நம்மாழ்வாரின் பெருமை...நம்மாழ்வார் அவதாரம்

வைகாசி உற்சவம் (12.6.2022)

வைணவ சமய மரபில் ஆழ்வார்கள், ஆசாரியர்கள், அவதாரம் செய்த திருத்தலங்களைப்  போற்றியும், அவர்கள் திருஅவதாரம் செய்த நாள், நட்சத்திரம், மாதம் இவர்களைப் போற்றியும் கொண்டாடுகின்ற வழக்கமுண்டு. அந்தந்த நாள்களில் அந்தந்த ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள் பெருமைகளை நினைவுகூர்வதுண்டு. திருக்கோயில்களிலும் அந்தந்த ஆழ்வார்கள் அல்லது ஆச்சாரியர்கள், அர்ச்சா  திருமேனிக்கு திருமஞ்சனம் முதலிய வைபவங்களை நடத்தி, அவர்களின்  பாசுரங்களையும், அருளிச்செய்த நூல்களையும், சேவிப்பது உண்டு. இது ஒரு வாழ்வியல் வழக்கமாகவே கொண்டிருப்பதால் இன்றளவும் ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள்  பெருமையும், அவர்கள் இயற்றிய நூல்களையும் பேணிக் காக்கப்பட்டுவருகின்றன.

திருக்கோயில்களில் மட்டும் அல்லாது, வைணவர் ஒவ்வொருவரும் தம் இல்லங்களில், அந்த நாளை வைபவமாகக் கொண்டாடுவது உண்டு. அந்த அடிப்படையில் வைகாசி விசாகம் நம்மாழ்வாரின் அவதாரத் திருநாள். இந்த அவதார வைபவங்களை மட்டுமே சொல்லும் ஒரு நூலாக இயற்றியுள்ளார், வைணவ தென்கலை ஆச்சார்ய மரபின் கடைசி ஆசார்யரான மணவாள மாமுனிகள். அந்த நூலுக்கு “உபதேசரத்தினமாலை” என்று பெயர். அதில்  ஆழ்வார்கள் ஏற்றமும், அவர்கள் பாடிய அருளிச்செயல் என்று சொல்லப்படும் நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தின் பெருமையும், அதற்கு உரை எழுதிய வைணவ ஆச்சாரியர்கள் பெருமையும், ஆசாரியர்கள் பேணிக்காக்கும் குரு சீடர்கள் உறவைப்  பற்றியும் மிகப் பெருமையாக பேசுகிறது.

அதில் நம்மாழ்வாரைப் பற்றியும், நம்மாழ்வார் அவதரித்த திருத்தலத்தைப் பற்றியும், அவர் திருஅவதாரம் செய்த  வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தின் பெருமையைப் பற்றியும், இரண்டு

பாசுரங்களும் உண்டு. முதல் பாசுரத்தில்;

ஏரார் வைகாசி விசாகத்தின் ஏற்றத்தை

பாரோர் அறியப்  பகிர்கின்றேன் - சீராரும்

வேதம் தமிழ் செய்த மெய்யன் எழில் குருகை

நாதன் அவதரித்த நாள் என்றும்,

இரண்டாவது பாசுரத்திலே,

உண்டோ வைகாசி விசாகத்திற்கு ஒப்பு ஒருநாள்?

உண்டோ சடகோபர் ஒவ்வொருவர்? -உண்டோ

திருவாய்மொழிக்கு ஒப்பு?தென்குருகைக்குண்டோ  

ஒருபார் தனில் ஒக்கும் ஊர்?

என்றும் போற்றியுள்ளார். உலகியலில் சில நட்சத்திரங்களை நல்ல நட்சத்திரங்கள் என்று சொல்லுகின்றோம். சில மாதங்களைப் புனித மாதங்கள் என்று சொல்லுகின்றோம். சில  ஊர்களை திருத்தலங்கள் என்று சொல்லுகின்றோம். அதற்கு அடிப்படையான காரணம்  என்ன என்பதை ஆராய்ந்தால், அது நட்சத்திரத்தின் பெருமையோ, மாதத்தின்  பெருமையோ, ஊரின் பெருமையோ அல்ல. அந்த நட்சத்திரத்திற்கு பெருமையைத்  தந்ததும், மாதத்திற்குப் பெருமையைத் தந்ததும், ஊருக்கு பெருமையைத் தந்ததும், நம்மாழ்வார் போன்ற மகான்கள், அந்த ஊரில், அந்த நட்சத்திரத்தில்,  அந்த மாதத்தில், அவதரித்ததால்தான் என்பது விளங்கும். ஒரு ஊரில் எத்தனையோ  நபர்கள் பிறப்பார்கள். ஆனால், அங்கே ஒரு சிறப்பான சாதனையாளர் பிறக்கும்பொழுது அந்த ஊருக்கு ஒரு பெருமை சேர்ந்துவிடும்.

அதைத்தான் மணவாளமாமுனிகள் இந்தப் பாசுரத்தில் சுட்டிக்காட்டுகின்றார். ‘‘இதோ  பாருங்கள் இன்றைக்கு வைகாசி விசாகம் வந்துவிட்டது. இந்த விசாகத்திற்கு எத்தனையோ பெருமைகள் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆனால், நம்மாழ்வார் என்கின்ற ஒரு மகான் அவதரித்த பின்னர், அவர் பிறந்த மண்ணும்,  மாதமும், நட்சத்திரமும் தனிச்சிறப்பு பெற்று விட்டன. எனவே அந்த மகானைக் கொண்டாடுகின்ற போது நட்சத்திரத்தையும், மாதத்தையும், ஊரையும் கொண்டாட  வேண்டும் என்று எடுத்துரைக்கிறார். நம்மாழ்வாரின் அவதாரப் பெருமையால்தான்,  அவர் அவதரித்த திருத்தலத்தின் பெருமையும், நட்சத்திரத்தின் பெருமையும்,  மாதத்தின் பெருமையும் சொல்லப்படுகின்றன என்று சொன்னால், அடுத்த கேள்வி எழும்.நம்மாழ்வாருக்கு அப்படி என்ன பெருமை?நம்மாழ்வார் செய்த சாதனை என்ன?

திருக்குருகூரிலே  வேளாளர் குடியில் பிறந்தவர் காரியார். இவருடைய வாழ்க்கைத் துணைவியார் உடைய நங்கை. தான தர்மங்களை வாரி வழங்கிய இத்தம்பதியினர்க்கு வெகுகாலம்  பிள்ளையில்லாத குறை இருந்தது. இருவரும் திருக்குறுங்குடி திவ்ய தேசத்திற்குச் சென்று, நம்பியை தரிசித்து, தங்கள் பிரார்த்தனையைத்  தெரிவித்தனர். அன்று இரவு கோயிலிலேயே தங்கினர். அவர்கள் கனவில் பெருமாள்  எழுந்தருளினார். விரைவில் அவர்களுக்கு புத்திரப்பேறு உண்டாகும் என்றும், அந்தக் குழந்தையால் இந்த வையகம் புகழ் பெறும் என்றும் சோதிவாய் மலர்ந்து  கூறி மறைந்தார்.

விரைவில் அழகான ஆண் மகவொன்று பிறந்தது. பிரமாதி ஆண்டு வைகாசித் திங்கள் பன்னிரண்டாம் நாள் வளர்பிறையில், பௌர்ணமியில்  வெள்ளிக் கிழமை விசாகநட்சத்திரம், கடக லக்கினத்தில் அவதரித்தார் ஆழ்வார். மனமகிழ்ச்சியில் இருந்த பெற்றோருக்கு, நாட்கள் செல்லச் செல்ல மிகுந்த  வருத்தம் உண்டாகிக் கொண்டே வந்தது. காரணம், பிள்ளை சராசரிப்பிள்ளையாக இல்லை. பாலுண்பதில்லை, அழுவதில்லை, மொத்தத்தில் உணர்வற்ற நிலை. காலம் கடந்து பிறந்த பிள்ளை இப்படி இருக்கிறதே என்ற வருத்தத்தில், வரம் கொடுத்தவனிடமே முறையிடுவோம் என்று எண்ணிய தம்பதியினர், நேராக ஆழ்வார் திருநகரி ஆதிப்பிரான் சந்நதிக்குச்சென்றனர்.    

இறைவன் திருமுன் கிடத்தி மனமுருக அந்த மாலவனை வேண்டினர். தெய்வச் சந்நதி முன் ஒரு திருவிளையாடல் அரங்கேறியது.ஜடமாக விழுந்து கிடந்த குழந்தை திடீரென தவழ ஆரம்பித்தது. திருக்கோயில்  பிராகாரத்தை வலம் வந்த குழந்தை அங்கே ஒரு புளிய மரப்பொந்தில் சென்று  அமர்ந்து கொண்டது. அவ்வளவுதான்... அப்படியே யோகத்தில் ஆழ்ந்தது குழந்தை. எதிரில் பெற்றவர்களும் மற்றவர்களும், நிற்பதோ, பார்ப்பதோ, தொடுவதோ, தொட்டு  அசைத்து அழைப்பதோ தெரியவில்லை. இறைவனின் உளக்கருத்தினை அறிய முடியாத பெற்றோர்கள் மனதை தேற்றிக்கொண்டு வீடு திரும்பினர். ஆண்டுகள் கடந்தன. திருக்குருகூருக்குப் பக்கத்துக்கு ஊர் திருக்கோளூர். அங்கே அவதரித்த  மதுரகவியாழ்வார் திருக்குருகூர் வந்தார். புளிய மரத்தடியில் ஜோதி வடிவாய்  சுடர் விட்டு கொண்டிருந்த ஆழ்வாரின் யோக நிலையைக்  கண்டார்.

ஒரு  சிறிய கல்லை எடுத்து அவர் முன் போட்டார். சட்டென்று அந்த ஞானதீபம்  அசைந்தது. மதுரகவியார், “செத்தத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத்தின்று எங்கே கிடக்கும்?” என்று மெதுவாகக் கேட்டார். வகுளாபரணரான  ஆழ்வார் சோதிவாய்  மெல்லத் திறந்து “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்றார். ரீர ஆத்ம சம்பந்தத்தை இத்தனை அழகாகவும், அது உண்மையில் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் இந்த கேள்வி பதிலின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.அடுத்த கணம் வயதில் மூத்தவரான மதுர கவிகள் “அடியேனை  ஏற்றருள வேண்டும்”என்று நம்மாழ்வாரின் திருவடிகளில் வீழ்ந்தார். பிறகு  ஆழ்வார் செந்தமிழால் எம்பெருமானைப் பாட ஆரம்பித்தார். அவற்றை மதுரகவியாழ்வார் ஓலைப்படுத்திக் கொண்டே வந்தார்.

திருவிருத்தம் - 100  பாசுரங்கள், திரு ஆசிரியம் - 7 பாசுரங்கள், பெரிய திருவந்தாதி - 87  பாசுரங்கள், திருவாய் மொழி - 1102. மொத்தம்: 1296 பாசுரங்கள். ஆழ்வார்  நான்கு பிரபந்தங்களை அருளிவிட்டு திருநாடு அலங்கரித்தார். ஆழ்வார்  திருமேனியை திருபுளியிலிருந்து கொண்டு வந்து பக்கத்தில் திருப்பள்ளி  படுத்தி, அதன் மேல் ஆழ்வார் அர்ச்சா திருமேனியை எழுந்தருளப் பண்ணி,  திருக்கோயில் கட்டி உற்சவம் செய்தவர் மதுரகவியாழ்வார். வேதம் தமிழ் செய்த  மெய்யன் எழில் குருகை நாதன் அவதரித்த நாள் என்று இந்த சாதனையைச் சொல்லுகின்றார் மணவாளமாமுனிகள்.

தமிழிலே நான்கு வேதங்களை நான்கு  பிரபந்தங்களாக அருளிச்செய்தார். இது யாரும் செய்யாத சாதனை. திருவரங்கத்து  அமுதனார், ‘‘எய்தற்கு அரிய மறைகளை ஆயிரம் இன் தமிழ் தமிழால் செய்தற்கு  உலகில் வரும் சடகோபன்” என்று இந்த சாதனையைக் கொண்டாடுகிறார். இதற்கு  முன்னால் உலகில் வடமறை (வடமொழி வேதங்கள்) இருந்தது. அதனை இன்னார்தான் ஓத வேண்டும். இப்படித்தான் ஓத வேண்டும், இன்ன காலத்தில்தான் ஓத வேண்டும் என்று  பல கட்டுப்பாடுகள் இருந்தன.

அதனால் அது எல்லோருக்கும்  பொதுவானதாக,புரியும்படியாக, எல்லோருக்கும் பயன்படும் படியாக இல்லை. இக்குறையை வேதம் நீக்கிக் கொள்ள முயன்றது. தன்னைத் தளர்த்திக் கொண்டு எல்லோர் நாவிலும் சொல்லப்படவேண்டும், அதன் மூலமாக இந்த உலகில் பிறந்த  ஒவ்வொருவரும் உய்வு பெற வேண்டும் என்று நினைத்தது.வேதம் தமிழில் தன்னைத்  தகவமைத்துக் கொண்டது.பசுந்தமிழில்  நனைந்து, ஆழ்வாரின் மனதில் புகுந்து, அவர் திருவாக்கில் வெளிப்பட்ட  பெருமையைப் பெற்றது. இதை ஆச்சார்ய ஹ்ருதய சூத்திரம் இப்படிச் சொல்லும்.

“வடமொழி மறை என்றது;

தென் மொழி மறையை நினைத்திறே”

(சூத் .42)

இதுவரை வடமொழி வேதங்கள் என்று சொன்னவர்கள், இந்த நான்கு பிரபந்தங்களையும் தமிழ் வேதங்கள் என்று கொண்டாட ஆரம்பித்தார்கள். அப்படிப்பட்ட பெருமையை வேதங்களுக்கு தந்தவர் சுவாமி நம்மாழ்வார் என்பதால் அவர் அவதாரம் சிறப்புடையதாகிறது. வேதம் இறைவனின் மூச்சுக் காற்று. இதை ஆழ்வார் மூலம்  இறைவன் வெளியிட்டு அருளினான். என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகியஅன்றைக்கு அன்று என்னை தன்னாக்கி என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசனை  ஆதியாய் நின்ற என் சோதியை என் சொல்லி நிற்பனோ? (7-9-1001) எனவே, அவர்  அவதாரமும், அவதார நாளும், நட்சத்திரமும், ஊரும் சிறப்புடையது ஆகிறது.

மெய்யன் என்ற ஒரு வார்த்தையை  இந்தப்  பாசுரத்தில் நம்மாழ்வாருக்குப்  போடுகின்றார். வேதத்திற்கு மெய்ப்பொருள் என்று பெயர். சத்யம் என்று பொருள். நம்மாழ்வார் வேதத்தின் கருத்துக்களை மாறாமல், அதே நேரத்தில் எந்த உலகியல்  பொய்ப்பொருளையும் பாடாமல் வேதம் காட்டுகின்ற விளக்காகிய,  சத்தியமாகின்ற பரமாத்மாவைக் காட்டிக் கொடுத்ததால் இவருக்கு மெய்யன் என்று  பொருள். எது மெய்ப் பொருள்? என்றால் என்றும் இருப்பது எதுவோ அதுவே மெய்ப் பொருள். என்றும் இருப்பவன் யார் என்று சொன்னால் பகவான்தான். அதனால்தான் திருவாய்மொழியை ‘‘பகவத் விஷயம்” என்று பெரியவர்கள் சொன்னார்கள். அடுத்த  வரியை இந்தப் பாசுரத்தில் பாருங்கள்.

‘‘எழில் குருகை நாதன் அவதரித்த  நாள்” என்று வருகிறது. ஒரு மகான் அவதாரம் செய்த ஊர் என்று சொன்னால், அவர் அவதரித்த பிறகு அந்த ஊருக்கு ஒரு தனிஅழகு வந்து விடும். அந்த அழகும் எழிலும் அந்த மகானின் சிறப்பால் வருகிறது. வேதம் தமிழ் செய்ததால்  நம்மாழ்வாருக்கு எழில் வந்தது. நம்மாழ்வாருக்கு எழில் வந்ததால் அவர் அவதரித்த குருகூருக்கும் வந்தது. ‘‘எழில்” என்பது ஆழ்வாருக்கும் அவர்  அவதரித்த ஊருக்கும் பொருந்தும் என்பதால், ‘‘எழில் குருகை நாதன்” என்ற வார்த்தையை மணவாளமாமுனிகள் போட்டார்.

அடுத்த வார்த்தை அவதரித்த ஊர்  என்பது. பிறப்பு என்பது செய்த வினைகளால், கர்மத்தின் விளைவாக வருவது.  அவதாரம் என்றால் உலக மக்களின் மீது கொண்ட கருணையால் வருவது. தன் வினை  தீர்க்க வருவது பிறப்பு. பிறர் வினை தீர்க்க வருவது அவதாரம். நம்மாழ்வார்  தன் வினையை தீர்த்துக்கொள்ள வந்து பிறந்தவர் அல்லவா! உலக மக்களின்  வினைகளைத் தீர்க்க வந்து அவதரித்தவர். நம்மாழ்வார் அவதாரத்துக்கு முன்னால்  அந்த ஊர் இருந்தது. தென்குருகூர் என்று பெயர். அங்குள்ள பெருமாள் ஆதிபிரான்  தான் நாதன் (தலைவன்). நம்மாழ்வாரே

பாடியிருக்கிறார்;

ஒன்றும் தேவும் உலகும் உயிரும்

மற்றும் யாதும் இல்லா

அன்று நான்முகன் தன்னொடு தேவர்

உலகோடு உயிர் படைத்தான்

குன்றம் போல் மணி மாடம் நீடு

திருக்குருகூர் அதனுள்

நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம்நாடுதிரே?

ஆனால், ஆழ்வார் அவதரித்த பின்னால் அந்த ஊருக்கு ‘‘ஆழ்வார் திருநகரி” என்றல்லவா  பெயர் வந்துவிட்டது. இப்போது ஆழ்வாரை முன்னிட்டு கொண்டுதானே ஆதிப் பிரானையே  தரிசனம் செய்கிறார்கள். ஆழ்வாருக்கு முன்னால் ஊருக்கு நாதனான ஆதிப்பிரான் இருந்தார். ஆழ்வார் அவதாரம் செய்த பின்னால் ஆழ்வார்  “நாதன்” ஆனார். இதற்கு முன்னால் பெருமாளுக்கு எத்தனையோ திவ்ய தேசங்கள் இருந்தன. அவை  ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருந்தன. அதைப்போல ஒரு சிறப்பு   திருக்குருகூருக்கும் இருந்தது. ஆனால், ஆழ்வார் அவதாரம் செய்த பின்னால்  ஊரின் பழைய சிறப்புகள் பின் தங்கி விட்டன. இப்போது இரண்டு சிறப்புகள்  சேர்ந்து ஊருக்கு வலிமை சேர்த்தன.

ஒன்று பெருமாளாகிய  ஆதிப்பிரான் இருக்கிறார். அந்த ஆதிப்பிரானை தன்னுடைய தண்டமிழால் நமக்குக்  கொடுத்த ஆழ்வாரும் இருக்கின்றார். அதனால்தான் ‘‘தென்குருகைக்குண்டோ ஒருபார்தனில் ஒக்கும் ஊர்” என்று அடுத்த பாசுரத்தில் மணவாள மாமுனிகள் சொன்னார்.  இந்த உலகமெல்லாம் தேடினாலும் ஆழ்வார் அவதரித்த இந்த ஊருக்கு நிகரான ஊர்  இருக்க முடியுமா? எனவே, வேதம் தமிழ் செய்ததால் ஆழ்வாருக்குச் சிறப்பு. அந்த ஆழ்வார் அவதரித்ததால், திருக்குருகூருக்குச் சிறப்பு.  வைகாசி  மாதத்துக்குச் சிறப்பு. விசாக நட்சத்திரத்துக்கும் சிறப்பு. இத்தனையும்  மனதில் கொண்டு வைகாசி விசாகத்தில், ஆழ்வாரின் பெருமைகளை, திருவாய்மொழி பாசுரம் ஓதிக்கொண்டாடுவோம். ஆழ்வாரின் அருளாசி பெறுவோம்.

மதுரகவிதாசன்

Related Stories: