வாழ்நாளெல்லாம் முருகன் திருநாமம் ஓதியதோடு, தம் பெயரோடு திருமுருக என்று சேர்த்துக் கொண்டு, முருகப் பெருமான் மீது மிகுந்த பக்தியோடு, தமிழ்நாடு முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் சென்று சமய உண்மை களையும், இதிஹாச புராணத்தின் நுட்பத்தையும் பரப்பியவர் திருமுருக கிருபானந்த வாரியார். அவர் எப்பொழுதும், திருப்புகழைப் பாடித்தான் தன் சொற்பொழிவைத் துவங்குவார். கந்தர்

அனுபூதி பாடித்தான் சொற்பொழிவை நிறைவு

செய்வார். முருகன் மீது அகலாத பக்திகொண்ட

வாரியார் ஸ்வாமிகள், தமிழையும் சமயத்தையும் பரப்பிய வித்தகர். திருப்புகழ் பாடல்களுக்கு  

விரிவான விரிவுரைகளை பல்லாயிரம் பக்கங்களில் எழுதியவர்.

27) முருகனுக்கு பன்னிரு திருமுறைகள்

சைவத்தில் பன்னிருதிருமுறைகள் உண்டு. அதைப் போலவே முருகனுக்கும் பன்னிருதிருமுறைகள் உண்டு. அதில் முதல் திருமுறை திருப்பரங்குன்றம் திருப்புகழ். இரண்டாம் திருமுறை திருச்செந்தூர் திருப்புகழ். மூன்றாம் திருமுறை திருஆவினன்குடி திருப்புகழ். நான்காம் திருமுறை திருவேரகம் திருப்புகழ். ஐந்தாம் திருமுறை திருத்தணி திருப்புகழ். ஆறாம் திருமுறை சுவாமிமலை திருப்புகழ். ஏழாம் திருமுறை மற்ற முருகன் தலங்களுக்கு உரியது. எட்டாம் திருமுறை கந்தரலங்காரம் கந்தரந்தாதி. ஒன்பதாம் திருமுறை திருவகுப்பு. பத்தாம் திருமுறை கந்தர் அனுபூதி. பதினோராம் திருமுறை சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை உள்ள முருகன் பாமாலைகள். பன்னிரண்டாம் திருமுறை அருணகிரிநாதர், அகத்தியர், நக்கீரர், முதலான முருக அடியார்கள் 41 பேரின் வரலாற்றை விளக்கும் சேய்த்தொண்டர் புராணம். இந்தப் பன்னிரு திருமுறைகளும் இந்த வரிசையில் தொகுத்தவர் தேனூர் வரகவி சொக்கலிங்கம்.

28) வசந்த விழா

வைகாசி விசாகத்தன்று முருகன் கோயில்களில் வசந்த விழா நடக்கும். பால் அபிஷேகம் செய்தும், காவடி சுமந்தும், விரதமிருந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். விரதம் இருந்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். எதிரிகள் பயம் அகலும், தீராத நோய்கள் தீரும். பகை விலகி பாசம் பெருகும். வெற்றிகள் சேரும். குலம் தழைக்கும். பிள்ளை வரத்திற்காக தவம் இருப்பவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். மலைக் கோயில்களில் உள்ள முருகனை வழிபட்டால் முன்வினை பாவம் தீரும். பகைவர்கள்

காணாமல் போவர்.

29) விசாகம் அன்று என்ன செய்ய வேண்டும்?

விசாகம் அன்று அதிகாலையில் எழுந்து குளித்து, முருகனின் தோத்திரங்களைச் சொல்லிக்கொண்டே, பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு, முருகப்பெருமான் படத்தின் முன்பு விளக்கேற்றி வழிபட வேண்டும். கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்யலாம். திருப்புகழைப் படிக்க வேண்டும். ஆறெழுத்து மந்திரங்களான “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை நாள் முழுவதும் உச்சரிக்க வேண்டும். முருகப்பெருமானுக்கு அரளி, செம்பருத்தி போன்ற செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். அவரது `வேலை’ வணங்குவதையே வேலையாகக் கொள்ள வேண்டிய நாள் விசாகத் திருநாளாகும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்குத் தானம் செய்தால் திருமணப்பேறு கிட்டும்.

30) எல்லா முருகன் கோயில்களிலும் வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் எல்லா முருகன் கோயில் களிலும் கொண்டாடப்படுகிறது. முருகனின் ஆறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய இடங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், சில கோயில்களில் தேர்த்திருவிழா மற்றும் வசந்தோற்சவமும், பிரம்மோற்சவமும் நடைபெறுகின்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அலகு குத்திக்கொள்ளுதல், பாத யாத்திரை செல்லுதல் போன்ற வேண்டுதல்களை இந்நாளில் நிவர்த்தி செய்து கொள்கின்றனர்.வாருங்கள், நாமும் முருகனை வைகாசி விசாகத்தில் வழிபடுவோம்.

எஸ். கோகுலாச்சாரி

Related Stories: